Published:Updated:

காங்கிரஸிலிருந்து ஹர்திக் படேல் விலகல்: வருகிற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு லாபம்?!

ஹர்திக் படேல் - காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியில் இருப்பதை, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு வற்புறுத்தப்படும் மணமகன்போல் உணர்வதாக ஹர்திக் படேல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸிலிருந்து ஹர்திக் படேல் விலகல்: வருகிற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு லாபம்?!

காங்கிரஸ் கட்சியில் இருப்பதை, குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்கு வற்புறுத்தப்படும் மணமகன்போல் உணர்வதாக ஹர்திக் படேல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published:Updated:
ஹர்திக் படேல் - காங்கிரஸ்

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியில் தொடரும் உட்கட்சிப்பூசலால் படிதார் குழுவின் தலைவர் ஹர்திக் படேல் அந்தக் கட்சியிலிருந்து தான் விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக, "நான் முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச முயன்றபோது அவர்கள் குஜராத் பிரச்னைக்கு செவி சாய்ப்பதைவிட மொபைல்போன்களில் பரபரப்பாக மூழ்கியிருந்தனர். குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கோ, டெல்லியிலிருந்து வரும் கட்சி மேலிடத் தலைவர்களுக்கு 'சிக்கன் சாண்ட்விச்' சரியாகத் தயாராகிறதா என்பதை கவனிப்பதில்தான் அக்கறையே தவிர மக்களுக்கான யாத்திரையில் எந்த அக்கறையும் இல்லை.

இந்தியாவுக்கு காங்கிரஸ் தலைமை தேவைப்பட்டபோது ராகுல் வெளிநாட்டில் இருந்தார். காங்கிரஸைச் சரியான திசையில் வழிநடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அந்தக் கட்சி தொடர்ந்து சமூகநலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது. கட்சியின் மூத்த தலைமைக்கு தீவிரத்தன்மை இல்லை. நான் மூத்த தலைமையைச் சந்திக்கும்போதெல்லாம், குஜராத் மக்கள் தொடர்பான பிரச்னைகளைப் பற்றிக் கேட்பதில் அவர்கள் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை என்று நான் உணர்ந்துகொண்டேன். எனவே, அந்தக் கட்சியிலிருந்து விலகும் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, நான் உண்மையிலேயே எங்கள் மாநில மக்களுக்குச் சாதகமாகப் பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன்" என்று தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார் ஹர்திக்.

ஹர்திக் படேல் - ராகுல் காந்தி
ஹர்திக் படேல் - ராகுல் காந்தி

``2002 முதல் 2022 வரை, 117 தலைவர்கள் கட்சியைவிட்டு வெளியேறியுள்ளனர்” என்கிற ஹர்திக், அவர்களில் 27-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள், 12-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி-க்கள், 42 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் என்று பட்டியலிடுகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காங்கிரஸிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த பஞ்சாப் தலைவர் சுனில் ஜாக்கரைப்போல ஹர்திக்கும் வரும் நாள்களில் பாஜக-வில் சேரலாம் என்ற யூகங்கள் உள்ளன. ஹர்திக் பாஜக-வில் இணைந்தாலும் இணையாவிட்டாலும், காங்கிரஸிலிருந்து அவர் வெளியேறுவது குஜராத்தில் ஆளுங்கட்சிக்கு உதவுமா... இதனால் காங்கிரஸுக்கான பின்னடைவு என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம்.

``ஹர்திக் படேல் விலகியது நிச்சயம் காங்கிரஸுக்குப் பின்னடைவுதான். குஜராத்தில் பாஜக ஆளுங்கட்சியாக இருந்தாலும், கடந்த முறைதான் காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் குஜராத்தில் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் ஆதரவில்தான் பா.ஜ.க-வே தப்பிப் பிழைத்தது என்று சொல்லலாம். அந்த அளவில் பாஜக-வின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு ஹர்திக் படேலும், படேல் சமூகமும் உதவி செய்தார்கள்.

இப்போது ராகுல் காந்தி படேல்களைவிட பட்டியலின சமூகங்களை நம்புகிறார். பட்டியலின சமூகத்தவரின் எண்ணிக்கை குஜராத்தில் குறைவுதான். ஜித்தேஷ்வர் மேவானியைப் புகழ்ந்து பேசி, ஹர்திக் பற்றிப் பேசாததால்தான் ஹர்திக் வெளியே போகிறார். ஹர்திக் படேல் ஒரு தலைவராக வளர்வதை ராகுல் விரும்பவில்லை. இவரை வளர்த்துவிட்டால்கூட நிற்க மாட்டார் எனச் சந்தேகப்படுகிறார். இப்படித்தான் ஜெகன் மோகன் ரெட்டி, ஜி.கே.வாசன், சுனில் தாக்கரே என செல்வாக்குள்ள தலைவர்களைச் சந்தேகப்பட்டு, தனக்கு ஆமாம் சாமியாக இருக்க மாட்டார்கள் எனக் கருதியே ராகுல் காந்தியின் நடவடிக்கை காங்கிரஸை பலவீனப்படுத்திவருகிறது. வெற்றி பெற்ற பிறகுதான் வெற்றிக்கு யார் பங்கு எனப் பார்க்க வேண்டுமே தவிர, வெற்றிபெற்றால் அவர் பங்கு கேட்டு வந்துவிடுவார், அவரால் வெற்றிக்குக் காரணம் எனச் சொல்லி வெற்றி பெறுவதற்கு முன்பே ஒருவரைத் தட்டிவிடுவது அரசியல் களத்தில் தவறான வியூகம். அந்தத் தவறான வியூகத்தைத் தொடர்ந்து செய்துவருகிறார் ராகுல் காந்தி” என்கிறவர், “ஹர்திக் விலகியது பாஜக-வுக்குத்தான் வாய்ப்பாக இருக்கும்” என்கிறார்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

“பஞ்சாப்பில் சுனில் ஜாக்கர் விலகியது ஜாட்டுகள் மத்தியில் பலகீனமாக இருக்கக்கூடிய பாஜக-வுக்குக் கூடுதல் பலம்போல், ஹர்திக் படேல் விலகியதும் பலமாக இருக்கக்கூடிய காங்கிரஸின் பலகீனம், பாஜக-வுக்கு இது லாபமாக இருக்கும்” என்கிறார், ரவீந்திரன் துரைசாமி.

யார் இந்த ஹர்திக் படேல்?

குஜராத் மாநிலத்திலுள்ள ஓபிசி சமூகங்களுள் ஒன்றான பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் பட்டேல். கடந்த 2012 ஆம் ஆண்டு `சர்தார் பட்டேல் குழு' என்ற ஓபிசி பிரிவினருக்கான அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டவர், அந்த அமைப்பின் மூலம் குறுகியகாலத்தில் குர்மி, பட்டிதார் உள்ளிட்ட பட்டேல் சமூக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 2015ஆம் ஆண்டு ஓபிசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய பேரணியையும், போராட்டத்தையும் முன்னெடுத்தார். 2015, ஜூலை மாதத்தில் அவர் தொடங்கிய போராட்டம், குஜராத் முழுவதுமே பரவியது.

ஹர்திக் படேல்
ஹர்திக் படேல்

பட்டிதார் சமூகத்தினரின் பேராதரவுடன் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்த அது கலவரமானது. கலவரத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, ராணுவமும் வரவழைக்கப்பட்டது. இதனையடுத்து 2017 குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார். இதனால் 2012ஆம் ஆண்டு 117 இடம் பிடித்திருந்த பாஜக, 2017ஆம் ஆண்டு 99 இடங்களை மட்டுமே பிடித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்து, தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 2020ஆம் ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் ஹர்திக் படேல்.