Published:Updated:

`விண்ணப்ப மொழியிலேயே பதிலும் இருக்க வேண்டும்!’ - மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

``தமிழக அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக மக்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்பக் கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” - சு.வெங்கடேசன்.

``ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழிச் சட்டமும் இதை உறுதி செய்கிறது" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், `குரூப் பி, குரூப் சி பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்காக தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கவில்லை. இந்தப் பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைக்கக் கோரி உள்துறை அமைச்சகம், சி.ஆர்.பி.எஃப் பொது இயக்குநருக்கு அக்டோபர் 9-ல் கடிதம் அனுப்பினேன்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நவம்பர் 9-ல் இந்தியில் பதில் அனுப்பியிருந்தார். அதில் என்ன கூறியிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. இந்தியில் பதில் அளித்தது சட்ட மீறலாகும். தமிழக மக்கள் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பும்போது இதுபோல் இந்தியில் பதிலளிப்பது தொடர்கிறது. இது அரசியலமைப்பு சட்ட உரிமைகளுக்கும்,1963-ம் ஆண்டின் அலுவல் மொழிச் சட்டத்துக்கும் முரணானது. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும்.

சு.வெங்கடேசன். எம்.பி
சு.வெங்கடேசன். எம்.பி

எனவே, தமிழக அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக மக்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்பக் கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். விதியை மீறும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`சம்ஸ்கிருதம் தேசிய மொழி’... அம்பேத்கர் அப்படிச் சொன்னாரா?

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், "தாய்மொழி மிகவும் முக்கியமானது. அடிப்படைக் கல்வி தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது ஆங்கிலவழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆங்கில மொழிக்கு பொருளாதார அடிப்படையிலேயே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் சில மொழிகள் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவை. பல மொழிகள் நூறு ஆண்டுகள் பழைமையானவை. ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழிச் சட்டமும் இதை உறுதி செய்கிறது. ஆனால், மனுதாரருக்கு இந்தி மொழியில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.

விதியை மீறும் எண்ணமில்லை என மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசும், அதன் அலுவலர்களும் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும்" என நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

`தமிழ் கல்வெட்டுகள் எப்படி திராவிட கல்வெட்டுகளாயின?’ - வரலாற்றுப் பேராசிரியர் விளக்கம்
அடுத்த கட்டுரைக்கு