Published:Updated:

புதுச்சேரி: `ரூ.9,924 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்தார் ரங்கசாமி!’ - சிறப்பம்சங்கள் என்னென்ன?

புதுச்சேரி பட்ஜெட்
புதுச்சேரி பட்ஜெட்

``2021-22-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடாக ரூ.9,924.41 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுவையின் நிலுவைக் கடன் தொகை ரூ.9,334.78 கோடி. இந்திய அளவில் சராசரி உள்நாட்டு உற்பத்தி 7 - 8% இருக்கும் நிலையில் புதுவையின் வருவாய் 10% வளர்ச்சி பெற்றுள்ளது."

புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரை கவர்னர் தமிழிசை நேற்று காலையில் உரையாற்றி, தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து துணை சபாநாயகராக ராஜவேலு பதவியேற்றார். பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டு, மாலை 4:30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். அவர் நிகழ்த்திய உரையில், ``நான் பெருமை வாய்ந்த இந்த அவையில் 2021-22-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருக்கிறேன். புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 15-வது சட்டமன்றத்தில் எனது முதல் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய புதுச்சேரி ஆட்சிப் பரப்பு மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் எனக்கு முழு மனதுடன் ஆதரவு நல்கிய மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

2021-22-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடாக ரூ.9,924.41 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுவையின் நிலுவைக் கடன் தொகை ரூ.9,334.78 கோடி. இந்திய அளவில் சராசரி உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 8 சதவிகிதமாக இருக்கும் நிலையில், புதுவையின் வருவாய் 10% வளர்ச்சி பெற்றுள்ளது. மாநிலத்தில் விவசாய நலத்திட்டங்களைச் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகளுக்காக மொபைல் செயலி உருவாக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் நவீன வேளாண் விளைபொருள்கள் விற்பனை வளாகம் அமைக்கப்படும். வில்லியனூர், திருக்கனூரில் உழவர் சந்தை அமைக்கப்படும். 75 செங்குத்து தோட்டம் அமைக்கப்படும். மணப்பட்டு வனப்பகுதியில் சாகச நடவடிக்கைகளுடன் வனத்தோட்டம், நீர்த்தேக்கம் அமைக்கப்படும். 70 முதல் 100 ஏக்கரில் விலங்கியல் பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். பொது, அட்டவணை இனத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 25 மற்றும் 33 சதவிகித மானியத்தில் 4,000 கறவை மாடுகள் வழங்கப்படும்.

புதுச்சேரிக்கு இரண்டும், காரைக்காலுக்கு ஒன்றுமாக நடமாடும் கால்நடை மருந்தக ஆம்புலன்ஸ் வாங்கப்படும். அரசின் நடவடிக்கையால் பால் உற்பத்தி 1,75,600 லிட்டராக உயர்த்தப்படும். பாகூரில் பால்கோவா உற்பத்தி ஆலை ரூ.1.67 கோடியில் அமைக்கப்படும். பிரதம மந்திரி வீடு கட்டும் பயனாளிகளுக்கு மணல்மேடு கிராமத்திலுள்ள மணல்குவாரி பயன்படுத்தப்படும். 100% கல்வியறிவு பெற்ற மாநிலமாக புதுச்சேரியை மாற்ற அரசு உறுதி பூண்டிருக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக ஐந்து அரசுப் பள்ளிகள் அனைத்து வசதிகளுடன்கூடிய மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். 100 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். ரூ.334.3 கோடியில் தேசிய திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை பள்ளி உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி பட்ஜெட்
புதுச்சேரி பட்ஜெட்

