Election bannerElection banner
Published:Updated:

``பூத்துக்கு ஆட்கள் இருக்கா?” பாஜக-வை கலாய்க்கும் சேகர்பாபு!

சேகர்பாபு
சேகர்பாபு

தான் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சமூக வலைதளங்களில் பரவும் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார் சேகர்பாபு.

துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் சேகர்பாபுவை விமர்சித்து, ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. எழும்பூரைச் சேர்ந்த இளைஞரணி பிரமுகர் வினோத் குமார் என்பவர் மூலமாக, தொகுதிக்குள் சேகர்பாபு கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், இதன்மூலம் வியாபாரிகளை மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறது அந்த வீடியோ. சேகர்பாபுவை எதிர்த்துக் களமிறங்கியிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தின் ஆதரவாளர்கள் இந்த வீடியோவை வைரலாக்குவதால், தொகுதி அதிரிபுதிரி ஆகியிருக்கிறது. இந்த நிலையில், சேகர்பாபுவிடம் இந்த வீடியோ எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினோம்.

ஸ்டாலினைச் சந்தித்த ஜெயின் சமூக அமைப்பினர்
ஸ்டாலினைச் சந்தித்த ஜெயின் சமூக அமைப்பினர்

``தோல்வி பயத்தில் வெளிறிப் போயிருக்கும் பா.ஜ.க-வினர் இதுபோன்ற ஆதரமற்றக் குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறார்கள். என்மீது, கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவோ, மிரட்டி பணம் பறித்ததாகவோ எந்த வழக்கும் இல்லை. தேர்தல் நேரத்தில் இப்படியான பொய்ப் புகார்களைக் கிளப்பிவிட்டால், வாக்காளர்கள் குழம்பிவிடுவார்கள் என்று கணக்குப் போடுகிறது பா.ஜ.க தரப்பு. ஆனால், மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.

ஜி.எஸ்.டி வரியை விதித்து, வியாபாரிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய பா.ஜ.க-வை ஏற்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தால்தான், தங்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதை அனைத்துத் தரப்பு மக்களும் உணர்ந்திருக்கிறார்கள்” என்றவரிடம், ``பா.ஜ.க வேட்பாளர்கள் சிலர் தங்கள் கட்சியின் தலைவர்கள் படத்தையே புறந்தள்ளிவிட்டு பிரசாரம் செய்கிறார்கள். உங்களை எதிர்த்துப் போட்டியிடும் வினோஜ் செல்வம் கூட இப்படி விளம்பரம் செய்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றோம்.

திமுக நிர்வாகிகள் வீடுகளில் ஐ.டி ரெய்டு; செக் வைக்கும் டெல்லி - 5 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தமா?

``மோடி, அமித் ஷா படம் போட்டால் ஓட்டு வராது என்பதை பா.ஜ.க வேட்பாளர்களே உணர்ந்திருக்கிறார்கள். அந்தளவுக்கு மக்களிடம் கோபம் கனலாகக் கொதிக்கிறது. பா.ஜ.க வேட்பாளர்களுடன் பிரசாரத்துக்குச் செல்லும் அ.தி.மு.க-வினர், கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் கொடியை கையால் கூடத் தொடுவதில்லை. ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று பா.ஜ.க-வினர் முழங்கினால், பதிலுக்கு அ.தி.மு.க-வினர் முழங்குவதில்லை. இந்த முரண்பாட்டை என் தொகுதியிலும் நான் பார்க்கிறேன். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ‘மோடியா, அல்லது இந்த லேடியா’ எனக் கேட்ட ஜெயலலிதாவின் வார்த்தைகளை, இன்றுள்ள அ.தி.மு.க தலைவர்கள் அடகுவைத்துவிட்டதாகவே அக்கட்சியின் தொண்டர்கள் பார்க்கிறார்கள். துறைமுகம் தொகுதிக்குள் 177 பாகங்கள் வருகின்றன. வாக்குச்சாவடியில், பாகத்திற்கு இரண்டு பேர் வீதம் 354 பேரை நியமிக்கக் கூட பா.ஜ.க-விடம் ஆட்கள் இல்லை. அ.தி.மு.க-வினரை நம்பியிருக்கும் சூழல்தான் நிலவுகிறது” என்றார்.

மோடி படம் இல்லாத பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் செல்வத்தின் பிரசாரப் படம்
மோடி படம் இல்லாத பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் செல்வத்தின் பிரசாரப் படம்

சேகர்பாபு மீது ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் பரவின. இதை முன்னிலைப்படுத்தி, பா.ஜ.க தரப்பு தீவிர பிரசாரம் செய்து வந்தது. சமீபத்தில், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 21 அமைப்புகளின் நிர்வாகிகள் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பா.ஜ.க-வின் வியூகத்தை உடைத்திருக்கிறது. பிரசாரம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு நாள்களே மீதமிருப்பதால், இருதரப்பும் அசூர வேகத்தில் களமாடுகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு