அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஆப்பிள் தேசத்தில் வெல்லப்போவது யார்?

பிரியங்கா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியங்கா காந்தி

இமாச்சலப் பிரசேதத்தில் பா.ஜ.க-வுக்குப் பெரும் சவாலாக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இமாச்சலப் பிரதேசத்துக்கான தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அங்கு நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்று, டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன. ஆகவே, டிசம்பர் 8-ம் தேதிக்குள் குஜராத் தேர்தலும் நடைபெற்றுவிடும் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது!

இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, அங்கு கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸும் பா.ஜ.க-வும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. மொத்தம் 68 தொகுதிகளைக்கொண்ட அந்த மாநிலத்தில், 2017-ல் 44 இடங்களைப் பிடித்து ஜெய்ராம் தாகூர் தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் காரணத்தால், கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் அடிக்கடி அங்கு பயணம் மேற்கொள்கிறார்கள். பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவுக்குச் சொந்த மாநிலம் என்பதால், அவர் அங்கு தனி கவனம் செலுத்திவருகிறார்.

ஆப்பிள் தேசத்தில் வெல்லப்போவது யார்?

இமாச்சலப் பிரசேதத்தில் பா.ஜ.க-வுக்குப் பெரும் சவாலாக இருப்பது காங்கிரஸ் கட்சிதான். பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கோஷ்டிப்பூசல் பிரச்னை, தொண்டர்களைச் சோர்வடையச் செய்திருக்கிறது. ஆறு முறை முதல்வராக இருந்த வீர்பத்ர சிங் 2021, ஜூலையில் காலமாகிவிட்டதால், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள் யாரும் காங்கிரஸில் இல்லை. இது, காங்கிரஸுக்குப் பெரிய பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்றாலும், சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் இருந்துவருகிறது. கடந்த தேர்தலில் 13 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி, ஓர் இடத்தில் வெற்றிபெற்றது. இந்த முறையும் 13 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்திருக்கிறது. இந்தச் சூழலில், ஆம் ஆத்மியும் புதிதாக அங்கு களமிறங்குகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பல பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார்கள்.

ஆட்சிக்கு எதிரான மனநிலை, ஆம் ஆத்மி என்கிற புதிய போட்டியாளரின் வருகை போன்ற சவால்கள் பா.ஜ.க-வின் முன்பாக இருக்கின்றன. எக்காரணம் கொண்டும் ஆட்சியைப் பறிகொடுத்துவிடக் கூடாது என்று பா.ஜ.க நினைக்கிறது. ஆகவேதான், மோடியும் அமித் ஷாவும் அங்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அக்டோபர் 14-ம் தேதிகூட, இமாச்சலில்தான் மோடி இருந்தார். அங்கு, உனாவில் ‘வந்தே பாரத்’ ரயிலை அவர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இது, மோடிக்கு எட்டு நாள்களில் இரண்டாவது பயணம்.

ஆப்பிள் தேசத்தில் வெல்லப்போவது யார்?

பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சமீபத்தில் மோடி தொடங்கிவைத்தார். புனல்மின் திட்டங்கள் உட்பட பல திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியிருக்கிறார். அதேநேரத்தில், கோஷ்டிப்பூசல், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் பா.ஜ.க-வுக்குப் பாதகமாக இருக்கின்றன. அரசு ஊழியர் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவு விவகாரம் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. அங்கு ஆப்பிள் உற்பத்தியாளர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஆப்பிள் பார்சல் செய்யும் அட்டைப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி விதிப்பு, ஆப்பிள் உற்பத்திச் செலவு உயர்வு போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான ஆப்பிள் உற்பத்தியாளர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

இந்தச் சூழலில், அக்டோபர் 14-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்துக்குச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ‘அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம்’, ‘5 லட்சம் பேருக்கு வேலை வழங்குவோம்’ என்று பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். ‘பாரத் ஜோடோ யாத்ரா’வை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, இமாச்சலப் பிரதேசத்துக்குச் செல்வாரா என்பது தெரியவில்லை.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

2024-ல் டெல்லியைப் பிடிக்க வேண்டுமென்றால், தற்போது இமாச்சல் பிரதேசத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இருக்கிறது!

*****

கிராமப்புற மக்கள் 90 சதவிகிதம்!

இந்தியாவின் 13 மலைப்பிரதேச மாநிலங்களில் ஒன்றான இமாச்சலப் பிரதேசம், இமயமலையின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. வடக்கில் ஜம்மு காஷ்மீர், லடாக், மேற்கில் பஞ்சாப், தென்மேற்கில் ஹரியானா, தென்கிழக்கில் உத்தரகாண்ட், கிழக்கில் உத்தரப்பிரதேசம் என எல்லைகளைக்கொண்டிருக்கும் இந்த மாநிலம், சீனாவின் திபெத் எல்லையையும் பகிர்ந்துகொள்கிறது. ஏராளமான மலைச்சிகரங்களையும், பள்ளத்தாக்குகளையும், ஜீவநதிகளையும் கொண்டிருக்கும் இந்தப் பிரதேசம், யூனியன் பிரதேசமாக இருந்து, 1971-ம் ஆண்டு மாநில அந்தஸ்தைப் பெற்றது. 90 சதவிகித மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். விவசாயம், தோட்டக்கலை, புனல்மின் உற்பத்தி, சுற்றுலா ஆகியவைதான் இந்த மாநிலத்தின் வருவாய் ஆதாரங்கள்!