Published:Updated:

`பகவத்கீதையைக் கற்றுத்தந்தால் பயங்கரவாதமா?' -பா.ஜ.க-வுக்கு எதிராகக் கொதிக்கும் ஹர்ஷிதா கெஜ்ரிவால்

ஹர்ஷிதா கெஜ்ரிவால்
ஹர்ஷிதா கெஜ்ரிவால்

ஆம் ஆத்மிக்காக நாங்கள் மட்டுமல்ல, 2 கோடி மக்கள் பிரசாரம் செய்கிறார்கள். பிப்ரவரி 11-ம் தேதி வரும் தேர்தல் முடிவுகள் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் என்று ஹர்ஷிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத்துக்கு வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்புகளுக்குப் பிறகு தலைநகரின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டன. தேர்தல் தொடர்பான பிரசாரக் பொதுகூட்டங்கள் மற்றும் பேரணிகளில் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துப் பேசினர். இதில், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று குறிப்பிட்டுப் பேசினர். இதனால், பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்தவாறு உள்ளன.

பர்வேஷ் வர்மா
பர்வேஷ் வர்மா

முன்னதாக பா.ஜ.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ``காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடனும் கெஜ்ரிவால் போன்ற பயங்கரவாதிகளுடனும் நாம் போராடவேண்டுமா?" என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை `பயங்கரவாதி' என்று முதன்முறையாக குறிப்பிட்டுப் பேசினார்.

`தாஜ்மஹாலையும்கூட விற்றுவிடுவார்கள்!' - தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க-வை விமர்சித்த ராகுல் காந்தி

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பொதுக்கூட்டம் ஒன்றில், ``அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு நான் ஒரு பயங்கரவாதியா என கெஜ்ரிவால் கேட்கிறார். நீங்கள் ஒரு பயங்கரவாதி. இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. நீங்களே, உங்களை ஒரு அராஜகவாதி என சொல்லியிருக்கிறீர்கள். அராஜகவாதிக்கும் பயங்கரவாதிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை" என்று விமர்சித்திருந்தார்.

பா.ஜ.க தலைவர்களின் இந்த விமர்சனங்களுக்கு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங், ``ஒரு முதலமைச்சரை `பயங்கரவாதி' என எப்படி அழைக்கலாம்? இதுதான் பா.ஜ.க-வின் கலாசாரமா.. ஒரு மத்திய அமைச்சர் இதுமாதிரியான வார்த்தைகளைப் பேச எவ்வாறு அனுமதிக்கப்படுகிறார்.. பா.ஜ.க-வுக்குச் சவால்விடுக்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரவாதியாக இருந்தால், அவரைக் கைது செய்யுங்கள் பார்க்கலாம்" என்று பேசியிருந்தார்.

மேலும், தீவிரவாதி எனப் பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை `பயங்கரவாதி' என குறிப்பிட்டதற்குப் பதிலளிக்கும் வகையில் அவருடைய மனைவியும் மகளும் செய்தியாளர்களைச் சந்தித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

அப்போது பேசிய கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா, ``சுகாதார வசதிகளை இலவசமாக வழங்கினால் அது பயங்கரவாதமா.. குழந்தைகளுக்குச் சரியான கல்வியை வழங்கினால் அது பயங்கரவாதமா.. மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதில் பல முன்னேற்றங்களைச் செய்தால் அது பயங்கரவாதமா.. என்னுடைய அப்பா எப்போதும் சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளார். அம்மா, தம்பி, தாத்தா, பாட்டி என எல்லோரையும் அதிகாலை 6 மணிக்கு எழுப்பி பகவத் கீதையைப் படிக்க வைப்பார். இதுகுறித்து கற்றும் தருவார். இது பயங்கரவாதமா?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

`காந்தியின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம்’ - சர்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க எம்.பி

தொடர்ந்து பேசிய அவர், ``அவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கட்டும். 200 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 11 முதல்வர்களையும் அவர்கள் பிரசாரத்துக்கு அழைத்து வரட்டும். ஆம் ஆத்மிக்காக நாங்கள் மட்டுமல்ல, 2 கோடி மக்கள் பிரசாரம் செய்கிறார்கள். வருகிற 11-ம் தேதி வரும் தேர்தல் முடிவுகள் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

பயங்கரவாதி என பா.ஜ.க-வினரால் குறிப்பிடப்படுவது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் என்.டி.டி.வி ஊடகத்திடம் பேசுகையில், ``எந்த வகையில் என்னை பயங்கரவாதி என்கிறார்கள். டெல்லி மக்களுக்குச் சேவை செய்யவே எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். மக்களுக்காகப் பல நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். நான் யாரென்று இப்போது மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

`என் மகனோடு ஐ.ஐ.டி-யில் சேரப்போகும் தையல் தொழிலாளி மகன்!' - ஆனந்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால்
பின் செல்ல