Election bannerElection banner
Published:Updated:

`கொரோனாவை மோடி கட்டுப்படுத்தத் தவறினார்!’ - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு எந்தளவுக்கு சரி?

மோடி
மோடி

இந்தியாவை கொரோனாவின் 2-வது அலை வதைத்துக்கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி தவறிவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அந்தக் குற்றச்சாட்டு சரியா?

“இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் தீவிரமான கட்டத்தை அடைந்து, 2021-ம் ஆண்டு ஆரம்பித்த பிறகு குறைய ஆரம்பித்தது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் தினசரி எண்ணிக்கை சுமார் 11 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. கொரேனாவால் ஏற்படும் தினசரி உயிரிழப்பின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருந்தது. தற்போது, கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் தினசரி எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கிவிட்டது.

மருத்துவமனை
மருத்துவமனை

ஏப்ரல் 20-ம் தேதியன்று ஒரே நாளில் 2.59 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் 1,761 பேர் கொரோனாவால் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவே இன்று (21-04-2021) தினசரி கொரோனா உயிரிழப்பு 2,000-ஐ கடந்திருக்கிறது. கொரோனா தாக்கம் குறைந்தபோது பிரதமர் மோடிக்கு பல தரப்பினரிடமிருந்து பாராட்டு கிடைத்தது. தற்போது, 2-வது அலையின் தீவிரம் கடுமையாகியிருக்கும் சூழலில், பிரதமர் மோடி மீது எதிர்க் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

இந்நிலையில், ஒரே நாளில் 2.59 லட்சம் புதிய தொற்றாளர்கள் உறுதிசெய்யப்பட்ட நாளில் காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, “தற்போது நாடு கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. மக்களின் உயிரைக் காப்பாற்ற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்” என்று குறிப்பிட்டார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்துவிட்டதாக எதன் அடிப்படையில் எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகிறீர்கள் என்ற கேள்வியை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரிடம் முன்வைத்தோம்.

“கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கெரோனா பாதிப்பு குறைந்தபோது, ‘கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோம்’.. ‘கொரோனாவை வென்றுவிட்டோம்’ என்று மத்தியில் ஆளுவோர் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். பிரதமர் மோடியை ‘வேக்சின் குரு’ என்றெல்லாம் புகழவும் ஆரம்பித்துவிட்டனர். ஆனால், கொரோனாவின் 2-வது அலை வரப்போகிறது என்பதை அவர்கள் யோசிக்கவே இல்லை. அப்போது, கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று ராகுல் காந்தி எச்சரித்தார். 2-வது அலையை கணிப்பதற்கு மத்திய ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள். அது மிகப்பெரிய தவறு. இன்றைக்கு நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருப்பதற்கு அதுதான் காரணம்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. சுமார் 140 கோடி மக்கள் தொகை நம் நாட்டில் 100 கோடிப் பேருக்காவது கொரோனா தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற திட்டமிடலுடன், அதற்கான ஆர்டர்களைக் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, தடுப்பூசி வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று ஆட்சியாளர்கள் சொன்னார்கள். அப்படியென்றால், அதிகபட்சம் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், வெறும் 12 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிலும், இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் என்று பார்த்தால், வெறும் மூன்று கோடி பேர் மட்டும்தான்.

உள்நாட்டு தேவையே அதிகமாக இருக்கும்போது, இவர்கள் அண்டை நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்துவிட்டார்கள். அது மிகப்பெரிய தவறு. இன்றைக்கு இரண்டாவது அலை வீசும்போதும் நம்மிடம் போதுமான தடுப்பூசிகள் இல்லை. 18 வயதுக்கு மேல் தடுப்பூசி போடப்படும் என்றும், தடுப்பூசியை மாநில அரசு வாங்கிக்கொள்ளும் என்றும் இப்போது மத்திய ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். அவ்வளவு நிதிக்கு மாநில அரசுகள் எங்கே போகும்? இது, பொறுப்பை மாநில அரசுகளின் தலையில் கட்டிவிடும் செயல்.

தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு மற்ற மாநிலங்களைவிட நன்றாக இருப்பதால், நிலைமை சமாளிக்க முடிகிறது. இங்கு சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவுதான். ஆனால் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் நிலைமை மிக மோசம். அந்த மாநிலங்களில் பதில் சொல்லக்கூட ஆள் கிடையாது. போதிய ஆம்புலன்ஸ்கள் இல்லை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லை. இது மிகப்பெரிய சோகம். பரிசோதனை மையங்களே கிடையாது. அங்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால், 20 பேருக்கு கொரோனா உறுதியாகியிருக்றிகது என்று அர்த்தம். அந்த 20 பேருக்கு டெஸ்ட் செய்ய முடியவில்லை. அப்படி கொரோனா தொற்று டெஸ்ட் மூலமாக உறுதிசெய்யப்படாமல் ஏற்படும் மரணங்களை கொரோனா மரணம் என்ற கணக்கில் சேர்ப்பதில்லை.

அமித் ஷா
அமித் ஷா

அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவித்துவிட்டார்கள். அதிலும் குறிப்பாக, பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்தான் அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கிறார்கள். மத்திய அரசுக்கான மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்பட்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது. ஆனால், நிபுணர் குழுவின் ஆலோசனையை அவர்கள் பெறுவது போலவே தெரியவில்லை.

தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட 12 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றை மத்திய பா.ஜ.க அரசு முழுமையாகப் பயன்படுத்தத் தவறிவிட்டது. குஜராத் மாநிலம் மட்டும்தான் அவர்களுக்கு மாடல். அதைத் தவிர வேறு பார்வையே அவர்களுக்கு கிடையாது. இன்றைக்கு மோடியின் ‘குஜராத் மாடல்’ எப்படி இருக்கிறது என்பதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

பி.எம். கேர்ஸ் என்பது ஒரு மர்மதேசம் போல இருக்கிறது. அதற்கு எவ்வளவு நிதி வந்தது, அதை என்ன செய்தார்கள் என்பதே தெரியவில்லை. நாடாளுமன்றத்திடம்கூட அதை அவர்கள் தெரிவிக்கத் தயாராக இல்லை. இந்த நிலையில், ஜி.எஸ்.டி-யில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பங்கை மத்திய அரசு வழங்கவில்லை. இப்படியான சூழலில், கொரோனா தடுப்பூசியில் 50 சதவிகிதம் மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்கிறார்கள். பணத்துக்கு மாநில அரசுகள் எங்கே போகும்? கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மோடி அரசு எந்தளவுக்கு தோல்வியடைந்திருக்கிறது என்பதற்கு இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

நிலைமை கைமீறிப் போகிறது என்ற சூழலிலும், மோடி அரசு தன் தவறுகளையும் பலவீனங்களையு சரிசெய்துகொள்ளத் தயாராக இல்லை. மத்திய அரசின் செயலற்ற தன்மையை சுட்டிக்காண்பித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதற்காக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை எந்தளவுக்கு விமர்சிக்கிறார்கள் என்பதிலிருந்து அதைப் புரிந்துகொள்ளலாம்” என்றார் மாணிக்கம் தாகூர்.

எதிர்க் கட்சியினரின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பா.ஜ.க-வின் மாநில செய்தித்தொடர்பாளரான வழக்கறிஞர் குமரகுருவிடம் பேசினோம். “இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, 2-வது அலை ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டம்வரை மத்திய பா.ஜ..க அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஆனால், கொரோனாவிட மோடி எதிர்ப்பு என்பதுதான் பெரிய நோயாக இருக்கிறது. என்ன செய்தாலும் அதைத் தவறு என்று சொன்னால், என்ன தான் செய்வது?

குமரகுரு
குமரகுரு

அரசியல் செய்வதுதான் எதிர்க் கட்சிகளின் வேலை. எனவே, அவர்கள் அரசியல் செய்கிறார்கள். இந்தளவுக்கு கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததற்கு தேர்தல்தான் முக்கியக் காரணம். எனவே, தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று மத்திய அரசு சொல்லியிருந்தால், அதற்கு எதிர்க் கட்சியினர் என்ன செய்திருப்பார்கள்? தோல்வி பயத்தால் தேர்தலைத் தள்ளிவைக்கச் சொல்கிறார்கள் என்று மத்திய அரசை விமர்சித்திருப்பார்கள். ‘ஐந்து மாநிலங்களில்தானே தேர்தல். அப்படியென்றால், மகாராட்டிராவிலும், குஜராத்திலும், உ.பி-யிலும் ஏன் கொரோனா பரவுகிறது’ என்றும் எதிர்க் கட்சிகள் கேட்பார்கள். 2-வது அலை வந்துவிட்டது. எனவே, இந்தியாவில் பல மாநிலங்களிலும் கொரோனா பரவுகிறது. இதை எல்லோரும் சேர்ந்துதான் எதிர்கொள்ள வேண்டும். எல்லோரும் சேர்ந்துதான் சரிசெய்ய வேண்டும்.

தடுப்பூசி விவகாரத்தில் எதிர்க் கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டு தவறானது. முதலில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, முன்களப் பணியாளர்களுக்கு என்கிற முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆரம்பத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களுக்கு பெரும் தயக்கம் இருந்தது. எனவே, மத்திய அரசு விழிப்புணர்வை நடவடிக்கையையும் மேற்கொண்டது. தடுப்பூசி தேவையில்லை என்று சில எதிர்க் கட்சியினர்கூட சொன்னார்கள். நடிகர் விவேக் மரணம்கூட சர்ச்சையாக்கப்பட்டது. தடுப்பூசி என்றாலே, அது மோடி ஊசி என்று நினைக்கிறார்கள். எனவே, மோடி ஊசி போடாதீர்கள் என்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? தடுப்பூசிகள் தயாராக இருந்தும், மக்கள் வராததால் மருத்துவமனைகள் வெறிச்சோடிக் கிடந்தன. இன்றைக்கு கொரோனா அச்சம் அதிகமானதும், மக்கள் தடுப்பூசியைத் தேடிவருகிறார்கள். மக்களும் ஒத்துழைக்க வேண்டும். அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா மரணங்கள்...சடலங்கள் எரிப்பு
கொரோனா மரணங்கள்...சடலங்கள் எரிப்பு

கொரோனாவை வென்றுவிட்டோம் என்று மத்திய அரசு கொண்டாடியது என்ற விமர்சனம் தவறானது. ‘கொரோனா குறைந்துவிட்டது... இனி யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம்’ என்று பிரதமர் மோடி எப்போதாவது சொன்னாரா?

பெரிய மாநிலங்களைப் பிரித்து புதிய மாநிலங்கள்! -ராமதாஸ் கோரிக்கை வளர்ச்சிக்கு வழிவகுக்குமா? #LongRead

தடுப்பூசியைப் பொறுத்தவரையில் படிப்படியாகத்தான் நடைமுறைப்படுத்த முடியும். தற்போது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து வேலைகளையும் செய்துவிட்டுத்தான் அறிவிக்கப்பட்டது. தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது தவறே கிடையாது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

காரணம், கோவேக்சின் உள்நாட்டில் தயாரிக்கிறோம். கோவிஷீல்டு மருந்து வெளிநாட்டிலிருந்து வாங்கி, இங்கு பேக்கிங் செய்கிறோம். இது தொடர்பாக ஓர் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பெரிய நாடுகள் தனது அண்டை நாடுகளுக்கும் கோவிஷீல்டு ஊசி மருந்தைக் கொடுக்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தம். அது புரியாமல், மத்திய அரசை எதிர்க் கட்சிகள் விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்றார் குமரகுரு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு