தமிழ்நாட்டில் பழைமையான கோயில்களில் இருக்கும் சிலைகள் காணாமல்போனது தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி-யாக பொன் மாணிக்கவேலை நியமித்தது. அவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை விசாரித்து சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்தார்.
இதற்கிடையே சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளைக் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி-யாக இருந்த காதர்பாஷா பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராகப் பொய் வழக்கு பதிவுசெய்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது அவர், ``சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடுகிறது'' என்றார்.
