Election bannerElection banner
Published:Updated:

`எங்கும் முள்வேலி; தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதா புதுவை?’ -முன்னாள் முதல்வர் ரங்கசாமி காட்டம்

முன்னாள் முதல்வர் ரங்கசாமி
முன்னாள் முதல்வர் ரங்கசாமி

”புதுச்சேரியில் தொழில் தொடங்க வருவதற்கே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர். டிசம்பர் மாதத்திற்குள் 5,000 பேருக்கு வேலை வழங்குவோம் என்று கூறினார்கள். 5 பேருக்காவது வேலை வழங்கியிருக்கிறார்களா?” –புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலையில் கூடியது. சட்டப்பேரவை நிகழ்வை புறக்கணித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ரங்கசாமி, “புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தை கூட்டுவதில் எந்த பலனும் இல்லை. இது நாடகமாக தெரிகிறது. எதிர்கட்சிகளுக்கு கூட தெரிவிக்காமல் திடீரென சட்டமன்றத்தை கூட்டுகின்றனர். ஒரு அமைச்சர் கட்சியில் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. மற்றொரு அமைச்சர் பதவியை விட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகிறது. இன்னொரு அமைச்சர் சட்டசபையின் வெளியே படுத்திருக்கிறார். இவை அனைத்தும் நாடகமாக இருக்கிறது. பொதுமக்களின் குறைகளை கேட்க யாரும் இல்லை. தேர்தல் வரும் சமயத்தில் சட்டமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் என்ன?

முன்னாள் முதல்வர்  ரங்கசாமி
முன்னாள் முதல்வர் ரங்கசாமி

எதற்கெடுத்தாலும் கவர்னர் மீது புகார் கூறுகினறனர். அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியவில்லை என்று கூறிவிட்டு சட்டமன்றத்தை ஏன் கூட்ட வேண்டும்? எதிர்கட்சிகள் பல விஷயங்களை கேட்டும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. எதிர்கட்சிகளின் புகார்களை காது கொடுத்து கேட்காதவர்கள் சட்டமன்றத்தை கூட்டுவதில் என்ன பயன் உள்ளது? எனவேதான் எதிர்கட்சிகள் யாரும் சட்டசபை நிகழ்வில் பங்கேற்க விரும்பவில்லை. அனைவரும் சட்டசபையை புறக்கணித்தோம்.

நீங்களே போராட்டம் நடத்துகிறீர்கள். இதனால் அரசு ஊழியர்கள் கோரிக்கையைக்கூட கேட்பதில்லை. இந்த அரசு அனைத்தையும் தனியாருக்கு கொடுக்க ஆர்வம் காட்டுகிறது. ஆலைகளை இவர்களே மூடிவிட்டு மீண்டும் திறக்க வேண்டும் என தீர்மானம் போடுகிறார்கள். மாநில அந்தஸ்து வேண்டாம் என ஒரு அமைச்சர் கூறுகிறார். தேர்தலுக்கு இன்னும் 2 மாதம்தான் உள்ளது. புதுவை முற்றிலுமாக சீரழிந்து கிடக்கிறது. சட்டமன்றம் வருவதற்குகூட முடியவில்லை. எங்கு பார்த்தாலும் தடுப்புகட்டைகள், வரலாறு காணாத வகையில் முள்வேலி அமைத்துள்ளனர். தீவிரவாதிகளின் கூடாரமாக புதுவை மாறிவிட்டதா?

சாலைகள் அனைத்தும் பழுதடைந்து கிடக்கிறது. எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியைக் கூட 3 ஆண்டுகளாக வழங்கவில்லை. புதுவைக்கு ஒரு தொழிற்சாலைகூட வரவில்லை. தொழிலதிபர்கள் புதுவையில் தொழில் தொடங்க வர அஞ்சுகின்றனர். டிசம்பருக்குள் 5,000 பேருக்கு வேலை தருவோம் என கூறினார்கள். 5 பேருக்காவது வேலை அளித்திருக்கிறார்களா? அதிகாரம் இல்லை என்று ஒருபுறம், அதிகாரம் உள்ளது என ஒருபுறம் சொல்கிறீர்கள். எதைப்பற்றியும் தெரியாத உங்களுக்கு எதற்கு அரசாங்கம்? மாநில வளர்ச்சி பின்னுக்கு சென்றுவிட்டது. சென்டாக்கில் பல குளறுபடிகள் நடக்கிறது. மாணவர்களின் குறைகளை கேட்பதற்குக் கூட அரசாங்கத்தில் யாரும் இல்லை.

Vikatan

ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியமே தவிர ஈகோ பார்க்கக்கூடாது. ஆனால் ஆட்சியாளர்கள் ஒதுங்கிப்போவதே வேலையாக வைத்துள்ளனர். ரோட்டில் படுப்பதும், சட்டசபையில் படுப்பதுவும்தான் திறமையா ? உங்களிடம் திறமையில்லை. திறமையோடு ஆள வேண்டும். மத்திய அரசின் கீழ் உள்ள புதுவையில் திறமையான நிர்வாகம் இருந்தால்தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும். பழியை மற்றவர்கள் மீது போடும் நிலையிலிருந்து ஆட்சியாளர்கள் மாற வேண்டும். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி ஒன்றாக இருக்கிறது” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு