Published:Updated:

தூக்கியடிக்கப்பட்ட விஜய் ரூபானி... ‘புத்தம் புதிய’ முதல்வர் பூபேந்திர பட்டேல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பூபேந்திர பட்டேல், விஜய் ரூபானி
பூபேந்திர பட்டேல், விஜய் ரூபானி

மாற்றத்துக்குக் காரணம் 2022 சட்டமன்றத் தேர்தலா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. வரும் 2022, டிசம்பர் மாதம் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அங்கு பொறுப்பிலிருந்த பா.ஜ.க முதல்வர் விஜய் ரூபானி அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன?

கடந்த 2016-ல் பா.ஜ.க ஆட்சிபுரிந்த குஜராத்தில் அன்றைய முதல்வராக இருந்த ஆனந்திபென்னை மாற்றிவிட்டு, விஜய் ரூபானியை முதல்வராக நியமித்தது கட்சித் தலைமை. தொடர்ந்து 2017-ல் நடைபெற்ற குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க அரசின் முதல்வராக விஜய் ரூபானி பொறுப்பேற்றார். இப்போது வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது. இன்னும் ஓராண்டு மட்டுமே அங்கு ஆட்சிக்காலம் இருக்கும் நிலையில், பூபேந்திர பட்டேல் புதிய முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தூக்கியடிக்கப்பட்ட விஜய் ரூபானி... ‘புத்தம் புதிய’ முதல்வர் பூபேந்திர பட்டேல்!

இந்த மாற்றத்தின் பின்னணி குறித்து நம்மிடம் விவரித்தார்கள் அரசியல் பார்வையாளர்கள்... “மென்மையான போக்குகொண்டவரான விஜய் ரூபானியால், கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தத் தவறியது உள்ளிட்ட விஷயங்களில் அவரது செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகின. அதனால், அவரது தலைமையில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தால் அது கட்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதால், சில வாரங்களுக்கு முன்பே கட்சித் தலைமை அவரை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டது. ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த அவர், தங்கள் மதப் பண்டிகையான ‘பர்யூஷன்’ முடிந்த பிறகு தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்.

புதிய முதல்வர் பதவிக்கு மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, புருஷோத்தம், எம்.பி சி.ஆர்.பாட்டீல், குஜராத் எம்.எல்.ஏ பூபேந்திர பட்டேல் ஆகியோர் பரிசீலனைப் பட்டியலில் இருந்தார்கள். மோடி, அமித் ஷா ஆகியோருக்கு நெருக்கமானவராக இருந்தாலும், சி.ஆர்.பாட்டீல் மராத்தியர் என்பதால் அவருக்கான வாய்ப்பு குறைந்தது. மன்சுக் மாண்டவியா, புருஷோத்தம் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், பூபேந்திர பட்டேல் முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்” என்றார்கள்.

குஜராத் மாநில அரசியல் விமர்சகரான பிரகாஷ் ஷா நம்மிடம், “குஜராத் சட்டமன்றத்தில் முதன்முறையாக நுழைந்திருக்கும் பூபேந்திர பட்டேலுக்கு முதல்வர் பொறுப்பு கிடைப்பதற்கு, அவருடைய பாடிதார் சமுதாயப் பின்புலமே முக்கியக் காரணம். பூபேந்திர பட்டேல் தலைமையில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தால், பாடிதார் சமுதாய வாக்குகளை முழுமையாக அள்ளலாம் என்று கட்சித் தலைமை நம்புகிறது’’ என்றார்.

ஆனால், விஜய் ரூபானியின் எதிர்முகாமைச் சேர்ந்தவர்களோ, ‘‘விஜய் ரூபானி முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, அதிகாரிகளையோ அமைச்சர்களையோ கலந்தாலோசிக்க மாட்டார். அதனால், அவரது செயல்பாடுகள் ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தின. குஜராத்தில் கடந்த சில வருடங்களாகவே பா.ஜ.க-வின் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதை விஜய் ரூபானியால் மீட்டெடுக்க முடியவில்லை. அவரது தலைமையில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டால், பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்று உளவுத்துறையினர் தலைமைக்கு `நோட்’ அனுப்பிவிட்டனர். அதன் பிறகே புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் அறிவிக்கப்பட்டார்’’ என்றார்கள்.

தூக்கியடிக்கப்பட்ட விஜய் ரூபானி... ‘புத்தம் புதிய’ முதல்வர் பூபேந்திர பட்டேல்!

குஜராத் மாநிலத்தில் நடக்கும் அரசியல் நகர்வுகளை எதிர்க்கட்சியான காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்துவருகிறது. குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் நம்மிடம், ‘‘பூபேந்திர பட்டேலுக்கு அரசு நிர்வாகத்தில் எந்த அனுபவமும் கிடையாது. மோடியும் அமித் ஷாவும் அவரை ஒரு பொம்மையாக மட்டுமே வைத்து அரசியல் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியிலிருந்து பா.ஜ.க-வைக் காப்பாற்ற முடியாது’’ என்றார்.

புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்ட பூபேந்திர பட்டேல், ‘‘முதல்வராகத் தேர்வு செய்யப்படுவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எல்லோரையும்போலத்தான் நானும் புதிய முதல்வரைத் தேர்வுசெய்யும் கூட்டத்தில் பங்கேற்றேன். அங்கே என்னைத் தேர்வுசெய்ததை நம்பவே முடியவில்லை’’ என்கிறார்.

விஜய் ரூபானியோ, “கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று, பதவி விலகினேன். அடுத்து எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வேன். ஒருவேளை என்னை முழு நேரம் கட்சிப் பணியாற்றுமாறு தலைமை கேட்டுக்கொண்டாலும், சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்வேன்” என்று தன்னடக்கத்துடன் கூறியிருக்கிறார்.

குஜராத்தின் 17-வது முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் பூபேந்திர பட்டேலுக்கு இனிமேல்தான் சவாலே இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு