Published:Updated:

பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - எப்படியிருக்கிறது இமாச்சல் தேர்தல் களம்?

ஜெய்ராம் தாக்கூர் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
ஜெய்ராம் தாக்கூர் - மோடி

இமாச்சலில் காங்கிரஸின் முகமாக விளங்கியவரும், ஆறு முறை முதலமைச்சராக இருந்தவருமான வீரபத்ரா சிங் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - எப்படியிருக்கிறது இமாச்சல் தேர்தல் களம்?

இமாச்சலில் காங்கிரஸின் முகமாக விளங்கியவரும், ஆறு முறை முதலமைச்சராக இருந்தவருமான வீரபத்ரா சிங் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

Published:Updated:
ஜெய்ராம் தாக்கூர் - மோடி
பிரீமியம் ஸ்டோரி
ஜெய்ராம் தாக்கூர் - மோடி

குளிர் நிறைந்த இமாச்சலப்பிரதேசத்தில், இப்போது அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. வரும் நவம்பர் மாதத்தில் அங்கு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலே அதற்குக் காரணம். பா.ஜ.க., காங்கிரஸ் பிரதானமாக மோதிக்கொள்ளும் இமாச்சலில், இந்த முறை ஆம் ஆத்மியும் நுழைந்திருப்பதால், இரு கட்சிகளுக்கும் புதிய தலைவலி!

இமாச்சல் தேர்தல் களம் யாருக்குச் சாதகம்?


பா.ஜ.க-வுக்குப் பின்னடைவு?

2017 சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 68 இடங்களில் 44 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க-வின் ஜெய்ராம் தாக்கூர் முதலமைச்சரானார். 21 இடங்களில் வென்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி ஆனது. இமாச்சலில் கடந்த 35 ஆண்டுகளாக, பா.ஜ.க,, காங்கிரஸ் ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்துவருகின்றன. யாரும் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியமைத்ததில்லை. `இந்த வழக்கத்தை மாற்றியமைத்து, ஆட்சியைத் தக்கவைப்போம்’ என முழங்கிவருகிறது பா.ஜ.க.

பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - எப்படியிருக்கிறது இமாச்சல் தேர்தல் களம்?

இமாச்சலின் பிரதான தொழிலான சுற்றுலாத் துறை, கொரோனாவால் கடந்த இரண்டுகளாக பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. அங்கு, சுமார் 10 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மாநிலத்தின் பொருளாதாரத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும், மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்கள், இமாச்சல் விவசாயிகளைக் கோபமூட்டின. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், விவசாயிகளின் கோபம் தணியவில்லை. மத்திய அரசின் ‘அக்னிபத்’ திட்டமும் இமாச்சல் இளைஞர்களிடையே அனலைக் கிளப்பியிருக்கிறது. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஆளுங்கட்சிமீது, மக்களுக்கு அதீத அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த அதிருப்தியின் விளைவாக, கடந்த ஆண்டு நடந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகள், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் படுதோல்வியடைந்தது பா.ஜ.க. இந்த நான்கு தொகுதிகளையும் எளிதாகத் தட்டிச் சென்றது காங்கிரஸ்.

பா.ஜ.க அரசு மீதான அதிருப்தியைச் சரிக்கட்ட, சமீபத்தில் இரண்டு முறை இமாச்சலத்துக்குச் சென்றிருந்தார் பிரதமர் மோடி. மே 31-ம் தேதி சிம்லாவில் நடந்த விழாவில், இமாச்சலின் பாரம்பர்ய உடை அணிந்து மத்திய அரசின் எட்டு ஆண்டுச் சாதனைகளைப் பட்டியலிட்டார். கூடவே, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அறிவித்தார். ஜூன் 16 அன்று இமாச்சலின் கங்ரா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார் மோடி. பொதுவாக கங்ரா பகுதியில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சியே இமாச்சலில் ஆட்சியமைக்கும் என்பதால், அந்தப் பகுதியில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. அடுத்தடுத்து பா.ஜ.க மூத்த தலைவர்கள் பலரும் இமாச்சலுக்குப் படையெடுக்கவிருக்கின்றனர். பல கோடி மதிப்பிலான இமாச்சலுக்கான வளர்ச்சித் திட்டங்களையும் அறிவிக்கவிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.

பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - எப்படியிருக்கிறது இமாச்சல் தேர்தல் களம்?

வெல்லும் முனைப்பில் காங்கிரஸ்!

இமாச்சலில் காங்கிரஸின் முகமாக விளங்கியவரும், ஆறு முறை முதலமைச்சராக இருந்தவருமான வீரபத்ரா சிங் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அதன் பிறகு, அவரின் மனைவி பிரதீபா சிங்கை மாநில காங்கிரஸின் தலைவராக்கியது கட்சி மேலிடம். தலைவர் பதவியேற்ற பின்னர், மத்திய, மாநில அரசுகளை அதிரடியாக விமர்சித்து, இமாச்சல் மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார் பிரதீபா. பா.ஜ.க மீதான அதிருப்தியைச் சரியாகப் பயன்படுத்தி மக்களிடையே பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறது காங்கிரஸ். `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம்’ என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி, அரசு ஊழியர்களைக் கவர்ந்திருக்கிறது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர் கிமி ராம் உட்பட சிலர் காங்கிரஸ் பக்கம் தாவியிருப்பது, அக்கட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆம் ஆத்மி தலைவர்கள் சிலரும் காங்கிரஸ் பக்கம் வந்துவிட்டனர். சரியான வேட்பாளர்களை நிறுத்தி, முறையான பிரசாரம் செய்தால் வென்றுவிடலாம் என்பது காங்கிரஸ் தலைவர்களின் நம்பிக்கை.

ஆம் ஆத்மியின் என்ட்ரி!

பஞ்சாப்பில் ஆட்சியமைத்ததை அடுத்து, அண்டை மாநிலமான இமாச்சலப்பிரதேசத்திலும் கால்பதித்திருக்கிறது ஆம் ஆத்மி. கடந்த சில மாதங்களுக்குள்ளாக மூன்று முறை இமாச்சலத்துக்கு ‘விசிட்’ அடித்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இங்கும் `டெல்லி மாடலை’ முன்வைத்து பிரசாரங்களை மேற்கொண்ட கெஜ்ரிவால், ``காங்கிரஸுக்கு 30 ஆண்டுகளும், பா.ஜ.க-வுக்கு 20 ஆண்டுகளும் வாய்ப்பளித்த நீங்கள், எங்களுக்கு இந்த ஒரு முறை வாய்ப்பளித்துப் பாருங்களேன்’’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஊழல், பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, மோசமான சுகாதாரக் கட்டமைப்புகள், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு என இமாச்சல் மக்கள் சந்திக்கும் பிரதான பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி கெஜ்ரிவால் மேற்கொண்ட பிரசாரங்கள் இளைஞர்கள் மத்தியில் கவனம்பெற்றன. பா.ஜ.க., காங்கிரஸிலிருந்து முக்கியத் தலைவர்கள் சிலர் ஆம் ஆத்மி பக்கம் தாவியிருந்தாலும், இமாச்சலில் அந்தக் கட்சிக்கென ஒரு முகம் இல்லை என்பது மைனஸ். கெஜ்ரிவாலின் மேஜிக்கை மட்டுமே நம்பி அந்தக் கட்சி களமிறங்கியிருக்கிறது.

பா.ஜ.க Vs காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி - எப்படியிருக்கிறது இமாச்சல் தேர்தல் களம்?

கள நிலவரம்!

``பா.ஜ.க அரசு மீதிருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி எளிதாக வெற்றிபெறலாம் என்று நினைத்திருந்த காங்கிரஸுக்கு, தலைவலியாக அமைந்திருக்கிறது ஆம் ஆத்மி. காங்கிரஸின் வாக்குகளைப் பிரிக்கும் சக்தியாக உருவெடுத்திருக்கிறது அந்தக் கட்சி. பா.ஜ.க-வுக்கு இது ஒரு வகையில் ப்ளஸ்ஸாக அமைந்திருந்தாலும், தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ஆம் ஆத்மி இழுத்துக்கொண்டிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, களத்தில் ஆம் ஆத்மிக்கு பெரும் ஆதரவு இல்லையென்பதால், பா.ஜ.க., காங்கிரஸ் இடையேதான் போட்டி நிலவுகிறது. பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கட்சி மாறிக்கொண்டேயிருப்பதால், தேர்தல் நேரத்தில் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பார்க்கலாம்!