Published:Updated:

'குஜராத் 'ஸ்டைல்'... 9 மாநில சட்டசபைத் தேர்தல்' - மோடி அண்ட் கோ-வின் திட்டம் என்ன?!

பாஜக தலைமை

"குஜராத்தில் கட்சித் தொண்டர்கள் ஆற்றிய பணிகளைப்போல், இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் ஒன்பது மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும்" என, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார்.

'குஜராத் 'ஸ்டைல்'... 9 மாநில சட்டசபைத் தேர்தல்' - மோடி அண்ட் கோ-வின் திட்டம் என்ன?!

"குஜராத்தில் கட்சித் தொண்டர்கள் ஆற்றிய பணிகளைப்போல், இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் ஒன்பது மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும்" என, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பாஜக தலைமை

`ஒவ்வொன்றிலும் வெற்றி...’

டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமைவகித்தார். இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர். இது தவிர அனைத்து மாநிலச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

நட்டா
நட்டா
Premkumar SK

மேலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவது உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடக்க உரை நிகழ்த்திய ஜே.பி.நட்டா, "இந்த ஆண்டு புதிய சட்டமன்றங்களைத் தேர்ந்தெடுக்கும் ஒன்பது மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டு பணியாற்ற வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களைக் கட்சித் தொண்டர்களுக்கு வழங்கினார்.

`ஒரு மாநிலத்தில் கூட தோல்வி கூடாது...’

பின்னர் ஜே.பி.நட்டா பேச்சின் சுருக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத், "வரவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் 2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னோடி. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஐந்து மாநிலங்களில் பாஜக தற்போது ஆட்சியில் இருக்கிறது. இரண்டு மாநிலங்களில் கூட்டணி மூலம் ஆட்சி செய்கிறோம்.

'குஜராத் 'ஸ்டைல்'... 9 மாநில சட்டசபைத் தேர்தல்' - மோடி அண்ட் கோ-வின் திட்டம் என்ன?!
Premkumar SK

2023 ஒரு முக்கியமான ஆண்டு. ஏனெனில் இந்த ஆண்டில் ஒன்பது மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட வேண்டும். கட்சி ஒரு மாநிலத்தில்கூட தோல்வியடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தத் தேர்தல்கள் 2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னோடியாக இருக்கும் என்பதால் அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் கட்சி வெற்றி பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். 2014 பொதுத் தேர்தல், 2019 பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றது. 2014-ல் 272 இடங்களைப் பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இதுவே 2019-ல் எண்ணிக்கையை 303 ஆக உயர்த்தியது. 2024-ம் ஆண்டு தேர்தலில் இன்னும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

இருப்பினும் இமாச்சலில்...

நாடு முழுவதும் இருக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் தனது இருப்பை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முன்னதாக, பிரதமர் மோடியும் கட்சி பலவீனமாக இருக்கும் 72,000 வாக்குச் சாவடிகளில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்படி இந்த உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 12 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக, கடந்தமுறை நடந்த சட்டசபைத் தேர்தலில் குஜராத்தில் சாதனை வெற்றி பெற்றிருக்கிறது.

நட்டா
நட்டா

இருப்பினும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்க முடியவில்லை. குஜராத்தில் பாஜக-வின் வெற்றி அசாதாரணமானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது. குஜராத்தில் பிரதமர் முன்னிலையிலிருந்து வழிநடத்தினார். ஆனால், இமாச்சலப் பிரதேசத்தில் வெற்றிபெற முடியவில்லை. 1% க்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறோம். இங்கு பாஜக, காங்கிரஸுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 37,000 மட்டுமே.

தெலங்கானாவில் கடும் போட்டி:

குஜராத்தில் கட்சித் தொண்டர்கள் ஆற்றிய பணிகளைப் போல் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் ஒன்பது மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும். தெலங்கானாவில் பாஜக-வினர் கடுமையாகப் போராடி வருவதால், நிச்சயம் ஆட்சி அமைப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கட்சிகளை நாங்கள் கைவிடவில்லை. சில கட்சிகள்தான் வெளியேறியிருக்கிறார்கள். 2018-ல் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது.

மோடி - புதின்
மோடி - புதின்

அதைத் தொடர்ந்து 2019-ல் சிவசேனா, 2020-ல் எஸ்ஏடி, 2018-ல் பிடிபி ஆகிய கட்சிகளுடன் பாஜக தனது உறவை முறித்துக்கொண்டது. இவ்வாறு பக்கம் மாறியவர்களுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பகிரங்கமாகப் பாராட்டியிருக்கிறார்.

`3,600 கிமீ சாலைகள்...’

இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. மொபைல் உற்பத்தியில் உலகில் இரண்டாவது பெரிய நாடாகவும், கார் உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாகவும் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தைவிட முன்னிலையில் இருப்பது மிகவும் பெருமையான விஷயம். இந்தியா தயாரிப்பில் முன்னேறி வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் வெளிப்படையானவை.

இறக்குமதிகள் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகள் அமைக்க நாங்கள் விரும்பவில்லை என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார். இன்று 3,600 கிமீ சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்று நட்டா பேசினார்" என ரவிசங்கர் பிரசாத் கூறினார்.