Published:Updated:

குஜராத் தேர்தல்: ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி வரிசையில்... யார் இந்த அல்பேஷ் தாகூர்?

அல்பேஷ் தாகூர்

கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அல்பேஷ் தாகூர் இந்தமுறை பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

குஜராத் தேர்தல்: ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி வரிசையில்... யார் இந்த அல்பேஷ் தாகூர்?

கடந்த முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அல்பேஷ் தாகூர் இந்தமுறை பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

Published:Updated:
அல்பேஷ் தாகூர்

கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாக குஜராத் அரசியல் களத்தைக் கலக்கிய மூன்று இளைஞர்களும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கின்றனர். அவர்களில் கடந்த பொதுத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜிக்னேஷ் மேவானி, இந்த முறை காங்கிரஸ் சார்பிலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அல்பேஷ் தாகூர் (Alpesh Thakor), ஹர்திக் பட்டேல் ஆகியோர் இந்த முறை பாஜக சார்பிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி
குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி
twitter

182 தொகுதிகளைக்கொண்ட குஜராத்தில் டிசம்பர் 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடையே மும்முனைப் போட்டி நிலவியது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் வரலாறு காணாத வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது பாஜக. இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிராகத் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்த மூன்று இளைஞர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கின்றனர். அவர்களில், ஜிக்னேஷ் மேவானி குஜராத்தின் வட்கம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு 94,765 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார். பாஜக சார்பில் போட்டியிட்ட ஹர்திக் பட்டேல் விராம்காம் தொகுதியில் 51,555 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். மூவரில் மற்றொருவரான அல்பேஷ் தாகூர் காந்தி நகர் தெற்குத் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹிமான்சு படேலை 43,064 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்.

யார் இந்த அல்பேஷ் தாகூர்?

2016-17 காலகட்டத்தில் ஓ.பி.சி., எஸ்,எஸ்.டி மக்களை இணைத்து ஓ.எஸ்.எஸ் ஏக்தா மாஞ்ச் என்கிற அமைப்பை உருவாக்கியதன் மூலம் குஜராத் அரசியல் களத்தில் லைம்லட்டுக்கு வந்தவர் அல்பேஷ் தாகூர். இவர் குஜராத்தில் பட்டிதர் சமூக மக்கள் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்துக்கு எதிராகப் பேரணிகளை நடத்தியவர். 2011-ம் ஆண்டிலேயே குஜராத் ஷத்திரிய தாக்கூர் சேனா என்கிற அமைப்பைத் தொடங்கி நடத்திவந்த தாகூர், மதுவுக்கு எதிரான பிரசாரங்களையும் முன்னெடுத்துவந்தார். 2017-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் ராதன்பூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். தவிர, பாஜக-வுக்கு எதிராக மிகத் தீவிரமான பிரசாரங்களையும் முன்னெடுத்தார்.

அல்பேஷ் தாகூர்
அல்பேஷ் தாகூர்

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய மரியாதையில்லை என அந்தக் கட்சியிலிருந்து 2019-ல் தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார் தாகூர். தொடர்ந்து, பாஜக-வில் இணைந்தவர், மீண்டும் ராதன்பூர் தொகுதியில் இடைத் தேர்தலில் போட்டியிட்டு 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த நிலையில், தற்போது காந்தி நகர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட அல்பேஷ் தாகூர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹிமான்சு படேலை 43,064 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். இந்தத் தொகுதியில் ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாம்புஜி தாகூருக்கு பதிலாக அல்பேஷுக்கு இடம் கொடுக்கப்பட்டது. இந்தத் தொகுதி பாஜக மிகவும் வலுவாக இருக்கும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு முன்பாக, ``குஜராத் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு எந்தச் சவாலும் இல்லை. கடந்தகாலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி இங்கு தாமரை மட்டுமே வெற்றிபெறும். கண்டிப்பாக நாங்கள் 150-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறுவோம்'' எனப் பேசியிருந்தார் அல்பேஷ் தாகூர். மேலும், ``காங்கிரஸுக்கு இங்கே அடிப்படைக் கட்டமைப்பே கிடையாது. காங்கிரஸ் தலைவர்களுக்குத் தங்களுக்குள் அடித்துக்கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கும்'' என காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்திருந்தார்.