Published:Updated:

`தயங்கும் சரத் பவார்; மீண்டும் பா.ஜ.க?’ -மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கத் தவிக்கும் சிவசேனா

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக சோனியாவுடன் ஆலோசிக்கவில்லை என சரத்பவார் கூறியிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சிவசேனா - பா.ஜ.க
சிவசேனா - பா.ஜ.க

மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் இழுபறிகளால் இன்னும் அங்கு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காமல், குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுவருகிறது. எப்படியேனும் மகாராஷ்டிராவின் முதல்வர் அரியாசனத்தில் ஏறிவிட வேண்டும் என்று முழு வீச்சில் செயல்பட்டுவருகிறது சிவசேனா. இதற்காகத்தான் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியில் வந்து, தற்போது என்.சி.பி காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

சோனியா - சரத் பவார்
சோனியா - சரத் பவார்

ஆனால், எந்தக் கட்சியும் சிவசேனாவுக்கு முழு ஆதரவு வழங்கவில்லை என அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. இதற்கு உதாரணமாக, ‘நேற்று முன் தினம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார், என்.சி.பி தலைவர் சரத் பவார்.

அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நானும் சோனியா காந்தியும் மகாராஷ்டிரா அரசியல் நிலைமை குறித்து மட்டுமே பேசினோம். அங்கு ஆட்சியமைப்பது பற்றியும் சிவசேனா கூட்டணி தொடர்பாகவும் எதுவும் விவாதிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார்.

சரத் பவார்
சரத் பவார்

சரத் பவாரின் கருத்து, சிவசேனாவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதையடுத்து, நேற்று என்.சி.பி தலைவர் சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசியலில் சரத்பவார் ஒரு மூத்த தலைவர். மேலும், அவர் முன்னாள் மத்திய வேளாண்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதனால் மகாராஷ்டிரா விவசாயிகள் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன்” என்று கூறினார்.

`40 : 60 ஃபார்முலா; ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்!'- மகாராஷ்டிர அரசியலில் என்ன நடக்கிறது?

பின்னர், ஆட்சியமைப்பது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, “நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். டிசம்பர் முதல் வாரத்துக்குள் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசு அமையும். அது, நிலையான அரசாக இருக்கும்” என்றார். தொடர்ந்து சரத் பவார் கருத்து தொடர்பாகப் பதில் அளித்த அவர், “ சரத்பவாரின் பேச்சைப் புரிந்துகொள்ள இன்னும் 100 முறை பிறக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த இரு தலைவர்களின் பேச்சால் மகாராஷ்டிரா அரசியலில் சிக்கல் நீடிக்கிறது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இந்நிலையில், பா.ஜ.க-வுடன் மீண்டும் இணைய சிவசேனா ஆலோசனை நடத்திவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பா.ஜ.க மட்டும் 50:50 ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், சிவசேனா மகிழ்ச்சியாக பா.ஜ.க-வின் கூட்டணியைப் புதுப்பிக்கும் என சிவசேனா கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், தற்போது என்.சி.பி-யை சிவசேனாவுடன் சேரவிடாமல் செய்ததும் பா.ஜ.க தான் என்ற கருத்தும் அக்கட்சியினரிடையே உலா வந்துகொண்டிருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் இழுபறி தொடர்கிறது.