Published:Updated:

`இழிவாகப் பேசுவதை குருமூர்த்தி நிறுத்திக்கொள்வது உத்தமம்!' - அ.தி.மு.க நாளிதழ் விமர்சனம்

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மா கடுமையாக விமர்சித்திருக்கிறது.

குருமூர்த்தி
குருமூர்த்தி

சமீபத்தில் திருச்சியில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய அந்த இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைப் பார்த்து , `நீங்கெல்லாம் ஆம்பளையா' என்று கேட்டதாகப் பேசினார். பின்னர், `ஒ.பன்னீர் செல்வத்தைப் பார்த்து அப்படிக் கேட்கவில்லை. அ.தி.மு.க-வினரைப் பார்த்து கேட்டதாகவும் துணை முதல்வர் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு' என்றும் ட்விட்டரில் குருமூர்த்தி மறுத்தார். இப்போது, குருமூர்த்தியை `நமது அம்மா' நாளிதழில் குத்தீட்டி என்ற பெயரில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. அதில், `குப்புற விழுந்த மூர்த்தி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

மேலும், ``கடந்த 1996-ம் ஆண்டு காங்கிரஸை உடைத்து தா.மா.கா- வை உருவாக்கி ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைத்து அ.தி.மு.கவை அழிக்கப் பார்த்தார்கள். தேர்தலில் அ.தி.மு.க தோற்றதும் ஜெயலலிதா மீது வழக்கு பதியவும் தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவும் கருணாநிதிக்கு ஆலோசனை கொடுத்தது இந்தக் கும்பல். அம்மாவின் அரசியல் விஸ்வரூபத்தால் ஆடிப்போன, இந்தக் கும்பல் திருந்தியதுபோல அம்மாவிடம் வந்து நாடகம் நடித்தது. அம்மா இருந்தவரை, அ.தி.மு.க-வை எதிர்த்து ஒரு வார்த்தை பேசத் துணிச்சல் இல்லாத கும்பல், அம்மா மறைந்தவுடன் கழக அமைச்சர்களை இழித்தும் பழித்தும் பேசி வருகிறது.

மறைந்த சோ, துக்ளக் ஆசிரியராக இருந்தவரை, அவர் கடைப்பிடித்த குறைந்தபட்ச கண்ணியமும் புதைக்கப்பட்டு குருமூர்த்தி ஏதோ இந்திய அரசியலையே தீர்மானிப்பவர் போலவும் மோடிக்கே பொருளாதாரம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு மமதையில் உள்ளார். அரங்குக்குள் ஆணவமாக பேசுவது , நாச்சவடால் விபரீதமானால் அடுத்த நாளே அந்தர்பல்டி அடிப்பது குருமூர்த்திக்கு பிழைப்பாகிப் போய்விட்டது. ரஜினிக்கு, தான் எல்லாம் போலவும் அவரை நெம்புகோலாக்கிக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப் போடப் போகிறேன் என்று தம்பட்டம் அடித்துவருகிறார்.

ரஜினியுடன் குருமூர்த்தி
ரஜினியுடன் குருமூர்த்தி

தனிப்பட்ட முறையில் அவரிடத்தில் பகிர்ந்த விஷயத்தை நீண்ட காலம் கழித்து தனக்கு வேண்டப்பட்ட நேரத்தில், பொதுவெளியில் சொல்வது தன்னை ஒரு அரசியல் அமானுஷ்ய சக்தியாக காட்டிக்கொள்ள நினைப்பது தரங்கெட்ட குணமே. நட்போடு இருந்தபோது, சொன்ன விஷயத்தைக் கருத்து வேறுபாடு கொண்டபோதும் வெளியிடாத தன்மைதான் உத்தமமானது. குருமூர்த்தியிடம் அதை எதிர்பார்க்க முடியாது. அதேவேளையில் , ரஜினி இன்று குருமூர்த்தியிடம் பகிர்ந்துகொண்ட ரகசியங்கள் நாளை துக்ளக் விழாவில் பேசப்படும் பொருள் ஆகலாம். அமைச்சர்களையும் துணை முதல்வரையும் இழிவாகப் பேசுவதை குருமூர்த்தி நிறுத்திக்கொள்வது உத்தமம்''