Published:Updated:

திருப்பி அனுப்பப்பட்டாரா மோடி? - மத்திய அரசு, பஞ்சாப் அரசு... யார் சொல்வது உண்மை?!

மோடி
News
மோடி

பிரதமர் பயணம் ரத்தாகியிருப்பது, `மாநில காங்கிரஸ் ஆட்சியின் திட்டமிட்ட செயல்' என்று பா.ஜ.க-வும், `திட்டமிட்டே நெருக்கடி ஏற்படுத்தி, வாக்கு சேகரிக்க நினைக்கிறது பா.ஜ.க' என்று மாநில காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டிவருகின்றன.

``என்னை உயிரோடு செல்ல அனுமதித்த பஞ்சாப் முதல்வருக்கு நன்றி!'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி, நாடு முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது. அதேநேரம், `விரைவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பஞ்சாப் மாநிலத்தில், மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வாக்கு அறுவடை செய்யும் தந்திரத்தைச் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது பா.ஜ.க' என்று எதிர்க்கட்சிகளும் காரசாரமாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டன.

பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்தார். இதற்காக விமானம் மூலம் பஞ்சாப் சென்றடைந்த மோடி, நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்துக்கு ஹெலிகாப்டர் வழியே பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பிரதமரின் பாதுகாப்புக்குழுவைச் சேர்ந்த அதிகாரிகள், 'வானிலை மோசமாக இருக்கிறது. எனவே சாலை மார்க்கமாகவே நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு பிரதமர் செல்கிறார்' எனப் பயணத் திட்டத்தை மாற்றியமைத்துள்ளனர்.

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

இதற்கிடையே, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்லும் பா.ஜ.க தொண்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த மாநில விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மிகச்சரியாக பிரதமரின் கான்வாயும் இந்த சாலை வழியே பயணத்தை மேற்கொள்ள, பிரதமருடன் வந்திருந்த வாகனங்கள் சுமார் 20 நிமிடங்கள் சாலையிலேயே ஸ்தம்பித்து நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு, மீண்டும் டெல்லிக்கே திரும்பிவிட்டார் பிரதமர் மோடி.

இதையடுத்து, பிரதமரின் பயணத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புக் குளறுபடிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசும், பிரதமர் பஞ்சாப் வருகையின்போது, பாதுகாப்புக் குறைபாடுகள் ஏற்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை செய்ய, உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் விசாரணை அறிக்கை இன்னும் மூன்று நாள்களில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதற்கிடையே, பஞ்சாப் விவகாரம் குறித்து பா.ஜ.க-வும் காங்கிரஸும் மாறி மாறி ஒன்றையொன்று குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் இது குறித்துக் கருத்து கேட்டபோது, ''பஞ்சாப் மாநிலத்தில், எந்த அரசியல் கட்சியையும் சாராத விவசாயிகளே தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதனால் பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பிரதமரின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்றும் பா.ஜ.க தலைவர்கள் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சியிடத்துக்கு செல்வதாகத்தான் முதலில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வானிலையைக் காரணம் காட்டி, கடைசி நேரத்தில் பயணத் திட்டத்தை சாலை மார்க்கமாக மாற்றியமைத்துள்ளதாகச் சொல்கின்றனர். அப்படி மாற்றியமைக்கும்போது விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என்ற விவரம் பிரதமரின் பாதுகாப்புக்குழுவுக்கு எப்படித் தெரியாமல் போனது?

கோபண்ணா
கோபண்ணா

விவசாயிகள் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தவில்லை என பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசுமீது பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டுகின்றனர். நாடு முழுக்கவே பா.ஜ.க-வுக்கு எதிராக விவசாயிகள் தன்னெழுச்சிப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அந்தவகையில், பஞ்சாபிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. மாநில அரசைக் குறை சொல்பவர்கள், மத்திய உளவுத்துறை இந்த விவகாரத்தில் கோட்டைவிட்டது எப்படி என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.

'பா.ஜ.க-வினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஃபிளாப் ஆனதைத் தெரிந்துகொண்டதால்தான் கூட்டத்தை கேன்சல் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார் பிரதமர் மோடி' என்று பஞ்சாப் மாநில அமைச்சர் ராஜ்குமார் வெர்கா கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் விரைவில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், பா.ஜ.க-வினர் திட்டமிட்டே இப்படியொரு நெருக்கடியை ஏற்படுத்தி, மக்களிடையே அனுதாப அலையை ஏற்படுத்தி வாக்கு சேகரிக்கத் திட்டமிடுகின்றனர்'' என்கிறார் கோபமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் குமரகுருவிடம் காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டுப் பேசியபோது,

''இந்த விவகாரத்தில், பா.ஜ.க அரசு, காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடி என்றெல்லாம் அரசியல்ரீதியாக பிரித்துப் பார்க்காதீர்கள். மாறாக, இந்திய பிரதமருக்கு ஒரு மாநில அரசு கொடுக்கக்கூடிய பாதுகாப்பு இவ்வளவுதானா என்பதை மட்டும் பேசுங்கள். ஏனெனில், நாளை வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கூட பிரதமராக வரலாம். அப்போதும் மோசமான வானிலை காரணமாக சாலை வழியை அந்தப் பிரதமர் தேர்ந்தெடுத்தால், அந்தப் பயணத்துக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டியது ஒரு மாநிலத்தின் கடமைதானே!

