Published:Updated:

`மாதம் 300 ரூபாய்க்கு ஜெராக்ஸ் கடையில் வேலைசெய்தேன்' - பர்வீன் சுல்தானா நேர்காணலில் திருமாவளவன்

தொல்.திருமாவளவன்
News
தொல்.திருமாவளவன்

"வேதியியல் முடித்து பல வருடம் ஆகிவிட்டதால் எனக்கு எப்படியும் வேலை கிடைக்காது என்ற எண்ணத்தில் நேர்காணலுக்கு மாக்சிம் கார்க்கியின் தாய் புத்தகத்தை எடுத்து சென்றேன்."

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திரு.தொல். திருமாவளவனை சந்தித்து அண்மையில் உரையாடினார்.

தன் கல்லூரி நாட்கள், தொடக்ககால அரசியல் ஈடுபாடு, முதல் வேலை, அரசு பணியில் சேர்ந்த அனுபவம் என பலவற்றை குறித்தும் சுவாரஸ்யமாக அமைந்தது அந்த உரையாடல். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் இருந்து வந்துள்ள நீங்கள் தவிர்க்கமுடியாத சூழலால் அரசியலுக்கு வந்துள்ளீர்கள். அதற்கான தேவை இருந்தது என்று நினைக்கிறீர்களா ?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை மாநிலக் கல்லூரியில் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. இங்கு வந்த பிறகு சென்னை சூழல்தான் எனக்கு அரசியல் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. இந்நகரத்திற்கு வராமல் இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருப்பேனா என தெரியவில்லை. இங்கு விடுதியில் தங்கிய நாட்களில் உடன் இருந்தவர்களுடன் அரசியல் பற்றியே பெரும்பாலும் விவாதிப்போம். அதிலும் குறிப்பாக திராவிட அரசியல். மேலும் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் அனைத்து அரசியல் கூட்டங்கள், வாரம்தோறும் பெரியார் திடலில் நடைபெறும் கருத்தரங்குகள் ஆகியவற்றுக்கு தவறாமல் சென்று வருவோம்.

தீவிரமான அரசியல் ஈடுபாடு என்று சொன்னால் 1983-ம் ஆண்டு ஈழ தமிழர் பிரச்சனை நாட்களில் ஒரு கல்லூரி மாணவனாக பல போரட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டேன். மேலும் அப்போது தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழ மக்களிடம் நான் கேட்டறிந்த கதைகள் பலவும் என்னை பதறவைத்தன. இந்த மாதிரியான சூழல்தான் என்னை அரசியல் நோக்கி நகர்த்தியது என்று நான் நினைக்கிறேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கல்லூரியில் எந்த துறையில் சேர்ந்து படித்தீர்கள்?

இளங்கலையில் வேதியியல் படித்தேன். பொதுவாக அறிவியல் துறை மாணவர்கள் மற்ற விஷயங்களில் ஈடுபாடு காட்டமாட்டார்கள். ஆனால் எனக்கு கவிதை மேலும் தமிழ் மொழி மீதும் அதிக பற்றிருந்தது. தமிழ்துறை தலைவரின் வகுப்பை கவனிக்க என் துறை வகுப்பிற்கு செல்லாமல் பலமுறை இருந்ததுண்டு. எனக்கு கல்லூரியில் தமிழ் பாடம் எடுத்தவர் கவிஞர் மேத்தா.

இளங்கலை முடித்த பிறகு முதுகலை படிக்கவே நினைத்திருந்தேன். ஆனால் காலையிலிருந்து மாலை வரை ஆய்வுகூடத்திலேயே இருக்கவேண்டிவரும் என்பதாலும் அதைவிட முக்கியமாக குடும்பத்தின் வறுமை காரணமாகவும் வேலை தேட தொடங்கினேன். தெரிந்தவர் மூலம் ஜெராக்ஸ் கடை ஒன்றில் மாதம் 300 ரூபாய்க்கு வேலையில் சேர்ந்தேன். அதேநேரத்தில் என் கற்றலை முழுமையாக நிறுத்திவிடாமல் மாலை கல்லூரி ஒன்றில் சேர முடிவுசெய்தேன். அதன்படி ICW பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் கணக்கியல் துறை எனக்கு சரிவரவில்லை. ஜெராக்ஸ் கடை வேலையும் கடினமாக இருக்க அதையும் விட்டுவிட்டு மற்றொரு கடையில் மீண்டும் கணக்கு எழுதும் பணியில் சேர்ந்தேன்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

அதையும் கொஞ்ச நாட்களில் விட்டுவிட்டு அதற்கடுத்த வருடம் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் சென்று சமூகப்பணியில் முதுகலை படிக்க விண்ணப்பித்தேன். ஆனால் அறிவியல் படித்த எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக மெட்ராஸ் பல்கலைகழகத்தில் குற்றவியல் துறையில் சேர்ந்தேன்.

