Published:Updated:

``போராடும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள்!" - காவல்துறைக்கு உத்தரவிட்ட மாஜிஸ்ட்ரேட்!

 விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

``விசாயிகள் மீது ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் லத்தியை நீட்டியுள்ளார். விவசாயிகள் மீது தடியடி நடத்தியதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்! தடியடிக்குக் காரணமாக இருந்த உயரதிகாரி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்!'' - மேகாலயா ஆளுநர் சத்திய பால் மாலிக்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`` உங்களுடைய வேலை ரொம்ப ஈஸி. கையில லத்திய எடுத்துக்கோங்க. போராடுற விவசாயிங்க யாராக இருந்தாலும் சரி, அடிச்சு மண்டைய உடைங்க! புரிஞ்சதா?" என ஆவேசமாகக் கூறுகிறார் அதிகாரி ஒருவர். எதிரணியில் லத்தியுடன் தயாராக நிற்கும் காவல்துறையினர் ``எஸ் சார்" என கோரஸாக தலையசைக்கிறார்கள். இந்த காணொலிதான் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. இந்தக் காணொலி ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இந்த உத்தரவைப் பிறப்பித்தவர் யாரோ ஒரு காவல்துறை மேலதிகாரி அல்ல; மாவட்ட துணைநிலை மாஜிஸ்ட்ரேட்-ஆக இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி!

காவல்துறைக்கு உத்தவிடும் ஆயுஷ் சின்ஹா
காவல்துறைக்கு உத்தவிடும் ஆயுஷ் சின்ஹா

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். தடியடிகள், உயிர் பலிகள், அவதூறுகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள் என அனைத்துக் கட்டங்களையும் தாண்டி, தொடர்ந்துவருகிறது விவசாயிகளின் போராட்டம். குறிப்பாக, தலைநகர் டெல்லியில் கடந்த ஒன்பது மாதங்களாகப் போராட்டம் நடந்துவருகிறது. பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இது குறித்துக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று முன்தினம், கர்னல் மாவட்டத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பஸ்தாரா சுங்கச்சாவடி அருகே கூடியிருந்த விவசாயிகள், முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக மாநிலத் தலைவர் ஓ.பி.தங்கார் உள்ளிட்டோரின் கார்கள் வரும் சாலையை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. (ஆனால், விவசாயிகள் தரப்பில் ஏற்கெனவே திட்டமிட்டபடி அமைதிவழிப் பேரணியே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது).

Farmers Protest: `வேளாண் சட்டங்கள் வாபஸ் ஆகும் வரை போராட்டம் தொடரும்!' - விவசாயிகள் உறுதி
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்

இதையடுத்து, அந்த மாநிலக் காவல்துறையினர், விவசாயிகள் மீது கடுமையான தடியடித் தாக்குதல் நடத்தினர். இதில், பல விவசாயிகள் காயமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரத்தம் வழிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விவசாயிகள் மீதான, போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், விவசாயிகள் போராட்டக்குழுத் தலைவர் ராகேஷ் திகைத் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, காவல்துறையினரிடம் அரசு அதிகாரி ஒருவர் பேசிய பேச்சு இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ``போராடும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள்" என்றபடியான உரையாடல் அமைந்த அந்தக் காணொலியில், காவல்துறையினருக்கு உத்தரவிட்டவர் ஆயுஷ் சின்ஹா எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவர் ஹரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தின் துணைநிலை நீதிபதியாகவும் (Sub Divisional Magistrate) இருக்கிறார். இந்தக் காணொலி குறித்து பேசிய ஆயுஷ் சின்ஹா, `` நிலைமை கையைமீறிச் சென்றால், தேவைக்கேற்ப நடைவடிக்கை எடுங்கள் என்றுதான் நான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டேன்" என விளக்கமளித்துள்ளார்.

மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்
மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்
ஏ.என்.ஐ

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு மேகாலயா ஆளுநர் சத்திய பால் மாலிக், ``விசாயிகள் மீது ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் லத்தியை நீட்டியுள்ளார். விவசாயிகள் மீது தடியடி நடத்தியதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்! தடியடிக்குக் காரணமாக இருந்த உயரதிகாரி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்" எனக் கண்டனக்குரல் எழுப்பியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு