Published:Updated:

அகமதாபாத் சுவர் அரசியல்... எதிர்ப்பும், மறுப்பும்!

workers construct a wall in front of a slum in Ahmedabad
workers construct a wall in front of a slum in Ahmedabad ( AP / Ajit Solanki )

மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, `வைப்ரண்ட் குஜராத்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இரும்புத்தகடுகள் வைத்து இந்தப் பகுதி மறைக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக பிப் 24-ம் தேதி இந்தியா வருகின்றனர். இந்தப் பயணம், குஜராத் மற்றும் மோடி அரசின் அலங்கார செலவுகள் காரணமாக தற்போது சர்சையாகிவருகிறது. ட்ரம்ப், டெல்லி மற்றும் குஜராத் மாநிலத்தில் சில முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு செப் 22-ம் தேதி, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், 50 ஆயிரம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் ட்ரம்ப்பும், மோடியும் இணைந்து `ஹௌடி மோடி’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர். ஹௌடி மோடி என்றால் எப்படி இருக்கிறீர்கள் மோடி என்பது அர்த்தம். இதேபோல இப்போது குஜராத்தில் ட்ரம்ப்பை வரவேற்க `நமஸ்தே ட்ரம்ப்' என்ற நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்

இந்த நிகழ்ச்சி, மொதேரா பகுதியில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையைப் பதிவுசெய்துள்ள இந்த மைதானத்தை ட்ரம்ப் திறந்துவைத்து உரை நிகழ்த்துவார்.

ஒரே சமயத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமரும் வசதி இங்கு உள்ளது. இதில் சர்ச்சையான முதல் விஷயம் சுவர். அகமதாபாத்தில் சர்வதேச விமான நிலையத்தை அடுத்துள்ள, இந்திரா மேம்பாலத்தின் அருகே இருக்கும் சரணியவாஸ் அல்லது தேவ் சரண் எனும் குடிசைப்பகுதியை மறைக்க, அரை கிலோமீட்டர் நீளத்திற்கு சாலையுடன் சேர்த்து தடுப்புச் சுவர் கட்டும் பணியில் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஈடுபட்டுள்ளது. சுமார் ஏழு அடி உயரத்தில் எழுப்பப்படும் இந்தச் சுவர்கள், சாலையிலிருந்து குடிசைப்பகுதிகள் தெரியாத வண்ணம் கட்டப்படுகின்றன.

அந்தப் பகுதியில், 500-க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2,500 -க்கும் மேற்பட்டோர், இரண்டு மூன்று தலைமுறைகளாக இங்கு வாழ்ந்துவருகின்றனர். இவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்கள். மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, `வைப்ரண்ட் குஜராத்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இரும்புத்தகடுகள் வைத்து இந்தப் பகுதி மறைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரநிதிகள் வந்திருந்தனர். எப்போதெல்லாம் வெளிநாட்டு விருந்தினர்கள் வருகின்றனரோ, அப்போதெல்லாம் இந்தப் பகுதியில் வாழும் மக்களை தற்காலிகமாக துணி போட்டு மறைத்துவந்தனர்.

