Published:Updated:

`இந்திய கலாசாரத்தில் இருந்து அகற்றவே முடியாதது இந்தி மொழி!’ - உள்துறை அமைச்சர் அமித் ஷா

``இந்தியாவின் கலாசாரத்தில் இருந்து அகற்றவே முடியாதது இந்தி மொழி. பல நூற்றாண்டுகளாக இந்தி மொழிதான் இந்தியாவை ஒருங்கிணைக்கிறது” - அமித் ஷா

`இந்தி திவாஸ்'' என்று கொண்டாடப்படும் இந்தி தினத்துக்கான வாழ்த்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ``இந்தி மொழி தான் நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது. இந்திய கலாசாரத்தில் உடைக்க முடியாத பெரும் பகுதி இந்தி" என்று தெரிவித்துள்ளார். இந்தி மொழியை முன்னிறுத்தும் மும்மொழிக் கொள்கைத் திட்டம், தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.

இந்தி எதிர்ப்பு குழுவினருடன் கனிமொழி
இந்தி எதிர்ப்பு குழுவினருடன் கனிமொழி

தி.மு.க எம்.பி. கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் `இந்தி தெரியாது’ என்று கூறியதால் `நீங்கள் இந்தியரா?’ என்று விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் கேட்டதாகவும், 'இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?' என்ற கேள்வியையும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆயுஷ் அமைச்சகம் நடத்திய ஆன்லைன் வகுப்பில் இந்தி தெரியாதவர்களுக்கு இடமில்லை என்று அதிகாரி கருத்து தெரிவித்தது, கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை படிவத்தில், மூன்றாவது மொழி இந்தி எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்களா.? என்ற கேள்வி என இந்தி மொழி பற்றி அடுக்கடுக்கான சர்ச்சைகள் எழுந்தது.

`இந்தி தெரியவில்லையா.. வெளியேறுங்கள்!' ஆயுஷ் பயிற்சி வகுப்பில் தமிழக மருத்துவர்களுக்கு நடந்தது என்ன?

அண்மையில், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், `கனிமொழி அவமதிக்கப்பட்டது போல் 2011-ம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில், இந்தி தெரியாது என்று சொன்னதால் நானும் அவமதிக்கப்பட்டிருக்கேன்’ என்று விகடனுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து,`இந்தி தெரியாது போடா' , `நான் தமிழ் பேசும் இந்தியன்' என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அணிந்து திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பைக் காட்டி வந்தனர். `இந்தி தெரியாது போடா' என்ற ஹேஷ்டேக் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனது. இது குறித்து தி.மு.க எம்.பி. கனிமொழி,``ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகியிருக்கிறது, இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்தவர்களல்ல" என்று ட்வீட் செய்திருந்தார்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

இந்நிலையில், இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஏற்கப்பட்டதையடுத்து ஆண்டுதோறும், செப்டம்பர் 14-ந் தேதி இந்தி தினமாக ( Hindi Diwas) கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தி ஆதரவு ஆளுநர்; மழுப்பிய அமைச்சர், ஐபேக் `ஏழரை' ரிப்போர்ட்..! டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று இந்தி தினத்தை (Hindi Diwas) முன்னிட்டு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், `அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துகள்.. இந்தி மொழி மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்த அனைத்து மொழியியலாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், `நாட்டு மக்கள் தங்களது தாய் மொழியுடன் இந்தியை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும். ஒரு நாட்டின் மிகப்பெரிய அடையாளம் அதன் மொழி. இந்தியாவின் பல்வேறு மொழிகள் மற்றும் கிளைமொழிகள் அதன் வலிமையும் ஒற்றுமையின் அடையாளமும் ஆகும். கலாசார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை நிறைந்த இந்தியாவில், இந்தி பல நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த தேசத்தையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக இருந்து வருகிறது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா ட்வீட்
அமித் ஷா ட்வீட்

மேலும் அவர், இந்தியாவின் கலாசாரத்தில் இருந்து அகற்றவே முடியாதது இந்தி மொழி. பல நூற்றாண்டுகளாக இந்தி மொழிதான் இந்தியாவை ஒருங்கிணைக்கிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் ஒரே சமயத்தில் மாநில மொழிகள் மற்றும் இந்தி மொழியும் வளர்ச்சி அடையும் என்று நம்புவதாகவும் பதிவிட்டிருந்தார். அமித் ஷாவின் இந்த கருத்து, தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு