சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

“என்னை தொட்டுப்பார்..!” - பா.ஜ.க-வுக்கு எதிராகக் கிழக்கிலிருந்து ஒரு குரல்...

ஹேமந்த் சோரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹேமந்த் சோரன்

ஹேமந்த் சோரனுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையிலான மோதல் பின்னணி சுவாரஸ்யமானது. ஜார்க்கண்டில், 2014-ம் ஆண்டிலிருந்து முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவந்தது.

மாவோயிஸ்ட் இயக்கம் வலுவாக வேரூன்றியிருக்கும் ‘ரெட் காரிடார்’ மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால், எப்போதுமே ஒருவிதப் பதற்றத்தைக் கொண்டிருக்கும் மாநிலமாக ஜார்க்கண்ட் இருந்துவருகிறது. அங்கு, `ஜே.எம்.எம்’ எனப்படும் ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா’ கட்சியின் தலைவரான முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2019-ம் ஆண்டு ஹேமந்த் சோரன் முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கும் பா.ஜ.க-வுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்துவருகிறது. நிலக்கரிச் சுரங்கக் குத்தகையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆதாயம் பெற்றதாக ஹேமந்த் சோரனை மத்திய அரசின் அமலாக்கத் துறை துரத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் ஹேமந்த் சோரனோ, பா.ஜ.க-வின் காய்நகர்த்தல்களுக்கு எதிராகக் கொஞ்சமும் அசராமல் களமாடிவருகிறார். என்ன நடக்கிறது அங்கே?

மோதல் பின்னணி!

ஹேமந்த் சோரனுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையிலான மோதல் பின்னணி சுவாரஸ்யமானது. ஜார்க்கண்டில், 2014-ம் ஆண்டிலிருந்து முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவந்தது. மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட ஜார்க்கண்டில், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், 11 இடங்களை பா.ஜ.க பிடித்தது. ஜே.எம்.எம்., காங்கிரஸ் ஆகியவை தலா ஓர் இடத்தில்தான் வெற்றிபெற்றன. நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுவிட்ட பா.ஜ.க., அதே போன்ற பெரிய வெற்றியைச் சட்டமன்றத் தேர்தலிலும் பெற்று, ஆட்சியைத் தக்கவைத்து விடலாம் என்ற கனவில் இருந்தது. அடுத்த ஆறு மாதங்களில் அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா களமிறங்கி சுற்றிச் சுழன்றார். ஆனாலும், பா.ஜ.க மண்ணைக் கவ்வியது. அந்தத் தோல்வியால் அடிபட்ட பாம்பாக உணர்ந்த பா.ஜ.க., இப்போது ஹேமந்த் சோரனை நோக்கிச் சீறியெழுகிறது என்கிறார்கள், ஜார்க்கண்ட் மாநில அரசியலை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள்.

“என்னை தொட்டுப்பார்..!” - பா.ஜ.க-வுக்கு எதிராகக் கிழக்கிலிருந்து ஒரு குரல்...

குற்றச்சாட்டும் நம்பிக்கைத் தீர்மானமும்!

ஏழைகள் நிறைந்த மாநிலம் என்றாலும், ஜார்க்கண்டில் இரும்பு, பாக்சைட், கிராஃபைட், யுரேனியம், மைகா, சுண்ணாம்பு, நிலக்கரி எனத் தாது வளங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை எடுப்பதற்கு, ஏராளமான சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு, நிலக்கரிச் சுரங்கங்கள் குத்தகைக்கு விடப்படுவது உண்டு. முதல்வர் ஹேமந்த் சோரன், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நிலக்கரிச் சுரங்கங்களைச் சட்டவிரோதமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார் என்று பா.ஜ.க குற்றம்சாட்டியது. சுரங்கங்கள் ஒதுக்கீடு மூலம் பண ஆதாயம் அடைந்தார் என்று முதல்வர்மீது குற்றம் சாட்டிய பா.ஜ.க-வினர், அவரை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

அதையடுத்து, ஹேமந்த் சோரனைத் தகுதிநீக்கம் செய்யுமாறு மாநில ஆளுநர் ரமேஷ் பைஸுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதாகச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி, ஆளும் கூட்டணி அரசு தாமாகவே சட்டமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்தியது. அதில், 48 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் சோரன் வெற்றிபெற்றார். கடுப்பான பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்திலிருந்து வெளியேறினர்.

அமித் ஷா - ரகுபர் தாஸ்
அமித் ஷா - ரகுபர் தாஸ்

“தொட்டுப் பார்!”

அடுத்தகட்டமாக, அமலாக்கத்துறை முடுக்கிவிடப்பட்டது. ஹேமந்த் சோரனின் நெருங்கிய நண்பர் பங்கஜ் மிஸ்ராவின் வீடு உட்பட 16 இடங்களில் அதிரடிச் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ரூ.1,000 கோடி அளவுக்குப் பண மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டியது. மிஸ்ரா உட்பட மூன்று பேரைக் கைது செய்திருக்கும் அமலாக்கத்துறையின் அடுத்த இலக்கு ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில், நவம்பர் 3-ம் தேதி ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ் போனது. உடனே, ஜார்க்கண்ட் அரசியல் களம் பரபரப்பானது. ராஞ்சி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பாக, அதிரடி போலீஸார் குவிக்கப்பட்டனர்.

ஆனால், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. மாறாக, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சத்தீஸ்கருக்குக் கிளம்பிப் போய்விட்டார். அதற்கு முன்பு தன் கட்சித் தொண்டர்களிடம் அவர் உரையாற்றினார். அப்போது, ‘‘மாநில அரசை கவிழ்க்க சதி நடக்கிறது. எனக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. அவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தால் என்னைக் கைதுசெய்யுங்கள். வந்து தொட்டுப் பாருங்கள். அமலாக்கத்துறை அலுவலகம் அருகே பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறார்கள். ஜார்க்கண்ட்காரர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்... ஜார்க்கண்ட் மாநிலத்தை அந்நியர்கள் ஆட்சி செய்ய முடியாது. ஜார்க்கண்ட்காரர்கள் மட்டுமே இங்கு ஆட்சி செய்வார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும்” என்று ஆவேசத்துடன் பேசினார் ஹேமந்த் சோரன்.

பா.ஜ.க-வின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பது கூர்ந்து கவனிக்கப்படுகிறது. எனினும் பா.ஜ.க நடவடிக்கைகளுக்கு ஹேமந்த் சோரனும் அஞ்சுவதாகத் தெரியவில்லை. ஜார்க்கண்ட் அரசியலில் அடுத்தடுத்து அதிரடிக் காட்சிகள் அரங்கேறும் என்பது மட்டும் உறுதி!

40 சதவிகித அரசியல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் நலன்களைக் காட்டிலும், அங்கு கிடைக்கும் அளப்பரிய தாது வளங்கள் மீதுதான் அனைத்து அரசியல்வாதிகளின் கவனமும் இருக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் மொத்தத் தாதுக்களில் 40 சதவிகிதத்துக்கும் மேல் ஜார்க்கண்டில்தான் கிடைக்கின்றன. ஆனால், ஜார்க்கண்ட் மக்களில் 40 சதவிகிதத்துக்கும் மேல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள். அங்கு, ஐந்து வயதுக்கு உட்பட்ட 20 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னைகளைப் பற்றி இவர்கள் யாருமே ஏன் கவலைப்படவில்லை?