Published:Updated:

ஹிஜாப் முதல் ஹலால் வரை... கர்நாடகாவில் தலைதூக்கும் இந்துத்துவ அரசியல்!

பசவராஜ் பொம்மை
பிரீமியம் ஸ்டோரி
பசவராஜ் பொம்மை

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழா சமயத்தில் ஆண்டுதோறும் கோயில்களைச் சுற்றித் திருவிழாக்கடைகள் போடுவதற்கான ஏலம் விடப்படும்.

ஹிஜாப் முதல் ஹலால் வரை... கர்நாடகாவில் தலைதூக்கும் இந்துத்துவ அரசியல்!

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழா சமயத்தில் ஆண்டுதோறும் கோயில்களைச் சுற்றித் திருவிழாக்கடைகள் போடுவதற்கான ஏலம் விடப்படும்.

Published:Updated:
பசவராஜ் பொம்மை
பிரீமியம் ஸ்டோரி
பசவராஜ் பொம்மை

அடுக்கடுக்கான மதப் பிரச்னைகளால், இந்திய அளவில் கவனம்பெறும் மாநிலமாக மாறியிருக்கிறது கர்நாடகா. முன்னெப்போதும் இல்லாத வகையில் கர்நாடகாவிலிருந்து மதம் சார்ந்த விஷயங்களே தலைப்புச் செய்திகளாக மாறிவருகின்றன. ஹிஜாப் பிரச்னையில் தொடங்கிய இந்த விவகாரம் `இந்துக் கோயில்களுக்கு வெளியே இஸ்லாமியர்கள் கடை போடக் கூடாது’, `ஹலால் இறைச்சிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்பது வரை வந்து நிற்கின்றன. எப்போதும், ஏதேனும் புகைந்து கொண்டிருக்கும் வட மாநிலங்களில்கூட அடுத்தடுத்து இப்படியான மதப் பிரச்னைகள் எழவில்லை. அப்படியிருக்கையில், `தென் மாநிலமான கர்நாடகாவில் மதப் பிரச்னைகள் தலைதூக்குவது ஏன்?’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கர்நாடகாவில் என்ன நடக்கிறது?

ஹிஜாப் முதல் ஹலால் வரை... கர்நாடகாவில் தலைதூக்கும் இந்துத்துவ அரசியல்!

ஹிஜாப்பில் தொடங்கிய சர்ச்சை!

பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர, கர்நாடக அரசு விதித்த தடையை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில், ``இஸ்லாமியச் சட்டப்படி ஹிஜாப் அணிவது அவசியமில்லை என்பதால், கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்’’ என்று தீர்ப்பளித்தது கர்நாடக உயர் நீதிமன்றம். மார்ச் 28-ம் தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், கர்நாடக அரசு ஹிஜாப் அணிந்துவர அனுமதிக்காததால், 21,000-க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது. கடந்த ஆண்டும் பல்வேறு காரணங்களால், கர்நாடகா முழுவதுமுள்ள சுமார் 3,700 மாணவர்கள் தேர்வெழுதவில்லை. இந்த எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்திருப்பதற்கு ஹிஜாப் பிரச்னைதான் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஒருசில இடங்களில், ஹிஜாப் அணிந்துவந்த மாணவிகளைத் தேர்வெழுத அனுமதித்ததற்காகச் சில ஆசிரியர்களை சஸ்பெண்டும் செய்திருக்கிறது கர்நாடக அரசு.

அதிர்ச்சி தந்த கோயில் பேனர்கள்!

கர்நாடகாவில், ஹிஜாப் விவகாரம் அடங்குவதற்குள்ளாக மற்றொரு மத விவகாரம் தலைதூக்கியிருக்கிறது. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழா சமயத்தில் ஆண்டுதோறும் கோயில்களைச் சுற்றித் திருவிழாக்கடைகள் போடுவதற்கான ஏலம் விடப்படும். ‘இந்த ஏலத்தில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்ளக் கூடாது’ என்று புதிய விதியை அறிவித்து சில பிரபலமான கோயில்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே முல்கி பகுதியிலுள்ள துர்கா பரமேஸ்வரி கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரில், ``இந்த நிலத்தின் சட்டங்களையும் அரசியலமைப்பையும் மதிக்காதவர்களுடன் வியாபாரத்தில் ஈடுபட மாட்டோம். நாங்கள் வணங்கும் பசுக்களை பலியிடுபவர்களுக்கு இனி இங்கு வியாபாரம் செய்ய இடமில்லை’’ என்று சொல்லப்பட்டிருந்தது. `இவண்’ என்ற வாசகத்துக்குக் கீழ் `அனைத்து இந்துக்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் முரண் என்னவென்றால், இந்த துர்கா பரமேஸ்வரி கோயிலைக் கட்டியெழுப்பியதில் இஸ்லாமியர்களுக்கும் பங்கு உண்டு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுசுவாமி
மதுசுவாமி

10-க்கும் மேற்பட்ட கோயில்களில் இது போன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பேனர்களின் பின்னணியில், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், இந்து ஜகரன வேதிகே உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கோயில் நிர்வாகங்களைச் சேர்ந்த சிலர், கர்நாடக ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில், ``இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோயில் நிர்வாகத்திடம், கடைகளுக்கான ஏலங்களில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்ளக் கூடாது எனக் கட்டளையிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். ஹிஜாப் பிரச்னைக்குப் பிறகு நிலைமையே மாறிவிட்டது. இது தொடர்பாக அவர்கள் ஒட்டிய பேனர்கள், போஸ்டர்களை அகற்றினால், பெரிய பிரச்னை வெடிக்கும் என்பதால், அமைதியாக விட்டுவிட்டோம்’’ என்றிருக்கிறார்கள்.

இது குறித்து எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது, ``2002-ம் ஆண்டு கர்நாடகாவில் உருவாக்கப்பட்ட `இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளைச் சட்ட’த்தின்படி, இந்துக் கோயில் நிலங்களுக்கு அருகிலுள்ள கட்டடம், நிலம் உள்ளிட்ட எந்தச் சொத்துகளையும் இந்து அல்லாதவர்களுக்குக் குத்தகைக்கு விடக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டித்தான் பேனர்களும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன’’ என்றார் சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி.

ஹலாலால் மூண்ட அடுத்த பிரச்னை!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் இந்துத்துவ ஆதரவாளர்கள் சிலர், ``உகாதி பண்டிகைக்கு அடுத்த நாள் அசைவம் சாப்பிடும் இந்துக்கள், கடவுளுக்கு அசைவம் படைத்து புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். ஹலால் செய்த இறைச்சியை இந்துக் கடவுள்களுக்குப் படைக்கக் கூடாது. எனவே, இந்துக்கள் ஹலால் இறைச்சியைத் தவிர்ப்போம்’’ என்று பதிவிட்டுவந்தனர். இதுகுறித்துக் கருத்து தெரிவித்த பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி, ``இஸ்லாமியர்களிடமிருந்து இஸ்லாமியர்கள் மட்டுமே பொருள்களை வாங்கும் வகையில் இந்த ஹலால் முறை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள், இந்துக்களிடமிருந்து இறைச்சியை வாங்க மறுக்கும்போது, நாம் மட்டும் ஏன் அவர்களிடமிருந்து இறைச்சியை வாங்க வேண்டும்? இஸ்லாமியர்கள் மற்றவர்களுடன் வியாபாரம் செய்வதைத் தடுக்கவே, ஹலால் என்ற `பொருளாதார ஜிஹாத்’ பயன்படுத்தப்படுகிறது’’ என்று சர்ச்சையைக் கிளப்பினார்.

ஹிஜாப் முதல் ஹலால் வரை... கர்நாடகாவில் தலைதூக்கும் இந்துத்துவ அரசியல்!

``ஹலால் குறித்து எழுந்திருக்கும் தீவிர எதிர்ப்புகளைக் கூர்ந்து கவனித்து, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்’’ என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதையடுத்து, பஜ்ரங் தள் ஆதரவாளர்கள், சில ஹலால் இறைச்சிக் கடைகளுக்குச் சென்று வியாபாரிகளை மிரட்டுவதாகவும், கடைகளைத் தாக்குவதாகவும் செய்திகளும் காணொலிகளும் வெளியாகியிருக்கின்றன.

“எப்போது முதல் நாம் மத அடிப்படையில்கடைகளை அடையாளம் காண ஆரம்பித்தோம்?’’

பெங்களூரில் இயங்கிவரும் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா, ``கர்நாடகம் எப்போதுமே ‘உள்ளடக்கிய பொருளாதார’ (Inclusive Economy) வளர்ச்சியையே உருவாக்கியிருக்கிறது. இது போன்ற வகுப்புவாதத்தை நாம் அனுமதித்தால், அது நமது உலகளாவிய தலைமையை அழித்துவிடும். வளர்ந்துவரும் இந்த மதப்பிளவை முதலமைச்சர் தயவுசெய்து தீர்க்க வேண்டும்’’ என்று பதிவிட்டிருந்தார். இதற்கு வலதுசாரிகளிடமிருந்து ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பின. அதில் ஒருவர், ``இந்துக்கள், மசூதிகளுக்கு வெளியே கடை வைக்க அனுமதிக்கப்படுகிறார்களா?’’ என்று மஜூம்தாரிடம் கேட்க, ``பெங்களூரிலுள்ள மசூதிகளுக்கு அருகில் பல இந்துக்கள் கடை வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மேலும், எப்போது முதல் நாம் மதத்தின் அடிப்படையில் கடை உரிமையாளர்களை அடையாளம் காண ஆரம்பித்தோம்?’’ என்று பதில் கேள்வியெழுப்பினார்.

 சி.டி.ரவி, கிரண் மஜூம்தார் ஷா
சி.டி.ரவி, கிரண் மஜூம்தார் ஷா

“எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறது மாநில அரசு!”

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ``இவ்வளவு காலம் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துதான் கல்வி கற்றார்கள். இந்துக் கோயில்களுக்கு வெளியே இஸ்லாமியர்கள் கடை போட்டுத்தான் வந்தார்கள். ஹலால் இறைச்சி விற்றுத்தான் வந்தார்கள். அப்போதெல்லாம் இல்லாத இந்தப் பிரச்னை திடீரென எப்படிக் கிளம்புகிறது? இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், இந்து அமைப்புகள் கிளப்பும் ஒவ்வொரு பிரச்னைக்கும், கர்நாடக ஆட்சியாளர்கள் ஆதரவாகப் பேசுகின்றனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதுதான் ஓர் அரசின் வேலை. ஆனால், இங்கு எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல மாநில அரசே, இந்து அமைப்புகளை உசுப்பேற்றிவிடுகின்றன என்றே தோன்றுகிறது’’ என்கிறார்கள் வருத்தமாக.

பா.ஜ.க-வினரோ, “ ‘ஹிஜாப் அணியக் கூடாது’ என நீதிமன்றம் சொல்கிறது. ‘இந்துக் கோயில்களுக்கு வெளியே இஸ்லாமியர்கள் கடை போட உரிமையில்லை’ என்று சட்டம் சொல்கிறது. எங்கள் அரசு சட்டத்தைப் பின்பற்றித்தான் நடக்கிறது’’ என்கிறார்கள்.

மத அரசியல் - பின்னணி?

``எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் இது போன்ற மதப் பிரச்னைகள் நடந்ததில்லை. பசவராஜ் பொம்மை பொறுப்பேற்ற திலிருந்துதான் மதப் பிரச்னைகள் நடந்துவருகின்றன. கர்நாடகாவில் மத அரசியலை நிலைநாட்டத்தான் எடியூரப்பாவை நீக்கிவிட்டு, பொம்மை முதல்வராக்கப்பட்டாரோ என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இங்கு காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது. எனவே, 2023 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளத்தான் மத அரசியலை பா.ஜ.க கையிலெடுத்திருப்பதாகத் தெரிகிறது. மதப் பிரச்னைகளை ஆட்சியாளர்களே ஆதரிப்பது வருத்தமளிக்கிறது’’ என்கிறார்கள் கர்நாடக அரசியல் பார்வையாளர்கள்!