மரப்பாலத்தில் ரூ.26.25 கோடியில் வாயு காப்பு துணைமின் நிலையம் அமைக்கப்படும். தவளகுப்பம், கரையாம்புத்தூர், லிங்காரெட்டிபாளையம், டிஆர்.பட்டினத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். ஐந்து தீயணைப்பு நிலையங்களுக்கு நுரை ஊர்தி வாங்கப்படும். புதிதாக 12 தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்படும். அதிவேக மீன்பிடிப் படகுகளுக்கு டீசல் 45,000 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். மர, இரும்புப் படகுகளுக்கு 40,000 லிட்டராகவும், ஃபைபர் படகுக்கு 7,000 லிட்டராகவும், மோட்டார் பொருத்திய கட்டுமரத்துக்கு 5,000 லிட்டராகவும் டீசல் உயர்த்தி வழங்கப்படும். மீனவர்கள் இறந்தால் உடனடியாக ரூ.5 லட்சம் வாரிசுக்கு வழங்கப்படும். மீனவ முதியோருக்கு 50 முதல் 59 வரை ரூ.2,500, 60 முதல் 79 வரை ரூ.3,000, 80 வயதுக்கு மேல் ரூ.4,000 வழங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வைத்திக்குப்பத்தில், மீனவ கிராமத்தில் தூண்டில் முள் வளைவு அமைக்கப்படும். மருத்துவக் கல்லூரி, மருத்துவ நிறுவனங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கோரிமேட்டில் பல்வேறு தொற்றுநோய் சிகிச்சைகளுக்காக 500 படுக்கைகள்கொண்ட மருத்துவமனை அமைக்கப்படும். 12 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் நடத்தாத கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும். சிலைகள், நகைகள் போன்ற கோயில் சொத்துகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். அசையா சொத்துகள் கணக்கிடப்பட்டு வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்கள் தொடங்க, `எளிதாக வணிகம் செய்தல்’ என்ற மசோதா அறிமுகப்படுத்தப்படும்.

2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதல்வர் ரங்கசாமி
2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதல்வர் ரங்கசாமி

புதிய ஏற்றுமதி கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். குப்பை இல்லா நகராக புதுச்சேரி மாற்றப்படும். பழைய சிறை வளாகம், துறைமுக வளாகத்தில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி கார் நிறுத்துமிட பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும். காவல்துறையினருக்கு சீருடைப்படி வழங்கப்படும். காவல்துறை காலி பணியிடங்கள் நிரப்பப்படும். பழைய துறைமுகத்தில் நகர்ப்புற பொழுதுபோக்கு கிராமம் உருவாக்கப்படும். பாகூரில் ரூ.2 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். அரிக்கன்மேடு, நல்லவாடு, பெரியகாலாப்பட்டு கிராமத்தில் மீன் தரையிறக்கும் மையங்கள் ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும்.

ரூ.52.9 கோடியில் காரைக்கால் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும். வாரம் முழுவதும் பயணிகள் வரும் வகையில் சுற்றுலா மேம்படுத்தப்படும். சுற்றுலா தொழில் சட்டம் உருவாக்கப்படும். பாய்மரப் படகு பண தளம், மணப்பட்டில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும். ஆதிராவிட பெண் திருமண உதவித்தொகை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். வில்லியனூரில் ஆதிதிராவிடர் நலத்துறை கிளை அலுவலகம் அமைக்கப்படும். பாட்கோ மூலம் கல்விக்கடன் பெற்ற மாணவர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. சிறப்புக்கூறு நிதியாக ரூ.396 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்காக வில்லியனூரில் பாதுகாப்பு, பொழுதுபோக்கு மையம் அமைக்கப்படும். வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க காரைக்கால், மாகே, ஏனாமில் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.

புதுச்சேரி: `மத்திய அரசு நிதி குறைவாக கொடுக்கிறது!’ – சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி வேதனை

மகளிர் உதவி எண் செயல்படுத்தப்படும். அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முட்டைகள் கூடுதலாக வழங்கப்படும். கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மகப்பேறுக்கு பின் குழந்தை வளர்ப்பு பெட்டகம் வழங்கப்படும். பெட்ரோல் மீதான வாட் வரி 3% உடனடியாகக் குறைக்கப்படுகிறது. இதனால் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு லிட்டருக்கு ரூ.2.43 விலை குறையும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்துக்காக பயிர் கடன் பெற்று நிலுவைவைத்திருக்கும் விவசாயிகளின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை, தன்னாட்சி, கூட்டுறவு அமைப்பு ஊழியர்களுக்கு இரண்டு மாத நிலுவைச் சம்பளம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு