Published:Updated:

அண்ணாமலையைப் பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி - பாஸ்போர்ட் வழக்கில் நடந்தது என்ன?!

சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்குச் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலையைப் பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி - பாஸ்போர்ட் வழக்கில் நடந்தது என்ன?!

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் காவல்துறை அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்குச் சம்பந்தமில்லை என்று கூறியிருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

`மதுரையில் சுமார் 200 பேர் போலி பாஸ்போர்ட் பெற்ற விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி-யான டேவிட்சன் தேவாசீர்வாதத்தை பணியிடைநீக்கம் செய்து விசாரிக்க வேண்டும்’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுப்பிய கோரிக்கை சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

அடையாள அட்டை, முகவரிச் சான்று போன்றவற்றை போலியாகத் தயாரித்து அளித்தவர்களுக்கு முறைகேடாக பாஸ்போர்ட் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும் காவல்துறையும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இப்படி போலி ஆவணங்களை வழங்கி பாஸ்போர்ட் பெற்றவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அதில், “2013-ம் ஆண்டு பெறப்பட்ட எனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தேன். அப்போது, என்மீது குற்ற வழக்கு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நசுருதீன் என்பவர் மீதான வழக்கில் எனக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதி, அவ்வாறு காவல்துறையினர் அறிக்கை அளித்திருக்கிறார்கள். நசுருதீன் என்பவர் எனது பயண ஏஜென்ட் என்பதைத் தவிர, அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, எனது பாஸ்போர்ட்டைப் புதுப்பித்து வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

அண்ணாமலை
அண்ணாமலை

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “நசுருதீன் என்பவர் மீது க்யூ பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கில் மனுதாரரின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. மனுதாரரின் பயண ஏஜென்ட் ஆக இருந்தவர் நசுருதீன். இதைத் தவிர, இருவருக்கும் இடையே வேறு எந்தத் தொடர்பும் கிடையாது. எனவே, மனுதாரரின் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்கத் தடை இல்லை என்று க்யூ பிரிவு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை ஏற்றுக்கொண்டு மனுவை அனுமதிப்பதோடு விட்டுவிட எனக்கு மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. மதுரையிலும் திருச்சியிலும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நம் நாட்டைச் சேர்ந்தவர்களும், இலங்கையைச் சேர்ந்தவர்களும் முறைகேடாக இந்திய பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார்கள்” என்று உத்தரவில் கூறினார்.

மேலும், ``இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டேவிட்சன்
டேவிட்சன்

இந்த வழக்கில் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், அதை க்யூ பிரிவு காவல்துறையினர் பின்பற்றவில்லை. இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நடந்த மோசடி, 54 பாஸ்போர்ட் முறைகேடாக வழங்குவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் வழக்கு தொடரவேண்டியது அவசியம்.

இந்தப் பிரச்னை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த முறைகேடு நடந்த நேரத்தில் மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தார். அவருக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை. பாஸ்போர்ட் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக இருக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஆணையர் நிலையிலேயே விசாரணை அறிக்கை நடைமுறை முடிந்துவிடுகிறது. அதேநேரம், நீதிமன்றத்தில் சி.பி.ஐ விசாரணை கோருவதற்கு முன்பே இந்த வழக்கு தொடர்பாக உரிய காலத்தில் விசாரணையை முடித்திருந்தால், சர்ச்சைகள் எழ வாய்ப்பு இருந்திருக்காது” என்று அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டார்.

நீதி மன்றம்
நீதி மன்றம்

அத்துடன், “இந்தப் பிரச்னையை முன்னெடுத்ததற்காக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குப் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. அவர் கேள்வி எழுப்பாமல் இருந்திருந்தால், இந்தப் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்திருக்காது” என்று அண்ணாமலையை நீதிபதி பாராட்டினார்.