Published:Updated:

`காந்திக்கு எதிராக ஹெக்டே பேசவில்லை!' -மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியால் கொதித்த அமைச்சர்

நாடாளுமன்ற மக்களவை
நாடாளுமன்ற மக்களவை

17-வது மக்களவையில் கேள்வி நேரத்தைத் தொடங்காமல் அவையை ஒத்திவைப்பது இதுவே முதல்முறை.

பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்த்குமார் ஹெக்டே சுதந்திரப்போராட்டம் குறித்தும் காந்தி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதைத் தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தேசிய அளவில் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால், அவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆனந்த்குமார் ஹெக்டே
ஆனந்த்குமார் ஹெக்டே

முன்னதாக கர்நாடகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹெக்டே, ``சுதந்திரப் போராட்டம் மிகப்பெரிய நாடகம். சத்தியாகிரகம் மற்றும் சாகும்வரை உண்ணாவிரதம் ஆகியவைதான் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முக்கியக் காரணம் என்கின்றனர். இது உண்மையல்ல. வெறுத்துப்போன மனநிலையில்தான் சுதந்திரத்தை வழங்கியுள்ளனர். இத்தகையவர்கள்தான் நம்நாட்டில் மகாத்மாவாக இருக்கிறார்கள். வரலாறுகளைப் படிக்கும்போது என்னுடைய ரத்தம் கொதிக்கிறது" என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

`காந்தியின் சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம்’ - சர்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க எம்.பி

இதுதொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ஹெக்டே, ``எனது உரையில் நான், எந்தவொரு கட்சியையோ, மகாத்மா காந்தியையோ அல்லது வேறு யாரையோ குறிப்பிடவில்லை. சுதந்திரப் போராட்டத்தை வகைப்படுத்தவே முயற்சி செய்தேன். இந்தத் தேவையற்ற சர்ச்சைக்கு ஊடகங்களே காரணம்" என்றார்.

பா.ஜ.க வட்டாரத்தில் ஹெட்ஜின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது. கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் நலீன் குமார், ``சுதந்திரப் போராட்டம் மற்றும் காந்திக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்தது குறித்து ஹெட்ஜிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

அதிர் ரஞ்சன் சௌத்திரி
அதிர் ரஞ்சன் சௌத்திரி

இந்த நிலையில், டெல்லியில் இன்று கூடிய மக்களவையில் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து ஹெட்ஜின் இந்தக் கருத்துக்கு விளக்கமளிக்க வேண்டுமெனக் கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தைத் தொடங்க முடியாமல் அவையை ஒத்தி வைத்தார். 17-வது மக்களவையில் கேள்வி நேரத்தை தொடங்காமல் அவையை ஒத்திவைப்பது இதுவே முதல்முறை.

ஜீரோ ஹவரில் இந்த சர்ச்சை தொடர்பாக மத்திய அமைச்சர் அதிர் ரஞ்சன் சௌத்திரி பேசுகையில், ``ஹெக்டே, காந்திக்கு எதிராக எந்தக் கருத்தையும் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். எனினும், இதுதொடர்பாக வருத்தத்தை தெரிவிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டோம். ஏனெனில், நாங்கள் உண்மையாகவே மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்கள். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைப்போல போலி காந்தியவாதிகள் அல்ல" என்று கூறினார்.

இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். எனினும், இதுதொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

‘‘அஸ்ஸாமில் வதை முகாம்கள் இல்லை!’’ - நரேந்திர மோடி; ‘‘பிரதமர் பொய் சொல்கிறார்!’’ - ராகுல் காந்தி
அடுத்த கட்டுரைக்கு