கட்டுரைகள்
Published:Updated:

பனிப்பிரதேசத்தில் பா.ஜ.க-வை பதம் பார்த்த அதிருப்தி வேட்பாளர்கள்!

இமாச்சலப் பிரதேசம்
பிரீமியம் ஸ்டோரி
News
இமாச்சலப் பிரதேசம்

பா.ஜ.க கட்சியின் முதல்வர் வேட்பாளரான ஜெய்ராம் தாகூர், தன்னுடைய சீரஜ் தொகுதியில் 76 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றியைப் பெற்றிருந்தாலும், அவர் கட்சி சோபிக்கவில்லை.

இமாச்சலப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக இருந்த பா.ஜ.க-வை வீழ்த்தி, அரியணையைப் பிடித்திருக்கிறது காங்கிரஸ். மொத்தம் 68 இடங்கள்கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில், காங்கிரஸ் 40 இடங்களிலும், பா.ஜ.க 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். குஜராத்தில் மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் பா.ஜ.க-வுக்கு இமாச்சல் தோல்வி பெரும் சறுக்கல்தான். பா.ஜ.க-வின் தோல்விக்கு அதன் அதிருப்தியாளர்களே முக்கியக் காரணமாக இருந்திருப்பதை, தேர்தல் முடிவுகள் வெளிச்சமாக்கியிருக்கின்றன.

பனிப்பிரதேசத்தில் பா.ஜ.க-வை 
பதம் பார்த்த அதிருப்தி
வேட்பாளர்கள்!

அதாவது, இமாச்சலிலுள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில், பா.ஜ.க-விலிருந்த அதிருப்தியாளர்களே சுயேச்சையாகக் களம் கண்டதால், அங்கேயெல்லாம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது தாமரைக் கட்சி. இதில், நால்கார் தொகுதியில் வெற்றிபெற்ற கே.எல்.தாகூர், டேஹ்ரா தொகுதியில் வெற்றிபெற்ற ஹோஷியார் சிங், ஹமிர்பூர் தொகுதியில் வெற்றிபெற்ற ஆஷிஷ் சர்மா ஆகியோர் மிகவும் கவனிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சீட் கேட்டும் பா.ஜ.க கொடுக்காததால், ஆத்திரமடைந்தவர்கள் சுயேச்சையாகத் தேர்தலைச் சந்தித்து வென்றிருக்கிறார்கள்.

நால்கார் தொகுதியில், கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஜெயித்தவர் லக்விந்தர் சிங் ராணா. அப்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த கே.எல்.தாகூர் இங்கே ராணாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், காங்கிரஸிலிருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்தார் ராணா. இதையடுத்து, நால்கார் தொகுதியை ராணாவுக்கு வழங்கியது பா.ஜ.க. இதனால் அதிருப்தியடைந்த தாகூர், சுயேச்சையாகக் களம்கண்டு வென்றிருக்கிறார். இதேபோல டேஹ்ரா தொகுதியில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூருக்கு எதிராக அரசியல் செய்ததால், ஹோஷியா சிங்குக்கு பா.ஜ.க-வில் சீட் வழங்கப்படவில்லை. அவரும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஹமிர்பூர் தொகுதியிலும், பா.ஜ.க-வில் சீட் மறுக்கப்பட்டதால், அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிய ஆஷிஷ் சர்மா, சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். பா.ஜ.க-வுக்கு ஹமிர்பூர் தொகுதியில் மூன்றாவது இடம்தான் கிடைத்திருக்கிறது.

பனிப்பிரதேசத்தில் பா.ஜ.க-வை 
பதம் பார்த்த அதிருப்தி
வேட்பாளர்கள்!

இதுபோல் கின்னார், இந்தோரா, குலு, தர்மசாலா, பர்சார் தொகுதிகளிலும், பா.ஜ.க அதிருப்தியாளர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், பெருமளவு வாக்குச் சேதத்தை பா.ஜ.க-வுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். இங்கேயெல்லாம் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியிலும் சேதாரம் இருக்கிறது. அதிருப்தியாளர்கள் சுயேச்சையாகக் களமிறங்கியதால், சுல்லா, அன்னி, சோபால், பச்சாத் ஆகிய நான்கு இடங்களில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. சுல்லா, அன்னி ஆகிய இடங்களில் காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

பா.ஜ.க கட்சியின் முதல்வர் வேட்பாளரான ஜெய்ராம் தாகூர், தன்னுடைய சீரஜ் தொகுதியில் 76 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றியைப் பெற்றிருந்தாலும், அவர் கட்சி சோபிக்கவில்லை. ஆட்சியின் மீதான அதிருப்தி, கட்சிக்குள் நிலவிய கலகம் உள்ளிட்ட காரணங்கள் பா.ஜ.க-வுக்கு வீழ்ச்சியை அளித்திருக்கின்றன. ‘‘பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் சொந்த மாநிலம் என்பதால், ஹிமாச்சல் பிரதேசத்தில் 20 பிரசாரக் கூட்டங்களுக்கு மேல் நட்டா பங்கேற்றிருந்தார். ஆட்சிக்கு எதிரான மனநிலையைக் களைவதற்கு 11 சீனியர்களுக்கு சீட் மறுத்தார். பலருக்கும் தொகுதிகள் மாற்றித் தரப்பட்டன. ஆனால், நட்டாவின் வியூகமெல்லாம் பொய்யாகி, சறுக்கலையே தந்திருக்கிறது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் கோஷ்டி அரசியலும் கட்சியைக் காவு வாங்கிவிட்டது’’ என்கிறார்கள் பா.ஜ.க சீனியர்கள்.

‘இந்தச் சறுக்கலிலிருந்து கட்சி மீண்டுவிடும்' என பா.ஜ.க நம்புகிறது. ‘பா.ஜ.க-வின் வீழ்ச்சிக்கான தொடக்கம்தான் இது' என காங்கிரஸ் கருதுகிறது. யார் நம்பிக்கை ஜெயிக்கப்போகிறது என்பது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்துவிடும்.