திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்திருக்கும் காளத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சீனிவாசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் 26.06.2022 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வழக்கு தொடர்பான கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 14 இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருக்கின்றன. எஞ்சியவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார். மேலும், தமிழ்நாட்டில் தற்போது வரை 1,100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இதைத் தடுக்கவேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக்கொண்டிருப்பதாகக் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். கோயில் நிலங்கள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுவதாக, வழக்குகள் தொடரப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெறும் ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். ``கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் வரை அறநிலையத்துறை அதிகாரிகள் என்னதான் செய்கிறார்கள்?’’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ``ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்துக்கு வந்த பிறகு நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடாமல் இருப்பது எதற்காக?’’ என்றும் கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு கோயில்கள் இன்னும் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம். 50 ஆண்டுக்காலமாக இருக்கிற ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், இப்போது கடந்த ஓராண்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. கோயில் நில குத்தகை மூலம் வருமானம் வருவதால், அது இந்து சமய அறநிலையத்துறைக்குப் பயனளிக்கும் என்பதால்தான், கோயில் நிலங்களைக் குத்தகைக்குவிட நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது” என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இது தொடர்பாக விளக்கம் கேட்பதற்கு துறைச் செயலாளரைத் தொடர்புகொண்டோம். அவர் ‘ஆணையர் அலுவலகத்தில் பேசிக்கோங்க’ என்றார். இதையடுத்து ஆணையர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசியபோது, கொஞ்ச நேரம் விவாதித்துவிட்டு ஓர் எண்ணைக் கொடுத்து ``எஸ்.ஓ-விடம் பேசுங்கள்’’ என்றார்கள். அந்த எண்ணுக்கு அழைத்தால் ‘அந்த எண் செயலில் இல்லை' என்றது.
இந்த விகாரம் குறித்து சமூகச் செயற்பாட்டாளர் விநாயகம், ``தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ், கிராமத்திலுள்ள சிறு கோயில்கள் முதல் மதுரை, திருவண்ணாமலை, திருச்செந்தூர் போன்ற பெரிய கோயில்கள் வரை மொத்தம் 36,000 கோயில்கள் இருக்கின்றன. இதன் பராமரிப்பு அல்லது நிர்வாகத்தின் கீழ் 4,78,272 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதை 1.கோயில் பணியாளர்கள், குருக்கள், வேலை செய்பவர்கள் உள்ளடக்கிய குடியிருப்புகள், 2 .வணிகக் கட்டடங்கள், 3.விவசாய நிலம், 4.பண்ணையிடம் என நான்கு வகைகளாக வகைமைப்படுத்தப்பட்ட்டிருக்கிறது. கோயில் நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இருக்கின்றன. இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் இந்து அறநிலையத்துறை, `40ஆயிரம் ஏக்கர் நிலத்தை வணிக நிறுவனங்கள், தனிநபர்கள், பணியாளர்கள் எனச் சேர்ந்து 1,640 பேர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக அடையாளம் கண்டிருக்கிறோம்’ எனத் தெரிவித்திருக்கிறது.

இதையடுத்து கோயில் நிலத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் திட்டத்தை அறிவித்தார்கள். கடந்த எட்டு மாதங்களாக நடந்த பணிக்குப் பிறகு முதல் தவணையாக 3,43,647 ஏக்கர் இடம் பதிவேற்றப்பட்டது. இன்னும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட நிலம் பதிவேற்றம் பண்ண வேண்டியிருக்கிறது. இந்த ஒரு லட்சம் ஏக்கர் இடத்தைத்தான் ரெவின்யூ ரெக்கார்டில் ஆக்கிரமிப்பாளர்கள் சொந்தப் பெயருக்கு மாற்றியுள்ளனர் என்று சர்ச்சையாகியிருக்கிறது. அதில்தான் 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள கோயில் நிலங்களும் ஆவணரீதியாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்பது குற்றச்சாட்டு. இது அடுத்தகட்ட ஆய்வுக்குப் போக வேண்டும்” என்கிறவர், “சமீபத்தில் இதே நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டுத் தலம் மீது நீதிமன்றமும் அரசாங்கமும் அவகாசம் கொடுத்து கரிசனம் காட்டியது. இந்த வழக்கில் மட்டும் ஏன் இவ்வளவு ஆவேசம்?” என்கிற கேள்வியை முன்வைக்கிறார் விநாயகம்.