அரசியல்
அலசல்
Published:Updated:

“தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லவே இல்லை!” - அடித்துச் சொல்லும் அமைச்சர் மா.சு

மா.சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
மா.சுப்பிரமணியன்

இரண்டு மாதங்களுக்கு முன்பாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மருந்துத் தட்டுப்பாடு இருந்தது உண்மைதான்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், சட்டமன்ற நிகழ்வுகள், எதிர்க்கட்சியினரின் தர்ணா போராட்டம், வெளியேற்றம் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளோடு, தமிழகத்தில் மருந்துத் தட்டுப்பாடு சர்ச்சை, டெங்கு பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, எனத் துறைசார்ந்த பல்வேறு கேள்விகளோடு மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனைச் சந்தித்தேன்...

“சட்டமன்றத்தில் இ.பி.எஸ் தரப்புமீது பாரபட்சமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விமர்சிக்கப்படுகிறதே?”

“ஒரு மணி நேரத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், பேச நேரம் தருகிறேன் என்று சபாநாயகர் பலமுறை சொல்லியும் அவர்கள் அதைக் கொஞ்சம்கூட கேட்கவே இல்லை. முன்னேற்பாடாக, கோஷங்களை பேப்பரில் பிரின்ட்அவுட் எடுத்து வந்திருந்தனர். அவையில் கலகம் செய்ய வேண்டும், அமளியில் ஈடுபட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே அவர்கள் வந்திருந்தனர் என்பது தெளிவாகத் தெரிந்தது.”

 “தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லவே இல்லை!” - அடித்துச் சொல்லும் அமைச்சர் மா.சு

“சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆணையங்களின் விசாரணை முடிவுகள்மீது அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?”

“ ‘அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும்’ என்று நாங்கள் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருந்தோம். ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் அந்தப் பணி நிறைவேறியிருக்கிறது. அதேபோல, ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், எடப்பாடி நினைத்திருந்தால் கலவரத்தைத் தவிர்த்திருக்க முடியும். அலட்சியமாகவும் அசட்டையாகவும் இருந்துவிட்டார்’ என்று அருணா ஜெகதீசன் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக, நான்கு காவலர்கள், மூன்று வருவாய் வட்டாட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். `யார் தவறு செய்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள்மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.”

“இந்தச் சட்டமன்றக் கூட்டத்தில் தி.மு.க அரசு கொண்டுவந்த வேறு முக்கிய மசோதாக்கள், தீர்மானங்கள் என்னென்ன?”

“ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்துவதற்கான அவசரச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஹூக்காவைத் தடைசெய்யும் சட்டத் திருத்தம் நிறைவேறியிருக்கிறது. மேலும், இந்தித் திணிப்புக்கு எதிராகத் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றில் இந்தி கட்டாயமாக்கப்படும் சமயத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“அப்படியான தருணத்தில் எதிர்க்கட்சிகள் உடன் இல்லாதது சரிதானா?”

“அவர்களும் உடனிருந்து அதை நிறைவேற்றிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இல்லையே... அன்றைய தினம் அவர்களின் செயல்பாடுகள் மிகவும் மோசமான முன்னுதாரணம்.”

“தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் வருகை தருகிறார்களே?”

“தமிழகத்தில் சில திட்டங்கள் ஒன்றிய அரசின் நிதி உதவியில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அவற்றை ஆய்வு செய்வதற்காக வருவதாகச் சொல்கிறார்கள். கடந்த எட்டு வருடங்களில், ஒன்றிய அமைச்சர்கள் இங்கு வந்து அப்படி ஆய்வு நடத்தியிருந்தால் பரவாயில்லை. ஆனால், அப்படி எதுவும் இல்லை. வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதோ என்ற சந்தேகம் உருவாகிறது. அவர்கள் எதற்காக வந்தாலும், இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் அச்சமற்று செயலாற்றிவருகிறது.”

“தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில், மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாகச் சர்ச்சை இருக்கிறதே?”

“இரண்டு மாதங்களுக்கு முன்பாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மருந்துத் தட்டுப்பாடு இருந்தது உண்மைதான். ஆனால், அது அப்போதே சரிசெய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள 32 மருந்துக் கிடங்குகளில் தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பு இருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் மருந்து கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.”

“அப்படியானால், இந்தச் சர்ச்சை கிளம்பக் காரணம் என்ன?”

“அது குறித்து விசாரணை செய்யப்பட்டது. மருந்துக் கிடங்குகளில் நீண்டகாலமாகப் பணியாற்றிய சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் கிளப்பிவிட்ட வதந்தி என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அடித்துச் சொல்கிறேன், தமிழ்நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு என்பது இல்லவே இல்லை. தட்டுப்பாடு இருப்பதாகச் சொல்பவர்கள், எந்த முன் அனுமதியும் இல்லாமல் நேரடியாக மருந்துக் கிடங்குகளுக்குச் சென்று பார்க்கலாம் அல்லது 104-க்குப் புகார் தெரிவிக்கலாம். கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.”

“பருவமழை தொடங்கவிருக்கிறது. டெங்கு உள்ளிட்ட நோய்ப் பரவல்களைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன?”

“டெங்கு, காலரா உள்ளிட்ட பல்வேறு நோய்ப் பரவலுக்கான தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னரே நகராட்சி, ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு ஆகிய மூன்று துறைகளின் அமைச்சர்கள், செயலாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பருவமழைக்கு முன்பாகவே இந்த மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது இதுவே முதன்முறை.”

“ `முதல்வரின் பேச்சை அமைச்சர்கள் கேட்பதில்லை’ என்று தொடர்ந்து விமர்சனம் எழுகிறதே?”

“மிகவும் தவறு. தளபதி மிகவும் கட்டுப்பாடான தலைவர். ஜனநாயகத்தின்மீது அதிக நம்பிக்கை கொண்டவர். அனைத்து அமைச்சர்களும் அவர்மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார்கள். பொதுக்குழுவில் அவர் பேசியது, ஒரு குடும்பத்தில் மற்றொருவரின் செயலை உரிமையோடு சுட்டிக்காட்டிப் பேசுவது போன்றதுதான். இதில் விமர்சனத்துக்கு இடமில்லை.”

“தி.மு.க-வைத் தமிழக பா.ஜ.க தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருகிறதே?”

“தமிழ்நாட்டில் பா.ஜ.க என்று ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியினர் தங்கள் கட்சி வளர்ச்சிக்காக எதை எதையோ பேசிக்கொண்டு, செய்துகொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி, ஆக்கபூர்வமான விமர்சனங்களை தி.மு.க எப்போதுமே ஏற்றுக்கொள்ளும். ஆனால், தி.மு.க-வை அர்த்தமற்று விமர்சித்து வளர்ச்சியடைய வேண்டும் என்று நினைத்தால், அது தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது!”