Published:Updated:

பாஜக எதிர்ப்பு அலையை வலுப்படுத்த உதயநிதிக்கு சிறப்பு அசைன்மென்ட்?!

உதயநிதி

அகில இந்திய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அழைத்து வந்து தி.மு.க மாணவரணி சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட தேசிய மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டார்.

பாஜக எதிர்ப்பு அலையை வலுப்படுத்த உதயநிதிக்கு சிறப்பு அசைன்மென்ட்?!

அகில இந்திய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அழைத்து வந்து தி.மு.க மாணவரணி சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட தேசிய மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டார்.

Published:Updated:
உதயநிதி

கல்வி, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை முன்வைத்து தி.மு.க மாணவரணி சார்பில் சென்னையில் நடைபெற்ற தேசிய மாநாடு, அரசியல் வட்டாரத்தில் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அந்த மாநாட்டில் பல மாநிலங்களிலிருந்தும் பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் உரையாற்றும் உதயநிதி
மாநாட்டில் உரையாற்றும் உதயநிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரளா தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சரான பி.ராஜீவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யான சந்தோஷ்குமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்ஹையா குமார், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாதன், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதி, பத்திரிகையாளர் சீமா சிஷ்டி, வழக்கறிஞர் அருள்மொழி உட்பட பலர் இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினர். அவர்கள் அனைவரும் மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க மாணவரணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ-வின் முன்னெடுப்பில் நடத்தப்பட்ட அந்த மாநாட்டில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மற்றொரு சிறப்பு விருந்தினரான தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு மற்றும் பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கு எதிராக நீண்ட உரையாற்றினார். அப்போது, ``பா.ஜ.க ஆளாத அனைத்து மாநில அரசுகளும், மாநிலக் கட்சிகளும் மத்திய பா.ஜ.க அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

உதயநிதி, அன்பில் மகேஷ், பி.ராஜீவ், மஹுவா மொய்த்ரா, அருள்மொழி உள்ளிட்டோர்
உதயநிதி, அன்பில் மகேஷ், பி.ராஜீவ், மஹுவா மொய்த்ரா, அருள்மொழி உள்ளிட்டோர்

`திராவிடவியல் கோட்பாடு’, ‘திராவிட மாடல்’ குறித்து சமீபகாலமாக அழுத்தமாகப் பேசிவரும் முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடலை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று சொல்லிவருகிறார். அந்த வகையில், இந்த மாநாடு திராவிட கருத்தியலை பல மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்ததாக தி.மு.க-வினர் கூறுகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசு மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட அந்த மேடையின் கதாநாயகனாக உதயநிதி முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து தி.மு.க அரசுக்கு எதிராகவும், அதன் தலைவர்களுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் பா.ஜ.க தரப்பில் முன்வைக்கப்பட்டுவருகின்றன. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பா.ஜ.க-வால் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரித்துவருகிறது. முரசொலி நாளேட்டின் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி, பி.ராஜீவ், மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர்
உதயநிதி, பி.ராஜீவ், மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர்

இந்த நிலையில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்ற குரல்கள் கட்சிக்குள் தொடர்ந்து ஒலித்துவருகின்றன. விரைவில் அவருக்கு ‘பட்டாபிஷேகம்’ நடைபெறலாம் என்றும் செய்திகள் வருகின்றன. இப்படியான நேரத்தில், பல்வேறு மாநிலங்களிலிருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை ஒருங்கிணைத்ததில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று தி.மு.க வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

பா.ஜ.க எதிர்ப்பு உணர்வு மேலோங்கிய மாநிலமாக தமிழ்நாடு இருந்துவருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றதற்கு பா.ஜ.க எதிர்ப்பு உணர்வு முக்கியக் காரணம். ஆகவேதான், காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் வெறும் தேர்தல் கூட்டணியாக இல்லாமல், கொள்கைக் கூட்டணியாகத் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று தி.மு.க விரும்புகிறது.

உதயநிதி, அன்பில் மகேஷ், பி.ராஜீவ், மஹுவா மொய்த்ரா, அருள்மொழி உள்ளிட்டோர்
உதயநிதி, அன்பில் மகேஷ், பி.ராஜீவ், மஹுவா மொய்த்ரா, அருள்மொழி உள்ளிட்டோர்

இந்தச் சூழலில், தமிழகத்தில் நிலவும் பா.ஜ.க எதிர்ப்பலையை மேலும் வலுப்படுத்துவதற்காக தனது மாணவரணியையும் இளைஞரணியையும் தி.மு.க தலைமை களமிறக்கியிருக்கிறது. ``கல்வி, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் குறித்த மாநாட்டை கழக மாணவரணி சிறப்பாக நடத்தியதைக் கண்டு பெருமையடைகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார். மேலும், “திராவிட மாடல் அரசியலை இந்தியா முழுவதும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு நடைபெற்றதைக் கண்டு பெருமையும் பூரிப்பும் அடைகிறேன்” என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, “சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, மதுரையில் ஒரு செங்கலை எடுத்துக்காட்டி, இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று பா.ஜ.க-வை அலறவிட்டவர் உதயநிதி ஸ்டாலின். எனவே, பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியலைச் சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை தி.மு.க தலைமைக்கு இருக்கிறது. உதயநிதி தன் இலக்கை நோக்கி ஸ்டெடியாக சென்றுகொண்டிருக்கிறார்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism