Published:Updated:

மார்ச் மாதத்தில் இருந்து எட்டு எம்.எல்.ஏ-க்கள் விலகல்... என்ன நடக்கிறது குஜராத் காங்கிரஸில்?

Congress
Congress ( Photo: Twitter / INCIndia )

பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி விலகி வரும் நிலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சமீப நாள்களில் அடுத்தடுத்து மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் மாநிலங்களவை (ராஜ்ய சபா) உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. அடுத்த பதவிக்காலத்துக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் - பா.ஜ.க இரு கட்சிகளிடையேயும் யார் அதிக இடங்களைப் பிடிப்பது என்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது. மக்களவையில் பெரும்பான்மையாக சர்வ வல்லமையுடன் அதிகாரம் செலுத்தும் பாரதிய ஜனதா கட்சி, எதிர்க்கட்சிகளோடு ஒப்பிடும்போது மாநிலங்களவையில் குறைந்த இடங்களையே பெற்றுள்ளது. அப்படியிருக்கையில், புதிய சட்டங்கள், அடியொற்றிய விவாதங்கள் போன்றவற்றை மாநிலங்களவையிலும் முழுமையாக அமல்படுத்த தன் இடத்தை தக்கவைப்பதும், அதிகப்படுத்துவதும் அவசியமாகிறது. ஆதலால், தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில், நேரடி தேர்தலைவிடப் பரபரப்பாகவும், அதையொட்டி பல ஆச்சர்ய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி விலகி வரும் நிலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சமீப நாள்களில் அடுத்தடுத்து மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சி துயரில் ஆழ்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 182. ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு 37 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு என்ற அளவீட்டின்படி நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில், மூன்று பா.ஜ.க உறுப்பினர்களும், ஒரு காங்கிரஸ் உறுப்பினரும் தற்போது உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் கடந்த 20 வருடங்கள் இல்லாத அளவுக்கு 81 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ், பெரும்பான்மை எதிர்க்கட்சியாகப் பொறுப்பேற்றது. பா.ஜ.க 103 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆதலால், மாநிலங்களைவைக்கு பா.ஜ.க - காங்கிரஸ் இரு கட்சியாலும் தலா இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தற்போது மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் பா.ஜ.க, அதை இழக்க விரும்பாமல், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் அரசியல் விளையாட்டைத் தொடங்கியது. கடந்த மார்ச் 26-ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நாளாக அறிவிக்கப்பட்டது. மூன்றாம் நிலை உறுப்பினர்களை தன் பக்கம் இழுப்பது, எதிரணியினரை பிளவுபடுத்துவது என வியூகம் அமைக்கப்பட்டது. அபய் பர்த்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமீன் என்ற மூவரும் திட்டத்தின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் நர்ஹாரி அமீன் என்றவர் ஏற்கெனவே காங்கிரஸில் துணை முதல்வர் வரை மூத்த பதவியிலிருந்த பிறகு, பா.ஜ.க-வில் சேர்ந்தவர்.

PM Modi
PM Modi

அப்போதிருந்து, 73 சட்டமன்ற உறுப்பினர்களில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களைப் பெற முடியாது என்று காங்கிரஸ் உணர்ந்திருந்தது. சிலர் பா.ஜ.க-வுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த தலைமை, வாக்கெடுப்பில் மாற்றி வாக்களித்துவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே இருந்தது. அதனாலேயே, வேட்பாளர் குறித்து பிரச்னை எழாமல் இருக்க, வேட்புமனுத் தாக்கலுக்கு இறுதி நாளான மார்ச் 13 வரை நான்கு வேட்பாளர்களின் பெயரை முறையாக வெளியிடவில்லை. சந்தேகத்திற்குரிய 14 பேரை, தான் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் நகர சொகுசு விடுதியில் பாதுகாத்து வைத்தது. இருந்தும் ஐந்து பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பிறகு, கொரோனா நோய்த்தொற்று காரணமாகத் தேர்தல் நாள் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது, ஜூன் 19-ம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டவுடன், காங்கிரஸ் தன் பிரதிநிதிகளின் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் மீண்டும் இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் பதவி விலகலைச் சபாநாயகர் `ராஜேந்திர திரிவேடி' ஏற்றுக்கொண்டுள்ளார். கர்ஜன் தொகுதியின் அக்ஷய் படேல் பதவி விலகியவுடன், கபார்டா தொகுதியின் ஜித்து சவுதாரி கட்சியிடம் எந்த தொடர்புமில்லாமல் துண்டித்துக்கொண்டார். பிறகுதான், அவரும் விலகிவிட்டார் என்று கட்சிக்குத் தெரியவந்தது. இந்த பரபரப்பு அடங்கும் முன், ஜூன் 5 அன்று மோர்பி தொகுதியின் பிரிஜேஷ் மிர்ஜா ராஜினாமா செய்துள்ளார்.

15,106 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் எல்லைகளில் என்ன நடக்கிறது ? - ஒரு விரிவான அலசல்!

`இரண்டு எம்.எல்.ஏ-க்கள் வரிசையில் மூன்றாவது நபர் வெளியேறுவார் என்று உறுதிபடுத்தினோம். அது நினைத்ததுதான். மற்ற மாநிலங்களிலேயே இத்தகைய காரியங்களைச் சுலபமாகச் செய்யும்போது, அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்தில் இதெல்லாம் எம்மாத்திரம்' என்று காங்கிரஸ் தலைவரொருவர் கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதத்திலிருந்து தனது எட்டு சட்டமன்ற உறுப்பினர்களை இழந்துவிட்டது காங்கிரஸ். `இந்தப் பேரழிவு காலத்திலும் குஜராத்தின் மருத்துவ வசதிகளை மேம்படுத்த விரும்பாத பா.ஜ.க அரசு, பணங்களை செலவு செய்து எம்.எல்.ஏ-க்களை வாங்கிக்கொண்டிருக்கிறது. இதன்மூலம், பா.ஜ.க-வின் நோக்கம் ஆட்சியதிகாரம் மட்டுமே தவிர, கஷ்டப்படும் மக்களுக்கான நலனில்லை' என்று கூறுகிறார் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சடவ். ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலொட் கூறும்போது, `பா.ஜ.க தனக்குப் பரிச்சயமான குதிரை பேரத்தை இன்று குஜராத்தில் நிகழ்த்துகிறது. எதிர்க்கட்சியினர்களுக்கு ஆசைவார்த்தை காட்டி நயவஞ்சக முறையில் கொக்கியிடும் அதன் செயல், தாம் வெற்றிபெற எந்த எல்லைக்கும் செல்வேன் என்று காட்டியுள்ளது' என்று விமர்சித்துள்ளார்.

சமீப நிலவரப்படி 65 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ், இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. 103 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க, பழங்குடியின தலைவர் `சோட்டு வசவாவின்' பி.டி.பி கட்சியின் இரண்டு, என்.சி.பி கட்சியின் ஓர் உறுப்பினர் என 106 உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. இன்னும் ஐந்து பேர் உறுதியாகும் நிலையில் தனது மூன்று மாநிலங்களவை இடங்களையும் தக்கவைக்கும்.

கமல்நாத்
கமல்நாத்

மாநிலங்களவை தேர்தல் நடக்கும் மற்றொரு மாநிலமான மத்தியப் பிரதேசத்திலும் இதே நிலையே நீடித்து வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறிய வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத், `பா.ஜ.க-வின் சிவ்ராஜ் சிங் சவுகானும், நரோட்டம் மிஷ்ராவும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 25லிருந்து 35 கோடி வரை ஆட்சியைக் கலைக்கப் பேரம் பேசுகிறார்கள்' என்று கூறினார். காங்கிரஸ் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் கூறும்போது, `எம்.எல்.ஏ-க்களிடம் மூன்று கட்ட பேரம் பேசப்படுகிறது. முதல் தவணையாக 5 கோடி பெற்றுக்கொண்டு நடப்பிலிருக்கும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும். இரண்டாம் தவணையில் மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரிக்க வேண்டும், மூன்றாம் கட்டம் நம்பிக்கை வாக்கெடுப்பில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

கடந்த மார்ச் மாதம் காங்கிரஸின் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவை ஆதரித்தனர். கமல்நாத் ஆட்சி கலைக்கப்பட்டது. கொரோனா நெருக்கடி காலத்தில் முதலமைச்சராகப் பதவியேற்றார் சிவ்ராஜ் சிங் சவுஹான். மாநிலங்களவைத் தேர்தலிலும் இதன் எதிரொலி முக்கிய பங்காற்றுகின்றன.

2014-ம் ஆண்டு மோடி அலையின் மூலம் பா.ஜ.க வெற்றிபெற்ற பிறகு, அதன் தாக்கம் அடுத்தடுத்த தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்தது. இந்த மோடி அலை தோல்வியுற்ற இடங்களிலெல்லாம், மாற்றாக `குதிரை பேரம்' என்ற சர்ச்சை உருவெடுக்க ஆரம்பித்தது. கடந்த கோவா, கர்நாடகா மாநில தேர்தல்களை உதாரணமாகக் கூறலாம். அரசியல் கொள்கை, ஒரு கட்சியின் நிலைப்பாடு போன்றவற்றின் அடிப்படையில் மக்கள் தேர்ந்தெடுக்கையில், அதை அவமதிக்கும் விதமாகப் பிரதிநிதிகளைப் பரிவர்த்தனை செய்துகொள்வதற்கு எதிர்ப்பு எழுந்தது. அரசியல் அகராதியில் இது இயல்புதான் என்ற சூழ்நிலையில்தான், `நாங்கள் ஒன்றும் துறவி அல்ல' என்று இன்றைய கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கூறினார்.

குதிரை பேரம் வெளிப்படையாகக் கடந்த மகாராஷ்டிரா தேர்தலில் உடைபட்டது. பா.ஜ.க - சிவசேனா கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற நிலையில், முதல்வர் வேட்பாளருக்கு இருகட்சிக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. `தன் அதிகாரத்தைப் பெருக்கிக்கொள்ள பா.ஜ.க எங்கள் எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசுகிறது' என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பிறகு, ஒரு வழியாக சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைய, `இது வெற்றிகரமாக நீடிக்க வாய்ப்பில்லை' என பா.ஜ.க முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறினார்.

`நாங்கள் விரைவில் 119 எம்.எல்.ஏ-க்களை கொண்டு ஆட்சியமைப்போம்' என்று மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க தலைவர் சந்திராகாந்த் பாட்டில் குறிப்பிட்டார். `வெறும் 105 எம்.எல்.ஏ-க்களுடன் சிறுபான்மையாக இருக்கும்போது, பிறகெப்படி ஆட்சி அமைப்பார்கள். ஆக, அவர்களின் குதிரை பேர எண்ணம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது' என்று சிவசேனா குற்றம் சாட்டியது. இதில் முரண் என்னவெனில் சிவசேனா சில நாள்கள் முன்புவரை பா.ஜ.க கூட்டணியிலிருந்தது. ஜார்க்கண்ட் தேர்தலின்போது வெற்றிபெற்ற `ஜார்க்கண்ட் முக்தி மோச்சா' தலைவர் ஹேமந்த் சோரனும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Srinivasan
Srinivasan

இதுகுறித்து பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர், பேராசிரியர் சீனிவாசனிடம் பேசினோம்,

``இந்தக் குற்றச்சாட்டை இரண்டு விதத்தில் பார்க்கலாம். ஒன்று காங்கிரஸ் சொல்லும்படி குதிரை பேரம் என்பதை ஒப்புக்கொண்டாலும் அதை இந்திய அரசியலில் தொடங்கி வைத்தது யார்... காங்கிரஸ் கட்சி தொடர்ந்து நிகழத்திவந்த குதிரை பேரம் இன்று அதற்கு எதிராகத் திரும்பியுள்ளது. காங்கிரஸ் செய்த வினையைத்தான் இன்று அனுபவிக்கிறது. இரண்டாவது, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இயல்பாக பா.ஜ.க-வில் இணைய விரும்புகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகச் செய்து வருகிறார்கள். சரியாகத் தேர்தல் சமயத்தில் இந்த விருப்பம் ஏன் நடைபெறுகிறது என்று கேட்டால், இக்காலம் அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது. சாதாரண நேரத்தில் கட்சியிலிருந்து விலகும்போது பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. தற்போது ராஜினாமா செய்யும் யாரும் தேர்தலின்போது திடீரென்று எதிர்க்கட்சிக்கு மாற்றி வாக்களிக்கும் ரகசிய வேலைகளில் ஈடுபடவில்லை. தங்களை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு விலகுகிறார்கள். இது, அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தையும் நேர்மையையும் குறிக்கிறது. இங்கு, குதிரை பேரத்துக்கு அவசியமில்லை' என்று கூறினார்.

பா.ஜ.க தலைவர்கள் பல சூழ்நிலைகளில் தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். குதிரை பேரம் என்பது தேர்தல் கலாசாரத்திலேயே இல்லை என்று கூறியிருக்கிறார்கள். அதேநேரத்தில், உயர்மட்டத் தலைவர்கள் இச்சூழ்நிலையில் கருத்து ஏதும் சொல்லாமல் இருந்து வருகிறார்கள். இவை மற்றொருபுறம், ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற நிகழ்வுகள் `சாணக்கியத்தனம்' என்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில்தான் சென்ற ஆண்டு பிரதமர் மோடியே ஒருமுறை மேற்குவங்க மாநில நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில், `திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 40 பேர் என்னிடமும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார்கள்' என்று பேசி அதிர்ச்சியை உண்டாக்கினார். இந்திய வரலாற்றில் எந்தப் பிரதமரும் சட்ட விரோதமான செயல்களை இதுபோல் வெளிப்படையாகப் பேசியதில்லை என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடியின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

ஒவ்வொரு தேர்தலின்போதும் குதிரை பேரம், நடைமுறைகளில் ஒன்றாக நிகழ்ந்து வருகிறது. மக்களின் பிரதிநிதித்துவம் மீதான அதிகாரம், ஜனநாயக பரிந்துரைகளின் மீறலாக உருவெடுக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு