இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவருக்குப் பிரிவு உபசார விழா சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த பிரிவு உபசார விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, எம்.பி-க்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் அவருக்கு விடை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து இன்று காலை புதிய குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு பதவியேற்றார்.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி பதவி விலகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விலையாகக் கொடுத்து பா.ஜ.க-வின் அரசியல் நிரலை நிறைவேற்றினார் எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பதவி விலகும் குடியரசுத் தலைவர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பலமுறை புறந்தள்ளிய பாரம்பர்யத்தை விட்டுச் செல்கிறார். சட்டப்பிரிவு 370, சி.ஏ.ஏ மூலம் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள், ஆளும் அரசால் குறிவைக்கப்பட்டாலும், வெட்கமின்றி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை விலையாகக் கொடுத்து பா.ஜ.க-வின் அரசியல் குறிக்கோளை அவர் நிறைவேற்றினார்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெகபூபா முஃப்தியின் இத்தகைய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, பா.ஜ.க-வின் மூத்த தலைவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வருமான நிர்மல் சிங், ``முஃப்தி தன்னுடைய நிலைப்பாட்டை இழந்து இப்போது மலிவான அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார். நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவரை அரசியலுக்கு இழுப்பது துரதிர்ஷ்டவசமானது" என்று தெரிவித்திருக்கிறார்.