தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. சிறந்த வழிபாட்டுத் தலமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அமைந்துள்ளது இந்த அருவியின் சிறப்பு. கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். கடந்த 2015-ம் ஆண்டு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக அருவிக்குப் பொதுமக்கள் வந்து சென்றனர். அதன் பின்பு சுற்றுலாத் துறையினரால் குறைந்த கட்டணமாக 5 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. பின்னர், கட்டணம் படிப்படியாக உயர்ந்து 10 ரூபாய் ஆனது.

கட்டணம் உயர்வு:
கொரோனாவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து சுருளி அருவி அண்மையில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், 30 ரூபாயாகக் கட்டண வசூல் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வால் ஏழை மக்கள் அருவிக்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இரண்டு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அருவிக்குச் செல்ல ஒவ்வொருவரும் நுழைவு கட்டணமாக 30 ரூபாய் (டிக்கெட்) செலுத்த வேண்டியதாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிக நுழைவு கட்டணம் பெற்றாலும், அருவிக்குச்செல்லும் பாதை சீரமைக்கப் படாமல் உள்ளதால் வயதானவர்கள் நடந்து செல்வதற்குச் சிரமப்படுகிறார்கள். முதியவர்களுக்குப் போக்குவரத்து வசதி கூட இல்லை என்பதால், பல மணி நேரம் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. பெண்களுக்கு ஆடை மாற்றும் அறையும் சரியாக இல்லை. இந்தச் சுற்றுலாத் தலத்தில் வெளிமாநிலத்தவர் மட்டுமல்லாமல், கோடைக் காலத்தில் வெளிநாட்டினரும் அதிகம் வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தின் முக்கிய அருவியாக விளங்கும் சுருளி அருவியைச் சரியான முறையில் சீரமைக்கவும், கட்டணத்தை குறைக்கவும் சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்று இங்கு வரும் பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசுற்றுச்சூழல் மாசு:
காசி ராமேஸ்வரத்துக்கு அடுத்துச் சிறந்த புண்ணிய தலமாக உள்ள சுருளி அருவியில், முன்னோர்களுக்குத் தர்ப்பணம், ஈமக்கரியை செய்வதற்காக தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அப்படி வருபவர்கள் அருவியில் குளித்துவிட்டு இங்குள்ள தெய்வத்தை வழிபட்டுச் செல்வது வழக்கம். அப்படித் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில் மற்றும் ஆடைகள் போன்றவற்றை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனவிலங்குகள் வாழும் இந்தச் சுற்றுலாத்தலம் அடர்ந்த வனப் பகுதியாக உள்ளதால், இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் அருந்துவதற்கு வரும் விலங்குகளுக்கு பிளாஸ்டிக் பைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சுற்றுலாத் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சுருளி அருவியை மீட்டு, மீண்டும் கட்டணமில்லாமல் ஏழை மக்கள் வந்து செல்ல அரசு வழிவகை செய்ய வேண்டும். மேலும், வனத்துறையினர் இங்குள்ள விலங்குகளின் நலனைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருள்களைப் பொதுமக்கள் அருவிக்குக் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.