Published:Updated:

20,000 கோடி செலவு... 24 ஆண்டுகள் உழைப்பு! சிக்கலில் ஐ.என்.எஸ் விக்ராந்த் #INSVikrant

கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்த் கட்டப்பட்டு வருகிறது. இந்த விக்ராந்த் கட்டுமானப் பணியின் ரகசியங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் கட்டுமான தளத்திலிருந்து அண்மையில் காணாமல் போயிருக்கின்றன.

விக்ராந்தின் கட்டுமானப் பணி
விக்ராந்தின் கட்டுமானப் பணி

இந்தியாவிடம் `விக்கிரமாதித்தியா' என்ற விமானம் தாங்கிக்கப்பல் உள்ளது. சுமார் 40,000 டன் எடை கொண்ட பிரமாண்ட கப்பல் இது. கடற்படையிடம் இருந்த ஐ.என்.எஸ். விராட், ஐ.என்.எஸ் விக்ராந்த் என்கிற இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டன. சந்திரயானை விட்டு நிலவை எட்டிப் பிடிக்க முயன்றாலும், விமானம் தாங்கிக் கப்பல் கட்டுமானத்தில் இன்னும் நாம் பின்தங்கியே இருக்கிறோம்.

விக்கிரமாதித்யா போர்க்கப்பல்
விக்கிரமாதித்யா போர்க்கப்பல்

இந்தியா இதுவரை சுயமாக ஒரு விமானம்தாங்கிக் கப்பல் கூட கட்டியதில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையில், முதன்முறையாகக் கொச்சியில் விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றை இந்தியா கட்டி வருகிறது. இந்தக் கப்பலுக்கு ஐ.என்.எஸ் விக்ராந்த் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

சுமார் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பாக ஐ.என்.எஸ் விக்ராந்த் கட்டப்பட்டுள்ளது. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் கடந்த 1999-ம் ஆண்டு இந்தக் கப்பலின் டிசைன் வடிவமைக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு கப்பலின் கட்டுமானப்பணிகள் தொடங்கின. அப்போதைய, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கட்டுமானப்பணியைத் தொடங்கிவைத்தார். கிட்டத்தட்ட 252 மீட்டர் நீளத்தில் 60 மீட்டர் அகலத்தில் இந்தக் கப்பல் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது.

ஐ.என்.எஸ் விக்ராந்த்
ஐ.என்.எஸ் விக்ராந்த்

வருகிற 2021-ம் ஆண்டு முதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-ம் ஆண்டுக்குள் விக்ராந்தை கடற்படையில் இணைக்க வேண்டுமென்பது இலக்கு. இந்தக் கப்பல் கடற்படையில் இணைக்கும்பட்சத்தில், ஒரே நேரத்தில் இரு விமானம்தாங்கிக் கப்பல்கள் கொண்ட கடற்படை என்ற பெருமையை இந்தியா பெறும். இந்தியக் கடற்படையும் அசுர பலம் பெறும். 1999-ல் டிசைன் வேலைகள் ஆரம்பித்து 2023-ல் சோதனைகள் முடிந்து கடற்படையில் கொடுக்க வேண்டும் என்றால், கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் உழைப்பு இதன்பின் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். விக்ராந்த் கடலில் ஓடத் தொடங்கினால், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா போன்ற விமானம் தாங்கிக் கப்பல் கட்டும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துவிடும்.

கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்த் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விக்ராந்த் கட்டுமானப் பணியின் ரகசியங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள், ரேண்டம் ஆக்சஸ் மெமரி, புராசஸர் மற்றும் கப்பல் கட்டுமானப்பணிக்குத் தேவையான சில பொருள்களும் கட்டுமான தளத்திலிருந்து காணாமல் போயிருக்கிற விஷயம் சமீபத்தில் தெரியவந்திருக்கிறது. ஆகஸ்ட் 29-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 12-ம் தேதிக்குள் 10 ஹார்ட்டிஸ்க்குகள், ரேண்டம் ஆக்ஸஸ் மெமரி யூனிட்கள், சி.பி.யு-க்கள் காணாமல் போயுள்ளன.

