Published:Updated:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுழற்றிய சாட்டை! - மோடி அரசை `கவனிக்க’த் தொடங்கிவிட்டதா உச்ச நீதிமன்றம்?

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

`மக்களுக்குத் தேவையானது எது; எதிரானது எது' என்பதையெல்லாம் விவாதித்துதானே நல்லதொரு முடிவை எடுக்க முடியும்!

நாடாளுமன்றத்தில், விவாதங்களின்றி நிறைவேற்றப்பட்டுவரும் சட்டங்களுக்கு எதிராகக் கோபக்குரல் எழுப்பியிருக்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா! நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியது. ஆனால், மாநிலங்களவை, மக்களவை இரு அவைகளிலும் 'பெகாசஸ் விவகாரத்தை' முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான அமளியில் ஈடுபட்டுவருவதால், அவையை நடத்த முடியாத சூழல் தொடர்கிறது. ஆனால், இந்தச் சச்சரவுகளுக்கு இடையேயும், மத்திய பா.ஜ.க அரசு, விவாதங்கள் எதுவுமின்றி புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருவது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

` `பெகாசஸ்' உளவு மென்பொருளின் வழியாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் செல்போன்களை மத்திய பா.ஜ.க அரசு உளவு பார்த்திருக்கிறது. இதன் மூலம் தனிமனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்ட பாசிச ஆட்சியாளர்கள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் மறுப்பு தெரிவிப்பதென்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற கொடுஞ்செயல்.

என்.வி.ரமணா
என்.வி.ரமணா

இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிக்கிடக்கும் இந்தச் சூழ்நிலையிலும்கூட, தங்களுக்கு வேண்டிய சட்டத் திருத்த மசோதாக்களை, எந்தவொரு விவாதமுமின்றி மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றிவருவது கொடுங்கோன்மையின் உச்சம்!' எனக் கொதிக்கின்றன எதிர்க்கட்சிகள். இதற்கிடையே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், `விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவது' குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர், ``அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திருத்தங்கள் குறித்தும், அந்தத் திருத்தங்கள் மக்களை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறவேண்டியது அவசியம். நீண்ட நாள்களுக்கு முன்பு, தொழில்துறை சிக்கல் குறித்த அறிமுகத்தின்போது, அந்தச் சட்டம் தொழிலாளர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது குறித்து தமிழக எம்.பி ஒருவர் நாடாளுமன்றத்தில் நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இது போன்ற விவாதங்கள் நடத்தப்படும்போதுதான் நீதிமன்றத்தின் சுமை குறையும். ஆனால், தற்போது நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் நடப்பதெல்லாம் எனக்கு மிகவும் வேதனையைத் தருகின்றன'' என்று கவலை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற வழக்கறிஞரும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவருமான சுதா, ``உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு என்றால், அது அமெரிக்கா; அதேபோல் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றால் அது இந்தியா என்பார்கள். ஆனால், இன்றைக்கு நாடாளுமன்ற ஜனநாயகமே கேள்விக்குறியாகிவிட்டது. மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதற்கும், மக்களுக்கான சட்டங்களை இயற்றுவதற்கும்தான் தங்கள் சார்பில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கின்றனர் பொதுமக்கள். ஆனால், அந்த உறுப்பினர்கள் பேசுவதற்கோ, விவாதிப்பதற்கோ அங்கே அனுமதி மறுக்கப்படுகிறது. `மக்களுக்குத் தேவையானது எது; எதிரானது எது' என்பதையெல்லாம் விவாதித்துதானே நல்லதொரு முடிவை எடுக்க முடியும்... அதற்கு வாய்ப்பே கொடுக்காமல், ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு உட்பட்டதையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வார்கள் என்றால், நாடாளுமன்றமோ, எதிர்க்கட்சிகள் என்ற ஜனநாயக அமைப்போ தேவையில்லையே!

சுதா
சுதா

15 நாள்கள் நடைபெறும் நாடாளுமன்றத்துக்கு பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஒருமுறைகூட வருவதில்லை. தினசரி அவைக்கு வந்து, முக்கியப் பிரச்னைகளை விவாதிக்க அனுமதி கோரும் எதிர்க்கட்சியினரைப் பார்த்து, 'பாராளுமன்றத்தை மதிக்கவில்லை இவர்கள்' என்று குறை சொல்லிவிட்டு, சராசரியாக 5 நிமிடங்களில் 20 சட்டங்களை விவாதமின்றி நிறைவேற்றிவிடுகின்றனர். இப்படியெல்லாம் நடப்பதால்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே, நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து வேதனைப்படுகிறார். மத்தியில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, தீர்ப்பளிக்கக்கூடிய இடத்திலுள்ள நீதிபதிகளே தங்களுடைய நியாயத்துக்காக வீதியில் வந்து போராடக்கூடிய சூழல்தானே நிலவுகிறது... பா.ஜ.க-வினரின் ஊழல் வழக்குகளை விசாரித்துவரும் நீதிபதிகளின் செல்போன்களும் வேவு பார்க்கப்படுகின்றன. பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசுகிற வழக்கறிஞர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்தநிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி இப்படியொரு கருத்தைத் தெரிவித்ததற்காக, நாளை அவரும்கூட மிரட்டப்படலாம்'' என்று அச்சம் தெரிவிக்கிறார்.

வேதாரண்யம் பஞ்சாயத்தின் பட்ஜெட்; 1,640 குடும்பங்களிடமும் நேரில் சமர்ப்பித்த ஊராட்சி மன்றத் தலைவர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான துரை கருணா நம்மிடம் பேசும்போது, ``மக்களாட்சி நெறிமுறைகளின்படி நடைபெறுகிற அரசாங்கத்தில், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டுத்தான் சட்டங்களும் திட்டங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்; அதுதான் ஆரோக்கியமான நடைமுறை. சின்னச் சின்ன பிரச்னைகளைக் குரல் வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றுவதென்பது நடைமுறையில் உள்ளதுதான். அதை உறுப்பினர்களும்கூட ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நாடு தழுவிய பிரச்னை அல்லது ஒரு மொழி, மாநிலம் சம்பந்தப்பட்ட முக்கியமான மசோதாக்கள் வருகிறபோது கட்டாயம் அது குறித்து விவாதித்தே நிறைவேற்றம் செய்ய வேண்டும். இதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை! எனவேதான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே இப்படியொரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்ல என்றாலும்கூட, தலைமை நீதிபதியே இப்படியொரு கருத்தைத் தெரிவித்திருப்பதென்பது அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படத்தக்கது.

துரை கருணா
துரை கருணா

மக்களவை, மாநிலங்களவை இரண்டிலுமே பெகாசஸ் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராடிவருகின்றன. ஆனால், சபாநாயகரோ, `இது விவாதத்துக்கான நேரம்... தயவுசெய்து அமருங்கள்' என்கிறார். ஆனாலும் எதிர்க்கட்சிகளும் ஓய்ந்தபாடில்லை. இறுதியில், `விவாதத்துக்கு எடுத்துக்கொண்டோம்... எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியினரும் பதிலளிக்கத் தயாராக இருந்தனர். ஆனாலும் சபையில் அமளி துமளி ஓயாத காரணத்தால், விவாதமின்றி நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது' என பா.ஜ.க-வினர் சொல்லிவிடுகிறார்கள்.

மாநில சட்டமன்றங்களில், எதிர்க்கட்சிகள் அடையாள எதிர்ப்பை நடத்திவிட்டு, மீண்டும் பேரவையில் கலந்துகொண்டு விவாதங்களில் பங்கெடுத்துக்கொள்ளும். ஆனால், நாடாளுமன்றத்திலோ அவையை இரண்டு, மூன்று முறை ஒத்திவைத்துவிட்டு மீண்டும் அவையைக் கூட்டும்போதும்கூட அதே ரகளை, அமளிதுமளிதான் தொடர்கிறது. மீண்டும் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுகிறது. இந்த நடைமுறைச் சிக்கல்களால், ஆளுங்கட்சியினரும் தாங்கள் நிறைவேற்றவேண்டிய தீர்மானங்களை, மசோதாக்களை நிறைவேற்றியே ஆகவேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். மேலும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் தங்கள் விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொள்வார்கள்தான்.

டெல்லி சிறுமி கொலை வழக்கு: `சிறார் வதைக்கான ஆதாரங்கள் இல்லை!' - போலீஸின் அதிர்ச்சி அறிக்கை

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரித்தறிவதற்காக குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இந்தச் சூழலில், எதிர்க்கட்சியினரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, தங்களுடைய வலுவான எதிர்க் கருத்துகளை அவையில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், ஆளுங்கட்சியினர் தங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்வதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சியினரே ஏற்படுத்திக்கொடுத்ததாக சூழல் மாறிவிடும்'' என்கிறார் எச்சரிக்கும் தொனியில்.

'விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்' என்ற சர்ச்சைக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசியபோது, `` `நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மசோதாவும் நிறைவேற்றப்படும்போது, விரிவான விவாதம் நடைபெற வேண்டும். அப்படி நடைபெற்றால்தான் மக்களுக்கோ அல்லது நீதித்துறைக்கோ எழும் சந்தேகங்களுக்கும் தெளிவு கிடைக்கும்; நீதிமன்றங்களின் பணிச்சுமையும் குறையும்.

கடந்த காலங்களில், மூத்த சட்ட மேதைகளெல்லாம் நாடாளுமன்றத்தில் இருந்திருக்கிறார்கள். புதிய மசோதாக்கள் நிறைவேற்றத்தின்போது இந்த மேதைகள் நடத்திய விரிவான விவாதங்களால் எங்களுடைய பணிச்சுமையும் பாதியாகக் குறைந்திருந்தது. ஆனால், இப்போதெல்லாம் அந்த வாய்ப்புகளே இல்லையே....' என்று மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

அவரது இந்தக் கருத்தை அப்படியே நான் எதிர்க்கட்சிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்ல விரும்புகிறேன். ஏனெனில், நாடாளுமன்றத்தின்போது ஒவ்வொரு மசோதாவையும் விவாதத்துக்காக முன்வைக்கிறது மத்திய அரசு. ஆனால், எதிர்க்கட்சிகளோ விவாதம் நடத்துவதற்கு விருப்பமில்லாமல், அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துக்கொண்டு நாடாளுமன்ற அவையை செயல்படவிடாமல் அமளி செய்துவருகின்றன.

ஒவ்வொரு துறையிலும் பல்வேறு திட்டங்கள், வளர்ச்சி, செயல்பாடு என மாற்றங்கள் வந்துகொண்டிருக்கும்போது தேவைக்கேற்றாற்போல் சட்டங்களும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், எதிர்க்கட்சிகளோ பெகாசஸ், வேளாண் சட்டம் ஏதாவது ஒன்றை முன்வைத்து மக்கள் நலத் திட்டங்களை பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருக்கின்றன. வேளாண் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் மட்டும்தான் எதிர்ப்புகள் உள்ளன. அதேபோல், பெகாசஸ் விவகாரத்திலும் `நாங்கள் உளவு பார்க்கவில்லை' என்று மத்திய அரசு எழுத்துபூர்வமாகவே பதிலளித்துவிட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் விடாப்பிடியாக நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்கி வைத்திருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்?'' என்று கேள்வி கேட்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு