கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன், சிங்கப்பூருக்குப் பறந்துசென்றுவிட்டார் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி. தீவிரமான தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு, சில நாள்கள் ஓய்வுவெடுக்கும் திட்டத்துடன் அவர் சிங்கப்பூர் சென்றிருப்பதாக ஒரு தகவலும், மருத்துவப் பரிசோதனைக்காக அவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார் என்று மற்றொரு தகவலும் றெக்கை கட்டுகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் குமாரசாமி. மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களை ஆதரித்து ‘பஞ்சரத்ன யாத்ரா’வை அவர் மேற்கொண்டார். காய்ச்சல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் சில பிரச்னைகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மிகக் குறைந்த இடங்களே கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதனால், குமாரசாமியும் அவருடைய கட்சியினரும் கவலையில் இருப்பதாகச் செய்திகள் தெரிவித்த நிலையில்தான், அவர் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மிகக் குறைவான இடங்களே கிடைக்கும் என்று சொன்னாலும், `மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்’ என்ற நம்பிக்கையில் குமாரசாமி இருக்கிறார் என்பது, அவரது சிங்கப்பூர் பயணத்தின் மூலம் தெரியவருகிறது. தேர்தல் முடிந்தவுடன் சிங்கப்பூருக்கு குமாரசாமி செல்வது இது முதன்முறை அல்ல. 2018-ம் ஆண்டும், கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன், அவர் சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.
ஒரு கட்சித் தலைவராக தனது பொறுப்புகளை உதறிவிட்டு அவர் சென்றுவிட்டார் என்று குமாரசாமியை அப்போது பா.ஜ.க விமர்சித்தது. அதற்கு, சிங்கப்பூர் பயணம் குறித்து தன் கட்சிக்குத் தெரிவித்துவிட்டேன்... ஒரு சில நாள்களில் ஊர் திரும்பிவிடுவேன் என்றும் குமாரசாமி பதிலளித்தார்.

2018-ம் ஆண்டு மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்தவுடன் சிங்கப்பூருக்குச் சென்ற குமாரசாமி, அவருடன், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.பி-யான குபேந்திர ரெட்டி உள்ளிட்ட சிலரும் சிங்கப்பூர் சென்றனர். மே 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருந்த நிலையில், மே 14-ம் தேதி இரவு அவர் பெங்களூருக்குத் திரும்பினார்.
அந்தத் தேர்தலில், 104 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க வெற்றிபெற்றது. காங்கிரஸுக்கு 78 இடங்கள், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்தித்து குமாரசாமி தலைமையில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தலுக்குப் பிறகு கைகோத்ததை தேசிய அரசியல் வட்டாரம் வியப்புடன் பார்த்தது. இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்தார்கள் என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். அப்போதுதான், குமாரசாமியின் சிங்கப்பூர் பயணம்தான் அதற்கு காரணம் என்று உள்விவகாரம் அறிந்த சிலர் பேச ஆரம்பித்தனர்.
காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஆட்சியமைக்க உரிமை கோரியபோதிலும், எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர். அதன் பிறகு, 24 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், மூன்றே நாள்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.
அதன் பிறகுதான், குமாரசாமியின் முதல்வர் கனவு பலித்தது. அதே கதைதான் தற்போதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள். காங்கிரஸ் கட்சிக்குத்தான் பெரும்பான்மை கிடைக்கும்... 113 இடங்களுக்கு மேல் காங்கிரஸுக்குக் கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனாலும்கூட, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்கிற நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு உள்ளேயும் விவாதங்கள் நடைபெறுகின்றன.
இந்தச் சூழலில்தான், குமாரசாமி திடீரென சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அவருடன் இரண்டு நண்பர்கள் மட்டுமே சென்றிருப்பதாகவும், குடும்பத்தினர் யாரும் செல்லவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன. மேலும், மருத்துவப் பரிசோதனைக்காக அவர் சிங்கப்பூர் சென்றிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், சிங்கப்பூரில் அவர் எந்தவொரு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.

குமாரசாமியின் கணக்கே வேறு. கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம் என்கிற நிலை ஏற்படும் பட்சத்தில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சேருவது குறித்து காங்கிரஸுடனும் பா.ஜ.க-வுடனும் ரகசியப் பேச்சவார்த்தை நடத்துவதற்காக அவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார் என்பதுதான் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. ஆனால், வாக்கு எண்ணிக்கை நாளான நாளை காலை அவர் பெங்களூரு திரும்பிவிடுவார் என்றும் சொல்கிறார்கள். 2018-ல் சிங்கப்பூர் பயணத்துக்குப் பிறகு கிங் ஆக மாறிய குமாரசாமியால், இந்த முறையும் கிங் ஆக முடியுமா என்பது தெரியவில்லை. கிங் ஆக முடியவில்லையென்றால், கிங் மேக்கராக அவர் மாறவும் வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன நடக்க இருக்கிறது என்று நாளை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்!