குமரகுரு
குமரகுரு

மாறாக, பஞ்சாப் மாநில அரசுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்துவிட்டால், நாளை ஒவ்வொரு மாநிலத்திலும் இதே போன்றதொரு திட்டமிட்ட போராட்டங்களை நடத்தி, இந்திய பிரதமருக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிக்கத் தூண்டுகோலாக அமைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில், தயவுசெய்து அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரச்னையை விவாதிக்க வேண்டும்.

விவசாயிகள் போராட்டம் பற்றி மத்திய உளவுத்துறைக்குத் தெரியவில்லையா என்ற கேள்வியே தவறானது. ஹெலிகாப்டர் பயணத்தை ரத்துசெய்து, சாலை மார்க்கமாகச் செல்லலாம் என்று முடிவெடுத்து மாநில காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது, 'தாராளமாகச் செல்லலாம்' என்ற அனுமதியை வழங்கியதே பஞ்சாப் மாநில காவல்துறைதான். வரலாம் என்று அனுமதித்துவிட்டு, ஒரு பிரதமருக்கு இவ்வளவு அஜாக்கிரதையாகத்தான் பாதுகாப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றால், இதை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?

சம்பந்தப்பட்ட சாலையில் விவசாயிகள் போராட்டம் செய்கிறார்கள், பிரதமரின் பயணத்துக்கு இது உகந்த வழியில்லை என்பதெல்லாம் காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் மாநில அரசுக்குத்தானே தெரியும்? அப்படித் தெரிந்திருந்தால், 'சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டாம்' என்று முதலிலேயே அனுமதியை மறுத்திருக்கலாம்தானே... அப்படியென்றால், இந்த விவகாரத்தில் யாருடைய செயல்பாடு தவறானது என்பது புரிகிறதுதானே!

'விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்திவிட்டார்கள்' என்று சொல்லி ஒரு மாநில அரசு, தனது கடமையிலிருந்து விலகிக்கொள்ள முடியுமா... அது நியாயம்தானா? இதைச் சொன்னால், டெல்லி விவசாயிகள் போராட்டத்தை உதாரணம் காட்டுகிறார்கள். டெல்லியில் நடைபெற்ற போராட்டம் என்பது தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட இடத்தில் நடைபெற்றுவந்த போராட்டம்.

மோடி, பஞ்சாப் விவசாயிகள்
மோடி, பஞ்சாப் விவசாயிகள்

ஆனால், பஞ்சாப்பில் திடீரென இப்படியொரு போராட்டத்தை சாலையின் நடுவே இத்தனை ஆயிரம் பேர் முன்னெடுத்திருக்கின்றனர். மாநில அரசின் தயவின்றி இப்படியொரு போராட்டத்தை யாரும் முன்னெடுத்திருக்கவே முடியாது. பா.ஜ.க ஆளுகிற மாநிலமாக இருந்திருந்தால், பிரதமர் செல்கிற வழியில் இப்படியொரு போராட்டம் நடைபெற்றிருக்குமா?

உத்தரப்பிரதேசம், டெல்லியில் இதே போன்று பிரதமரின் அணிவகுப்பில் ஏற்கெனவே போராட்டங்களால் தடை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இப்படித் திட்டமிட்டு பிரதமரை அசிங்கப்படுத்தும் நோக்கோடு, ஒட்டுமொத்தமாக சாலையையே ஆக்கிரமித்துப் போராடியிருக்கிறார்கள் என்றால், அது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட, மாநில அரசின் உதவியோடு நடைபெற்ற போராட்டமாகத்தான் இருக்கும்.

நிகழ்ச்சியிடத்தில், எதிர்பார்த்த கூட்டம் சேராததால், நிகழ்ச்சியை பிரதமர் ரத்து செய்துவிட்டுத் திரும்பிவிட்டார் என்று சொல்வதே அரசியல்தான். பெருந்தொகையிலான நலத்திட்டப் பணிகள் குறித்த அறிவிப்பை பிரதமர் வெளியிடுகிறார். இதனால், ஒட்டுமொத்த மக்களும் பா.ஜ.க-வை ஆதரிக்கப்போகின்றனர் என்ற பயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுவிட்டதால்தான் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்'' என்கிறார் அழுத்தமாக.