Published:Updated:

குஜராத் கலவரம்: `மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் அகமது படேல் சதி செய்தார்’ - சிறப்பு விசாரணைக் குழு

பாஜக - காங்கிரஸ்

"பிரதமரின் பழிவாங்கும் அரசியல் தனது அரசியல் எதிரிகளான மறைந்தவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை" - காங்கிரஸ்

குஜராத் கலவரம்: `மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் அகமது படேல் சதி செய்தார்’ - சிறப்பு விசாரணைக் குழு

"பிரதமரின் பழிவாங்கும் அரசியல் தனது அரசியல் எதிரிகளான மறைந்தவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை" - காங்கிரஸ்

Published:Updated:
பாஜக - காங்கிரஸ்

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து பிரதமர் மோடி உள்ளிட்ட சிலர் விடுவிக்கப்பட்டிருந்தனர். இப்படி விடுவிக்கப்பட்டது செல்லாது எனக் கலவரத்தில் இறந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எஹ்ஸான் ஜஃப்ரியின் மனைவி ஸகியா ஜஃப்ரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் மோடி உள்ளிட்டோரை வழக்கிலிருந்து விடுவித்தது சரியானதே எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஸகியா ஜஃப்ரி இந்த வழக்கைத் தொடர்வதற்குக் காரணமாகச் செயல்பட்டது முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீ குமார், மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்(Teesta Setalvad), முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்

இந்த நிலையில், தீஸ்தா சீதல்வாட் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "2002 கலவரத்திற்குப் பிறகு பா.ஜ.க அரசை டிஸ்மிஸ் செய்ய, மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரான அகமது படேலின் உத்தரவின் பேரில், ஒரு பெரும் சதியின் ஒருபகுதியாகச் செயல்பட்ட தீஸ்தா சீதல்வாட்-க்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து. கூடுதல் அமர்வு நீதிபதி டிடி தக்கர், சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த பதிலைப் பதிவு செய்து, ஜாமீன் மனு மீதான விசாரணையைத் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அகமது படேல்
அகமது படேல்
ட்விட்டர்

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கூற்றுக்குப் பதிலளித்த காங்கிரஸ், "மறைந்த அகமது படேலுக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இது கட்டவிழ்த்துவிடப்பட்ட வகுப்புவாத படுகொலை செய்த, அனைத்து பொறுப்பிலிருந்தும் தன்னைத் தானே விடுவிக்கும் பிரதமரின் திட்டம். பிரதமரின் பழிவாங்கும் அரசியல் தனது அரசியல் எதிரிகளான மறைந்தவர்களைக் கூட விட்டுவைக்கவில்லை.

இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அரசியல் எஜமானரின் தாளத்திற்கு நடனமாடுகிறது. எங்குச் சொன்னாலும் அமர்ந்து கொள்ளும். ஏனென்றால், முந்தைய சிறப்புப் புலனாய்வுக் குழு தலைவர், மோடிக்கு அந்த கலவரத்தில் தொடர்பில்லை என 'க்ளீன் சிட்' வழங்கிய பிறகு, அவருக்கு எப்படி இராஜதந்திர பணி (diplomatic assignment) வழங்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும்" எனக் கூறியுள்ளது.