Published:Updated:

``மறைந்த ஒரு தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதா?!” - கே.கே.எஸ்.எஸ்.ஆரைச் சாடிய கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

``ஜெயலலிதாவைப் பற்றிப் பேசி கே.கே.எஸ்.எஸ்.ஆர் தன்னை அசிங்கப்படுத்திக்கொண்டார். மறைந்த ஒரு தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசுவது என்பது கண்டனத்துக்குரியது” என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருக்கிறார்.

``மறைந்த ஒரு தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதா?!” - கே.கே.எஸ்.எஸ்.ஆரைச் சாடிய கடம்பூர் ராஜூ

``ஜெயலலிதாவைப் பற்றிப் பேசி கே.கே.எஸ்.எஸ்.ஆர் தன்னை அசிங்கப்படுத்திக்கொண்டார். மறைந்த ஒரு தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசுவது என்பது கண்டனத்துக்குரியது” என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருக்கிறார்.

Published:Updated:
கடம்பூர் ராஜூ

சென்னை, சைதாப்பேட்டையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ``கருணாநிதியைப் போன்ற பெருந்தலைவர்கள் இருக்கும் தமிழ்நாட்டில், ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகப்படுத்தி தமிழ்நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு. நல்லா இருந்த நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு” என கூறியிருக்கிறார்.  

இதற்கு, ``ஜெயலலிதாவைப் பற்றி கே.கே.எஸ்.எஸ்.ஆர் கூறியதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்திருக்கிறார். அவரின் இந்தப் பேச்சுக்கு பல முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்  கண்டனம் தெரிவித்தனர்.   

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்பே  திரைத்துறையில் அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். எம்.ஜி.ஆர்தான் ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகம் செய்துவைத்தார். சத்துணவுத் திட்டம் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்கும் பொறுப்பு ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகப்படுத்தியதில் எனக்கும் பங்கு உண்டு என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதாவைப் பற்றி பேசி, அவரே தன்னை அசிங்கப்படுத்திக்கொண்டார். மறைந்த ஒரு தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசுவது என்பது கண்டனத்துக்குரியது. ஆசிட் வீச்சின்போது கே.கே.எஸ்.எஸ்.ஆரின் முகம் பாதிக்கப்பட்டபோது, நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்து உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, அவரது உயிரைக் காப்பாற்றியது ஜெயலலிதாதான். `தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க பகுதிகளுக்குள்  நுழைந்தால், அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டிப் போரட்டம் நடத்துவோம். ஜெலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க அழிந்துவிடும்’ எனக் கூறியவர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நடந்துவருகிறது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

 அ.தி.மு.க-வைச் சிலர் பிளவுபடுத்த முயல்கின்றனர். ஆனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணி வகுத்திருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியைவிட்டு பா.ம.க வெளியேறவில்லை. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் கூட்டணி முடிவுசெய்யப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். அ.தி.மு.க-வால் பலனடைந்த கட்சிகள் ஏராளம். ம.தி.மு.க., பா.ம.க போன்ற சரியான அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அங்கீகாரம் கொடுத்தது அ.தி.மு.க-தான்” என்றார்.