சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் இரண்டாவது தெருவில் இருக்கிறது பேராசிரியர் க.அன்பழகனின் வீடு. வார நாள் ஒன்றின் காலை நேரத்தில் அமைதியாகக் காட்சியளிக்கிறது அவரது வீடு. வயது முதிர்வால் ஓய்வில் இருக்கிறார் பேராசிரியர்.
திராவிட இயக்க வரலாற்றில் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் எத்தனையோ பேர் ஈடுபட்டிருந்த போதும், அனைவராலும் `பேராசிரியர்' என அன்போடு அழைக்கப்படுபவர் பேராசிரியர் க.அன்பழகன். முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி அவரை, `இனமான பேராசிரியர்' என்று அழைத்தார். தி.மு.கவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வரும் பேராசிரியர் அன்பழகன் தற்போது படுத்த படுக்கையாக இருந்தாலும், கடந்த சில நாள்களுக்கு முன்புவரை கட்சியின் அறிவிப்புகள் அவர் அனுமதியோடுதான் வெளிவந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
97 வயதான பேராசிரியர் அன்பழகன் கருணாநிதியை விட ஒன்றரை வயது மூத்தவர். அவரது இயற்பெயர் ராமையா. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த போதே சுயமரியாதைக்காரராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ராமையாவை, பேரறிஞர் அண்ணா திருவாரூரில் முஸ்லிம் இளைஞர்கள் நடத்திய மாநாடு ஒன்றில் பேச வைத்தார். திராவிடத்தையும் சுயமரியாதையையும் ராமையா அனல்பறக்கப் பேச, அந்தக் கூட்டத்திற்கு அண்ணாவைக் காண வந்திருந்த திருவாரூர் இளைஞர் கருணாநிதி, ராமையாவைச் சந்தித்தார். அங்கு தொடங்கியது கருணாநிதிக்கும் அன்பழகனுக்குமான நட்பு. ஏறத்தாழ 75 ஆண்டுக்கால நட்பு.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபெரியாரிடம் சுயமரியாதையைக் கற்றிருந்த ராமையா, தனித்தமிழில் பெயர் சூட்ட விரும்பி, தனது பெயரை `அன்பழகன்' என மாற்றிக்கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்த அன்பழகன், அதன்பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். பேராசிரியராக இருந்த போதும், இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த அன்பழகனை, அண்ணா `பேராசிரியர் தம்பி!' என்று அழைத்து வந்தார். அதுவே அவரது நிரந்தரப் பட்டமாகிப் போனது.

பெரியார் - அண்ணா இருவருக்கிடையிலான முரண்பாடுகள் பெருக, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அண்ணா. அன்றைய காலகட்டத்தில், அண்ணாவுக்காகப் பெரியாரை விட்டு விலகியவர்களில் அன்பழகனும் ஒருவர். தி.மு.க தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரையிலான அதன் வளர்ச்சியைக் கண்டுகொண்டிருப்பவர் பேராசிரியர் அன்பழகன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக ஒருமுறையும் சட்டமன்ற உறுப்பினராக 9 முறையும் நாடாளுமன்ற உறுப்பினராக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன். 1977-ம் ஆண்டு முதல் தற்போது வரை, தி.மு.கவின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். தி.மு.க ஆட்சிக் காலங்களில் நிதித்துறை, கல்வித்துறை முதலானவற்றிற்கு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது வயது மூப்பின் காரணமாக படுக்கையில் இருக்கிறார் அன்பழகன். குடும்பத்தினரின் கவனிப்போடும் செவிலியர்கள் உதவியோடும் வாழ்ந்து வருகிறார். ``பேசுவதைப் புரிந்துகொள்கிறார். சில நேரங்களில் ஓரிரு வார்த்தைகள் பேசுகிறார்" என்று கூறுகின்றனர் அவரைச் சுற்றி இருப்பவர்கள். குளிர்காலம் என்பதால் அவரை வெளியில் நடமாட அழைத்து வருவதில்லை என்றனர். அவருக்கு மூக்குக் குழாய் மாட்டப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்பழகன். அதன்பிறகு, ஜனவரி மாதத்தில் குணமாகி வீடு திரும்பினார். கருணாநிதி மறைந்த பிறகு, அன்பழகன் பேசுவது குறைந்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.
அவ்வப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து பார்த்துச் செல்கிறார். தற்போது அன்பழகனின் பேரன்தான், தனது தாத்தாவைப் பார்க்க வருபவர்களைச் சந்திக்கிறாராம்.
மாணவராகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய பேராசிரியர் அன்பழகன் தமிழக அரசியலின் முக்கிய பங்கு வகித்தவர்; மாணவர்கள் அரசியலை நோக்கி வராத நிகழ்காலத்தில், இவரைப் போன்ற பேராசிரியர்கள் நிச்சயம் தேவை.