விக்ராந்த் கட்டுமானப் பணி
விக்ராந்த் கட்டுமானப் பணி

IPMS என்று அழைக்கப்படும் Integrated Platform Management System என்கிற கப்பலின் முழுப் பாதுகாப்பு அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயுள்ளன. பாரத் கனரக பொருள்கள் உற்பத்தி நிறுவனம், இத்தாலியைச் சேர்ந்த நிறுவனத்தின் உதவியுடன் IPMS- ஐ உருவாக்கியுள்ளது. இந்த ஹார்ட் டிஸ்க்குகளில் கப்பலின் முழுப் பாதுகாப்பு அம்சங்களும் அடங்கியுள்ளன. கப்பலின் வரைபடம், கப்பலில் ஆயுதங்கள் இருக்கும் விவரங்கள் ஆகியவை ஹார்ட் டிஸ்குகளில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கொச்சி கப்பல் கட்டுமான தளம் பலத்த பாதுகாப்பு கொண்ட பகுதி. மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினர்தான் இங்கு பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களைத் தாண்டி வெளியே தனியார் நிறுவனத்தைச் சார்ந்த 80-க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட பகுதியிலிருந்து ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் , இந்த விஷயத்தில் தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர். திருட்டு குறித்து கொச்சி கமிஷனர் விஜய் ஷகாரியாவிடம் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் கேட்டறிந்தனர். கொச்சி நகர துணைக் கமிஷனர் பூங்குழலி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பூங்குழலி ஐ.பி.எஸ்
பூங்குழலி ஐ.பி.எஸ்

1400-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியும் இந்தக் கப்பலில் பெரும்பாலானோர் வட இந்தியர்கள். அனைவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை முடிந்திருக்கிறது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அடுத்தகட்ட விசாரணை வளையத்தில் உள்ளனர். சிறப்பு போலீஸ் படை, கொச்சி கப்பல் கட்டுமானக் குழுமத்தின் தனிக்குழு, ராணுவம், உளவுத்துறை என்று நான்கு பிரிவினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இதில் இன்னொரு கோணமும் உள்ளது. கொச்சின் கப்பல் கட்டுமான குழுமம் புகழ்வாய்ந்தது. 1972-ல் தொடங்கப்பட்ட இக்குழுமத்தின் ஆண்டு வருவாய் சுமாராக 2,600 கோடி. கப்பல் கட்டுமானம், கப்பல் பழுதுபார்த்தல் என்று இந்தத் துறையில் ராஜாவாக இக்குழுமம் திகழ்கிறது. இந்த விக்ராந்த் திட்டம் வெற்றிகரமாக முடிந்தால், கொச்சின் கட்டுமான குழுமத்துக்கு அது ஒரு மைல்கல்லாக அமையும். அடுத்தடுத்து பெரிய ஒப்பந்தங்கள் கைகூடும். ஆகவே, தொழில்போட்டி காரணமாக இது நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

கட்டுமானப் பணிகளுக்காக யாரும், அங்கிருக்கும் எங்கேயும் செல்லலாம் என்பதால், விசாரிப்பதில் சற்று சிரமம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இத்தாலி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் ஹார்ட் டிஸ்க்குகள் இருந்துள்ளன. அந்நிறுவனம்தான் அவற்றைப் பராமரித்தும் வந்துள்ளது. அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கொச்சி வருகிறார்கள்.

இந்த நிலையில், கொச்சின் கட்டுமானக் குழுமத்தினர் இதுகுறித்து நேரடியாக விளக்கம் எதுவும் தரவில்லை. அவர்கள் தரப்பில் தெளிவாக இரு விஷயத்தைச் சொல்கிறார்கள். திருடு போயிருக்கும் எதிலும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான எதுவுமே இல்லை. மெக்கானிகல், எலெக்ட்ரிகல், சேதக் கட்டுப்பாடு, கப்பலின் வரைபடம், ஆயுத விவரங்கள் போன்றவற்றின் டம்மி மட்டுமே அவற்றில் சேமிக்கப்பட்டிருந்தது எனவும், சோதனை ஓட்டமெல்லாம் முடிந்து முறையாகக் கப்பல் படைக்குச் சமர்ப்பிக்கும்போதுதான் ஒரிஜினல் விவரங்கள் அதில் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

இருந்தாலும் இத்தனை செலவு உள்ளடங்கிய போர்க்கப்பல் பணியில் பொருள்கள் திருடுபோவதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதன் காரணமாக இந்தியாவின் 24 ஆண்டுக்கால உழைப்பு வீணாகப் போய்விடக் கூடாது என்பதே பலரின் கவலையாக இருக்கிறது.