Election bannerElection banner
Published:Updated:

குஜராத் மாடல்: `25 வருட ஆட்சியில் ஒரு மருத்துவமனைகூட கட்டவில்லை!’ - விமர்சிக்கும் காங்கிரஸ்

மோடி
மோடி

குஜராத்தில் 13 வருடங்கள் நரேந்திர மோடிதான் முதல்வராகப் பதவியிலிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுக்கால ஆட்சியில் பாஜக ஒரே ஒரு மருத்துவமனையைக்கூட இங்கு கட்டவில்லை. இதில் `குஜராத் மாடல்' புராணம் பாடிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது - காங்கிரஸ்

இந்தியாவில் நாளுக்கு நாள் உச்சம் தொட்டுவரும் கொரோனா பாதிப்புகளும், கொரோனா மரணங்களும் நாட்டு மக்களை மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. எங்கு திரும்பினும், கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நீக்கமற நிறைந்திருக்கிறது. தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றால் பல மாநிலங்களில் மயானங்கள் இரவு பகலாக எரிந்துகொண்டிருப்பதை நம்மால் காணமுடிகிறது. முதலாம் அலையைத் திக்கித் திணறிச் சமாளித்த மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது கொரோனா இரண்டாம் அலை.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

முன்னெப்போதும் இல்லாத அசாதாரண சூழலை இந்தியா எதிர்கொண்டுவருகிறது. பல மாநிலங்களில் நிலைமை கைமீறிச் சென்றுவிட்டது என்றே சொல்லலாம். இதுவரை, `கொரோனாவை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம்’ என்று கூறிவந்த மத்திய அரசு, தற்போது கொரோனாவுக்கு முழுப் பொறுப்பு மாநில அரசுகள்தான் என்று கூறியிருக்கிறது. நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் சமீபமாக மேலோங்கி ஒலித்துவருகின்றன. ஒற்றை வார்த்தையைவைத்தே மத்தியில் ஆட்சியைப் பிடித்த பாஜக-வின் `குஜராத் மாடல்' வெற்று விளம்பரத்தைத் தவிர ஒன்றுமில்லை என்று கடுமையாகச் சாடியிருக்கிறது குஜராத் காங்கிரஸ்.

பிரதமர் பிறந்த மாநிலம், அவர் 13 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சிசெய்த மாநிலம். இன்று அவர் பிரதமர் அரியணையில் இருப்பதற்கு முக்கியக் காரணமான மாநிலம். இப்படி பாஜக-வின் அசுர வளர்ச்சிக்கு அவர்கள் பயன்படுத்திய வெற்று விளம்பர மந்திரம்தான் மோடியின் 'குஜராத் மாடல்' என்று கொதித்திருக்கிறார் குஜராத் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ராஜீவ் சதவ்.

நேற்றைய தினம் குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இணையவழிக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். கூட்டத்தில் பேசிய ராஜீவ், ``குஜராத்தில் நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. கடந்த 2014 லோக் சபா தேர்தலில் மோடி, `குஜராத் மாடலை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி நாட்டை வளர்ச்சியின் பாதையில் வழிநடத்துவோம்’ என்று கூறியிருந்தார். ஆனால், அப்போது நாட்டு மக்களுக்கு `குஜராத் மாடல்' என்றால் என்னவென்று புரியவில்லை. இப்போது அனைவருக்கும் புரிந்துவிட்டது, குஜராத் மாடல் என்றால் வெறும் விளம்பரம்தான் என்று. பிரதமர் மோடி குஜராத் மாடல்... குஜராத் மாடல் என்று புராணம் பாடுவார். ஆனால், அதன் மூலம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இம்மியளவும் எதுவும் செய்ய மாட்டார்.

குஜராத் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ராஜீவ்
குஜராத் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ராஜீவ்

பிரதமரின் மாநிலமான குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் பாஜக-தான் இருந்துவருகிறது. அதில், 13 வருடங்கள் நரேந்திர மோடிதான் முதல்வராகப் பதவியிலிருந்தார். ஆனால், அவர்களின் இத்தனை ஆண்டுக்கால ஆட்சியில் குஜராத்தில் ஒரே ஒரு மருத்துவமனையைக்கூட அவர்கள் கட்டவில்லை. நான் மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சென்ட்ரல் விஸ்டா, புல்லட் ரயில், போர் விமானம் வாங்குவது என எல்லாவற்றையும் சிறிது காலம் நிறுத்திவிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி வழங்குவது குறித்து அரசாங்கம் யோசிக்க வேண்டும்.

இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. காங்கிரஸ் இந்தச் சூழலில் பாஜக-வைவிடப் பல மடங்கு உத்வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் முதல் அலை தீவிரமானதற்குக் காரணம் மோடியின் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி. அதேபோல் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதற்கு அமித் ஷா மகன், ஜெய் ஷாவின் 'நமஸ்தே ஸ்டம்ப்' தான் காரணம். குஜராத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளம்தான் இத்தனை ஆண்டுகளில் பெருகியிருக்கிறது. இன்னும்கூட குஜராத்தின் 14 மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் சி.டி ஸ்கேன் எடுக்கும் வசதிகள் இல்லை. மாநிலம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடும் கடுமையாக நிலவிவருகிறது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
ஆக்ஸிஜன் பற்றாக்குறை

பல இடங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் உடல்களைத் தகனம் செய்வதற்கு 8-10 மணி நேரம் வரை உறவினர்கள் காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் மருத்துவக் கூட்டமைப்பு, நிலைமை மிகவும் மோசமடைந்துவருகிறது. அதன் காரணமாக, கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது. இந்தநிலையில், குஜராத்தை வைத்துக்கொண்டு எங்கு சென்றாலும் `குஜராத் மாடல்... குஜராத் மாடல்’ என்று புராணம் பாடிக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது’’ என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ராஜீவ் மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு