Published:Updated:

சட்டம்-ஒழுங்கு பிரச்னை: ``ஆதாரத்தோடு பேசுங்க!" - ஸ்டாலின் Vs இபிஎஸ்; காரசார விவாதம்

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை: ``ஆதாரத்தோடு பேசுங்க!" - ஸ்டாலின் Vs இபிஎஸ்; காரசார விவாதம்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. நேற்று கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் கறுப்புச் சட்டை அணிந்துவந்தனர்.

அதைத் தொடர்ந்து சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைகள் அதிகரித்திருக்கின்றன. சென்னையில் நடந்த தி.மு.க கூட்டத்தில் பெண் போலீஸுக்கே பாதுகாப்பு இல்லை" என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ``அ.தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றிய பட்டியல் என்னிடம் இருக்கிறது. அப்போது சட்டம்-ஒழுங்கு எப்படிச் சீரற்று இருந்தது என்பதை நான் ஆதாரத்தோடு சொல்வேன்.

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பூஜ்ஜிய நேரத்தில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரிடம் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து பத்திரிகைச் செய்திகள் அல்லாமல், வேறு ஆதாரங்கள் இருக்கின்றனவா... மற்ற ஆதாரங்களுடன் பேசினால் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன். சென்னையில் நடந்த தி.மு.க கூட்டத்தில், பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

சம்பவம் நடைபெற்ற 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அரசியல் வேறுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படுவது தி.மு.க ஆட்சியில்தான். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர்
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர்

அதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "ஒரு பெண் காவலர் பாதிக்கப்பட்டு புகார் அளித்து, இரண்டு நாள்களுக்குப் பின்புதான் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெண் காவலர் கூறியதை நம்பாமல் டி.ஜி.பி., `விசாரித்துதான் கைதுசெய்வோம்' எனக் கூறுவதன் மூலம், இந்த அரசிடம் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். பெண் காவலர்களுக்குத் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு போதைப்பொருள்களின் சந்தையாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டுக்குக் கடல்வழியில் போதைப்பொருள் கடத்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

போதைப்பொருள்கள் பல்வேறு வடிவங்களில் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகளில் இவற்றின் விற்பனை அதிகரித்திருக்கிறது. இது குறித்து விவாதிக்க, சட்டசபையில் அனுமதி கோரியிருந்தோம். ஆனால், சபைத் தலைவர் அதற்கு அனுமதியளிக்கவில்லை. சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. இதையெல்லாம் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால்தான் வெளிநடப்பு செய்தோம்" என்றார்.