எழுப்பப்படும் சுவர்
எழுப்பப்படும் சுவர்

இப்போது துணியை அகற்றிவிட்டு, இரும்புத்தகடுகளையும் நீக்கி நிரந்தரமாக செங்கல், சிமென்ட் வைத்து சுவர் எழுப்பியுள்ளனர். 600 மீட்டர் நீளம் கொண்ட இந்தச் சுவரை எழுப்ப, சில கோடிகள் செலவு செய்துள்ளனர். ட்ரம்ப், மெக்ஸிகோ நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்க ஏராளமான கோடிகளைக் கொட்டி ராட்சத சுவர் எழுப்பி வருபவர். அவராவது, அயல் நாட்டினர் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்க சுவர் எழுப்பி வருகிறார். குஜராத்தில், சட்டபூர்வமாக சேரிப்பகுதியில் வாழும் சக குடிமகன்களை சுவர் எழுப்பி மறைக்கும் கொடுமை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் செல்லும் ட்ரம்ப், காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கும் சென்று பார்வையிட உள்ளார். அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி, சுவர்களில் ஓவியம் வரைவது, சாலைகளை மேம்படுத்துவது, சாலை ஓரங்களில் பூச்செடிகள் வைப்பது என அகமதாபாத்தை அலங்கரிக்கும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குஜராத்தில், ட்ரம்ப் இருக்கப்போவது மூன்று மணி நேரம்தான். எளிமையான வாழ்க்கையைப் போதித்த மகாத்மா காந்தி வாழ்ந்த மண்ணுக்கு வருகைதரும் ட்ரம்ப்புக்கு கோடிகளைக் கொட்டி வரவேற்கும் குஜராத் மற்றும் மத்திய அரசின் அணுகுமுறை, கடும் விமர்சனங்களைச் சந்தித்துவருகிறது. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அங்கே அலங்காரங்கள் தொடர்கின்றன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப்பின் குஜராத் பயணத்துக்காக ரூ.100 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கி, தண்ணீர் போல தாரளமாக காசு செலவழிக்கப்படுவதும்கூட அங்குள்ள ஏழை மக்களின் கண்களில் இருந்து மறைக்கப்படுகின்றன. அதேநேரம், குடிதண்ணீர் மற்றும் அடிப்படை பிரச்னைகளில் அங்குள்ள மக்கள் அல்லல்பட்டுவருவது தேசத்தின் கண்களில் இருந்தும் மறைக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர்.

மக்களின் ஏழ்மை நிலையை அமெரிக்க அதிபர் பார்க்கக்கூடாது என்பதற்காக, இத்தனை பெரிய சுவரை எழுப்பி, இந்திய அரசு எதை சாதிக்கப்போகிறது என்றும் கேள்வி எழுப்புகின்றனர். தண்ணீர், மின்சாரம், கழிப்பிடம் என அடிப்படை வசதிகளே இல்லாத எங்களின் சேரிப் பகுதிகளை சுவர் கட்டி மறைப்பதற்குப் பதிலாக, எங்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து, நல்லவீடுகள் கட்டித் தரலாம் என்று கோருகின்றனர், பல லட்சம் ஏழை மக்கள்.

நோட்டீஸ் வழங்கப்பட்ட குடிசைவாசிகள்
நோட்டீஸ் வழங்கப்பட்ட குடிசைவாசிகள்

இதோடு நிற்காமல் சரணியவாஸ் பகுதியில் வசிக்கும் மக்களைக் காலிசெய்ய அகமதாபாத் நகராட்சி நோட்டீஸும் அனுப்பியுள்ளது. 45 குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் ஏழு நாள்களுக்குள் அவர்கள் காலி செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஆனால், போராடும் சுதந்திரமோ, சூழலோ அங்கில்லை.

ட்ரம்ப் வருகைக்கும், காலி செய்யச் சொன்னதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலப் பிரச்னை காரணமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அகமதாபாத் முனிசிபல் கமிஷனர் விஐய் நேஹாரா, ``இந்தச் சுவர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே கட்டப்பட்டுவருகிறது. ட்ரம்ப் வருகைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இங்குள்ள மக்களை வேறிடத்துக்கு குடிபெயர்க்கும் திட்டமில்லை’’ என்று கூறியுள்ளார். இந்தச் சுவர், குஜராத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தச் சுவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் வகேலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. சுவர் உயர்ந்து வருவதைப்போல, அங்கு எதிர்ப்புகளும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன.

மோடி
மோடி

குஜராத் முதல்வராக 12 ஆண்டுகள், இந்தியாவின் பிரதமராக ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள மோடி, `குஜராத் மாதிரி’ என்ற பிம்பத்தைக் காட்டிதான் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் ஏற்றம், அடிப்படை வசதிகள் என நாட்டின் முன்னோடி மாநிலமாக குஜராத் திகழ்கிறது என்ற பிரசாரங்கள் முன் வைக்கப்பட்டு, `குஜராத் மாதிரி’ எனும் பிம்பம் மிகப்பெரிய சுவராகக் கட்டி எழுப்பப்பட்டது. அந்த குஜராத்தில்தான், மக்களின் ஏழ்மை நிலையை, அடிப்படை வசதிகளற்ற நிலையை மறைப்பதற்கு இப்படியொரு பிரமாண்ட சுவர் கட்டப்பட்டிருக்கிறது என்பது வரலாற்றில் புதியதோர் அரசியல் முரண்நகை.

- மாயா

அடுத்த கட்டுரைக்கு