அப்போது ஈழத்தமிழர் பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரம். அதுவரை சமூகத்தில் பார்வையாளராக மட்டுமே இருந்த நான் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கினேன். அதனால் முதலாம் ஆண்டு முழுவதும் நான் கல்லூரியும் செல்லவில்லை பருவத்தேர்வும் எழுதவில்லை. அதன்பிறகு என் பேராசிரியர் என்னை அழைத்து அறிவுறுத்த அடுத்தவருடமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடயவியல் நிபுணராக நீங்கள் மதுரையில் பணிபுரிந்துள்ளீர்கள். அதை பற்றிய அனுபவங்களை கூறுங்கள்?

இளங்கலையில் வேதியியல் முடித்திருந்ததால் எனக்கு தடயவியல் துறையில் இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்திருந்தது. அப்போது நான் முதுகலை முடித்துவிட்டு சட்டம் பயின்று கொண்டிருந்தேன். வேதியியல் முடித்து பல வருடம் ஆகிவிட்டதால் எனக்கு எப்படியும் வேலை கிடைக்காது என்ற எண்ணத்தில் நேர்காணலுக்கு மாக்சிம் கார்க்கின் தாய் புத்தகத்தை எடுத்து சென்றேன். தேர்வில் என் நிலையை பற்றி நேர்மையாக கூறி எனக்கு கேட்கப்பட்ட பொதுமான சில கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க அங்கு வந்துள்ளவர்களுள் முதல் ஆளாக தேர்வானேன். ஆனால் முதல் பணியோ கோயம்பத்தூரில். அதனால் முதல் சில மாதங்களில் நான் பணியில் சேராமல் சென்னையிலேயே இளைஞர் நிலை இயக்கம் ஒன்றில் பொதுசெயலாளராக பணியாற்றி வந்தேன். அப்போது அங்கு தலைவராக என்னுடன் பணியாற்றி வந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கோவிந்தராஜ் என்னை பணியில் சேர்ந்துவிட மிகவும் வற்புறுத்தியதால் முதல் முதலாக இரயிலில் கோயம்பத்தூருக்கு பயணம் செய்தேன். பணியில் சேர்ந்து சுமார் மூன்று மாதக்காலம் இருக்கையில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் இறப்பு நிகழ்கிறது. அதன்பிறகு முதல்வராகும் திருமதி.ஜானகி மதுவிலக்கு தொடர்பாக எடுத்த ஒரு கொள்கை முடிவினால் என்னை போன்ற பலருக்கும் வேலை பறிபோகிறது. ஆனால் அம்முடிவை மிகவும் சாதகமாக நினைத்து சென்னை சென்று சட்டப்படிப்பிற்கான தேர்வுகள் அனைத்தையும் முடிக்கிறேன்.

சில மாதங்களிலேயே புதிய அரசு கவிழ்ந்துவிட எனக்கு மீண்டும் அதே வேலை கிடைக்கிறது. இம்முறை மதுரையில். சென்னையை விட்டு செல்ல எனக்கு மனமில்லாததால் வேலை குறித்து வீட்டில் சொல்லாமல் இங்கேயே இருந்துவிட்டேன். அப்போது என் தந்தைக்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஒன்று ஏற்பட சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமத்திக்கப்படுகிறார். இங்குள்ள உறவினர் மூலமாக எனக்கு வேலை கிடைத்த செய்தியை அறிந்து மனம் நொந்து போகிறார் அப்பா. பின்னர் மொத்த குடும்பத்தின் வற்புறுத்தலின் பெயரில் மதுரை சென்று தடயவியல் துறையில் பணியில் சேர்கிறேன். அதன்பின் சட்டப்படிப்பை முடித்தாலும் வழக்கறிஞராக பணிசெய்யாமல் சுமார் பத்து வருடக்காலம் என் துறை ஆய்வகத்திலேயே வேலைசெய்தேன்.

முழு வீடியோ ஆனந்த விகடன் யூடியூப் சேனலில்..!