Published:Updated:

`ஜே.என்.யூ வன்முறைக்கு முழு பொறுப்பை ஏற்கிறோம்!’ - ரக்‌ஷா தளத்தின் பொறுப்பாளர் பிங்கி அறிவிப்பு

பிங்கி சௌத்ரி
பிங்கி சௌத்ரி ( twitter )

``தேசவிரோதச் செயல்களின் மையமாக ஜே.என்.யூ திகழ்கிறது. இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என ரக்‌ஷா தளத்தின் பொறுப்பாளர் பிங்கி சௌத்ரி கூறியுள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இடதுசாரி மற்றும் வலது சாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர். முகமூடி அணிந்த மர்ம நபர்கள் யார் என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுப்பி வந்தனர், இந்த நிலையில், ஜே.என்.யூ-வில் நடந்த வன்முறைக்கு ஹிந்து ரக்‌ஷா தளத்தினர் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளனர்.

ஜே.என்.யு  மோதல்
ஜே.என்.யு மோதல்

இதுதொடர்பாக ரக்‌ஷா தளத்தின் பொறுப்பாளர் பிங்கி சௌத்ரி, ``தேசவிரோதச் செயல்களின் மையமாக ஜே.என்.யூ திகழ்கிறது. இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைக்கு முழு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சம்பவம் நடந்த இடத்தில் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்” என்று ஏ.என்.ஐ ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.

`எனது மகளைப் பின்வாங்கச் சொல்லமாட்டேன்!’ - ஜே.என்.யு  மாணவி ஆய்ஷி கோஷின் தாய்

இந்த நிலையில், ஜே.என்.யூ-வின் மாணவர் அமைப்புத் தலைவர் ஆய்ஷி கோஷ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ``சி.ஐ.எஸ் அலுவலகம் பூட்டப்பட்டதால் தேர்வுக்குப் பதிவுசெய்வது தடைப்பட்டது. ஜே.என்.யூ-வின் பாதுகாவலர்கள் மற்றும் சி.ஐ.எஸ் அலுவலகப் பணியாளர்கள் கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ஆய்ஷி கோஷ் மற்றும் சாகேத் மூன் ஆகியோர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கதவைத் திறந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தியுள்ளனர்” என்றுகூறி காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆய்ஷி கோஷ்
ஆய்ஷி கோஷ்

பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்கள் மீது அளித்த புகாரில், ``பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர். சர்வரை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அதைச் செயலிழக்கவும் செய்தனர். மின் சாதனங்கள் மற்றும் அறைக்குள் இருந்த பயோமெட்ரிக் சிஸ்டங்களையும் அடித்து உடைத்தனர்” என்று கூறியுள்ளனர்.

டெல்லி காவல்துறையினர், வன்முறை தொடர்பாக கிடைத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு முகமூடி அணிந்த நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளனர்.

`40 நாள்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்!' -ஜே.என்.யு விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன?
அடுத்த கட்டுரைக்கு