Published:Updated:

குஜராத் மாடல் Vs டெல்லி மாடல்... கெஜ்ரிவால் வருகையால் மாறும் குஜராத் தேர்தல் களம்!

அரவிந்த் கெஜ்ரிவால்

வருகிற டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் குஜராத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் வருகை பல அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

குஜராத் மாடல் Vs டெல்லி மாடல்... கெஜ்ரிவால் வருகையால் மாறும் குஜராத் தேர்தல் களம்!

வருகிற டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் குஜராத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் வருகை பல அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக பா.ஜ.க-வின் ஆளுகையில் இருந்துவருகிறது. இதில், `இவருக்கு நிகரான தலைவர்களே இந்தியாவில் இல்லை’ என்று பா.ஜ.க-வினரால் சொல்லப்படும் பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள் இருந்தார். அவரின் ஆட்சியில் இந்தியாவிலேயே மிகப்பெரிய வளர்ச்சியை குஜராத் அடைந்ததாக பா.ஜ.க-வினர் சொன்னார்கள். ‘குஜராத் மாடல்’ என்ற பிரசாரம் பா.ஜ.க-வினரால் முன்னெடுக்கப்பட்டது. அதுதான், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு அடித்தளமாகவும் இருந்தது.

 மோடி
மோடி

பிரதமரான பிறகும் தன் சொந்த மாநிலமான குஜராத்துக்கு மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். ஆனாலும், மோடி முதல்வராக இருந்த நேரத்தில் குஜராத்துக்கு இருந்த ‘பூம்’ இப்போது இல்லை. மோடிக்குப் பிறகு முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி, தற்போதைய முதல்வர் பூபேந்திரபாய் படேல் ஆகியோர் மோடி அளவுக்கு சோபிக்கவில்லை என்பதைக் காண முடிகிறது. இந்த சூழலில்தான், சட்டமன்றத் தேர்தலை இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் எதிர்கொள்ளவிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், எதிர்க் கட்சியான காங்கிரஸ் 77 இடங்களைப் பெற்றது. சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி அந்தஸ்த்தை காங்கிரஸ் பெற்றுவிட்டாலும், மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் காங்கிரஸுக்கு அங்கு இல்லை. இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் அரசியலில் என்ட்ரியைக் கொடுத்திருக்கிறார். இவர் வருகை குஜராத் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸை எளிதாக எதிர்கொண்டு பழக்கப்பட்ட பா.ஜ.க-வுக்கு, புதிய சவாலாக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்திருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

“கடந்த 25 ஆண்டுகளாக குஜராத்தில் பா.ஜ.க ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள் மோடிதான் இருந்தார். ஆனால், பா.ஜ.க-வால் குஜராத்தில் ஏழ்மையை ஒழிக்க முடியவில்லை’’ என்று பிரசாரத்தை ஆம் ஆத்மி முன்னெடுக்கிறது. ``25 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியிலிருந்தும் குஜராத்தில் ஊழல் ஒழியவில்லை’’ என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகிறார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த புதிய அரசியல் சூழலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இலவசத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் குஜராத் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.

குஜராத்தில் பா.ஜ.க அரசின் பலவீனங்களையும், அந்த அரசு செய்யத் தவறிய விஷயங்களையும் பட்டியல் தயாரித்து, அவற்றை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கான களப்பணியில் எதிர்க் கட்சியினரும், பா.ஜ.க எதிர்ப்பாளர்களும் களமிறங்கியிருக்கிறார்கள். எனவே, பா.ஜ.க-வும் தனது உத்தியை இந்த தேர்தலில் மாற்றுவதாக செய்திகள் வருகின்றன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சாதி, மதம் சார்ந்த உத்திகளைக் குறைத்துக்கொண்டு, மாநிலத்தில் பா.ஜ.க அரசு மேற்கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல பா.ஜ.க-வினர் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரைக் கொண்டு குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களை நடத்த பா.ஜ.க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இத்தகைய அரசியல் சூழலில்தான், ‘இலவசங்கள்’ பற்றி விவாதங்கள் பரபரக்கின்றன. குஜராத் அரசியலில் களமிறங்கும் அரவிந்த் கெஜ்ரிவால், ஏற்கெனவே டெல்லியில் பல்வேறு இலவசத் திட்டங்களைச் செயல்படுத்திவருபவர். இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகள்தான் டெல்லியில் அவர் ஆட்சியைப் பிடிக்க கைகொடுத்தது.

அமித் ஷா
அமித் ஷா

அதேபோல, கடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும் பெண்களுக்கு ரூ.1,000 மாத உதவித்தொகை உட்பட பல வாக்குறுதிகளை வழங்கிய ஆம் ஆத்மி, அங்கு ஆட்சியைப் பிடித்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் தனது பாணியில் ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும். அது, வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தைச் சார்ந்து, பா.ஜ.க-வின் வெற்றி அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள். “பா.ஜ.க-வின் ஆணவத்தை முறியடிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள்” என்று குஜராத் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஏற்கெனவே, இந்தியாவின் ‘வைர நகரம்’ என்று வர்ணிக்கப்படும் சூரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், 27 வார்டுகளைக் ஆம் ஆத்மி கைப்பற்றியது. “குஜராத் முழுவதும் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், 58 இடங்களில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது’’ என்று ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா எம்.பி-யான சந்தீப் பதக் கூறியிருக்கிறார். கிராமப்புறங்களில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களும், நகர்ப்புறங்களைச் சேர்ந்த நடுத்தரவர்க்கத்தினரும் ஆம் ஆத்மிக்கு பெருவாரியான ஆதரவை வழங்குவார்கள் என்று ஆம் ஆத்மி எதிர்பார்க்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தை ஆம் ஆத்மி குறிவைக்கிறது என்பதை முன்கூட்டியே அறிந்த காரணத்தால்தான், இலவசங்களுக்கு எதிரான பிரசாரத்தை பா.ஜ.க முன்னெடுக்கத் தொடங்கியதா என்கிற கேள்வி இப்போது எழுகிறது. இலவசங்களுக்கு எதிராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மக்களுக்கு இலவசங்களை வழங்கக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. எனவே, இலவசங்கள் தொடர்பான ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதிகள், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் சூழலில், அதை பா.ஜ.க எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.