Published:Updated:

``இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்!” - சாமியார்களின் கருத்தும் எழுந்த விவாதமும்!

இந்துக்கள் எண்ணிக்கையை கூட்ட வலியுறுத்தும் சாமியார்கள்

`இந்துக்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகளையாவது பெற்றுக்கொண்டு அவற்றில் 2 குழந்தைகளை இந்துத்துவ அமைப்புகளில் சேர்த்து நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும்' என இந்துத்துவ சாமியார்கள் கூறி வருகின்றனர்.

``இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்!” - சாமியார்களின் கருத்தும் எழுந்த விவாதமும்!

`இந்துக்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகளையாவது பெற்றுக்கொண்டு அவற்றில் 2 குழந்தைகளை இந்துத்துவ அமைப்புகளில் சேர்த்து நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும்' என இந்துத்துவ சாமியார்கள் கூறி வருகின்றனர்.

Published:Updated:
இந்துக்கள் எண்ணிக்கையை கூட்ட வலியுறுத்தும் சாமியார்கள்

`இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயக நாடாக இருக்கும். இல்லையெனில் இஸ்லாமிய நாடாக மாறிவிடும். எனவே, இந்துக்கள் குறைந்தபட்சம் 4 குழந்தைகளையாவது பெற்றுக்கொண்டு அவற்றில் 2 குழந்தைகளை இந்துத்துவ அமைப்புகளில் சேர்த்து நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும்' என தொடர்ச்சியாக இந்துத்துவ சாமியார்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சாமியார்கள்
சாமியார்கள்

உத்தரப்‌பிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத்‌ தஸ்னா தேவி கோவிலின்‌ தலைமைப்‌ பூசாரியாக இருப்பவர் யதி நரசிங்கானந்த். சர்ச்சைப் பேச்சுகளுக்கு பெயர்பெற்ற இவர், கடந்த ஏப்ரல் 3-ம் தேதி டெல்லி புராரி மைதானத்தில் நடந்த `இந்து மகா பஞ்சாயத்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``இந்தியாவில் இஸ்லாமியர் ஒருவர் பிரதமரானால் அடுத்த 20 ஆண்டுகளில் நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 50% இந்துக்கள் மதம் மாறுவார்கள். எனவே, இந்துக்கள் ஆயுதம் ஏந்தி தங்களின் இருப்புக்காக போராட வேண்டும்!" என சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். இந்தப் பேச்சுக்காக இவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9-ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நரசிங்கானந்த், ``கணித கணக்கீடுகளின்படி வரும் 2029-ல்‌ இந்து அல்லாத ஒருவர்‌ இந்தியாவின் பிரதமராக வருவார்‌. அப்படி இந்து அல்லாத ஒருவர்‌ பிரதமராக வந்தால்‌ அடுத்த 20 ஆண்டுகளில்‌ இந்துக்கள்‌ அல்லாத தேசமாக இந்தியா மாறும்‌. அந்த ஒரு நிலையைத்‌ தவிர்க்க இந்துக்கள்‌ அதிகமாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்‌" எனப் பேசினார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையாக வெடித்தது.

யதி நரசிங்கானந்த்
யதி நரசிங்கானந்த்

இருப்பினும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத நரசிங்கானந்த் கடந்த 18.04.2022 அன்று இமாச்சலப் பிரதேசம் முபாரக்பூர் பகுதியில் நடைபெற்ற சாமியார்கள் மாநாட்டில் மீண்டும், ``இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்" என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார். இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சத்யதேவானந்த் சரஸ்வதி
சத்யதேவானந்த் சரஸ்வதி

இந்த நிலையில் சாமியார் யதி நரசிங்கானந்த் பேச்சுக்கு ஆதரவாக, மற்றொரு சாமியாரான யதி சத்யதேவானந்த் சரஸ்வதி, ``இந்துக்கள் அதிகமாக இருக்கும் காரணத்தாலேயே இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் நாட்டில் பெருகிவிடுவார்கள். அப்படி நடந்தால், இந்தியா முஸ்லிம் நாடாக மாறிவிடும். இதனைத் தடுக்கவே இந்துக்களை அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறோம். உண்மையை பேச யாருக்கும் பயப்பட தேவையில்லை. இது எங்கள் மாநாடு. அரசாங்கம் எங்களை கட்டுப்படுத்த முடியாது" என அதிரடியாகப் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வரிசையில், தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி ரிதாம்பராவும் சேர்ந்திருக்கிறார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான `துர்கா வாகினி' அமைப்பை நிறுவனராக இருக்கும் இவர் , உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த `ராம் மகோத்சவ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய சாத்வி ரிதாம்பரா, ``பாரதம் அடைந்துள்ள முன்னேற்றத்தைக்கண்டு பொறாமை கொண்டிருப்பவர்களே ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களில் வன்முறை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுபோன்ற அரசியல் பயங்கரவாதம் மூலமாக இந்து சமுதாயத்தை பிளவுப்படுத்த நினைப்பவர்கள் தவிடுபொடியாக்கப்படுவார்கள்" என்றார் ஆவேசமாக.

 சாத்வி ரிதாம்பரா
சாத்வி ரிதாம்பரா

மேலும், ``இந்து பெண்கள் `நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற கொள்கைப்படி குழந்தை பெற்றுவருகிறார்கள். ஆனால், இந்து மதத்தைச் சார்ந்த ஒவ்வொரு பெற்றோரும் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன். இந்த 4 குழந்தைகளில் 2 குழந்தைகளை வீட்டுக்கும், 2 குழந்தைகளை நாட்டுக்கும் அர்ப்பணிக்க வேண்டும். மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு இருந்தால், நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்காது. இந்த ஏற்றத்தாழ்வை போக்க, பொது சிவில் சட்டத்தை கொண்டுவர வேண்டும். அப்படி செய்தால்தான் இந்தியா இந்து தேசமாக மாறும்" என்று பேசினார்.

சாத்வி ரிதாம்பரா
சாத்வி ரிதாம்பரா

அதன்பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது சாத்வி ரிதாம்பராவிடம் ஒரு பத்திரிகையாளர், ``அந்த 2 குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அர்ப்பணிக்கவேண்டும் என சொல்ல வருகிறீர்களா?'' எனக்கேட்டார். அதற்கு பதிலளித்த சாத்வி, ``ஆம், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்க்க வேண்டும். அவர்களை வி.எச்.பி (விஷ்வ இந்து பரிஷத்) தொண்டர்களாக்கி தேசத்துக்காக அர்ப்பணிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

அடுத்தடுத்து, சாமியார்களின் தொடர்ச்சியான இந்த சர்ச்சைப் பேச்சுகள் நாடு முழுவதும் சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சாமியார்களின் இந்த பேச்சுகள் குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். ``இந்தியா சுதந்திரமடைந்தபோது இருந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் மக்கள் தொகையையும், இப்போது இருக்கின்ற அவர்களின் மக்கள் தொகையையும், இந்துக்களின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்துக்களின் மக்கள் தொகை குறைந்திருக்கிறது. மேலும், அரசாங்கத்தின் `நாம் இருவர் நமக்கு ஒருவர், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்' போன்றவை பெரும்பான்மை இந்து மக்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஆனால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் மத வழக்கப்படி எத்தனைக் குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இதைவைத்துப் பார்க்கும்போது, நம் நாட்டின் மக்கள் நலத்திட்டங்கள் மத ரீதியில்தான் முன்னெடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. மக்கள்தொகை கட்டுப்பாடு என்பது அனைத்து மதங்களுக்கும் சமமாக இருக்கவேண்டும். ஆகவே, நமது நாடு அனைவருக்கும் சமமானது என்ற அடிப்படையில் `இந்துக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்' என்ற கருத்தில் தவறில்லை!" என்றார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஆனால், `இது மக்கள் விரோதமான கருத்து' என்று கூறி மறுப்பு தெரிவிக்கிறார் த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன்.

அதாவது, ``இந்தியாவின் மக்கள் தொகை ஏற்கெனவே 125 கோடியைத் தாண்டிவிட்டது. இவற்றில் கால்பகுதி மக்களுக்குக்கூட அரசாங்கத்தால் உணவோ, குடிநீரோ, இருப்பிடமோ, வேலையோ என எதையுமே உருப்படியாகக் கொடுக்கமுடியவில்லை. ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் அன்றாட உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்கே கடுமையாக சிரமப்பட்டுவருகிறார்கள். இந்த நிலையில், இந்துக்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிவது எவ்வளவு பெரிய அபத்தம்.

கு. ராமகிருஷ்ணன்
கு. ராமகிருஷ்ணன்

இஸ்லாமியர்கள் முன்பைப்போல, அவர்களின் மதத்தில் சொல்லப்படுவதுபோல இப்போது அதிகக் குழந்தைகள் ஒன்றும் பெற்றுக்கொள்ளவில்லை. இன்றைய சூழலில் ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பதற்குரிய சிரமத்தை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு மட்டும் பொருட்களுக்கு தனி விலை கிடையாது. எல்லா மக்களுக்கும் எல்லாப் பொருட்களும் இங்கு ஒரே விலைதான்! இந்தப் பொருளாதாரத்தில் நாம் வாழ்வதே பெரிய சவாலாக இருக்கிறது. இன்னமும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை பெருகிவிட்டது, பெருகிவிட்டது என்று அரசியலுக்காக இந்து அமைப்புகள் சொல்வதால், இஸ்லாமியர்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார்கள் என்று அர்த்தம் ஆகாது; இந்து மதத்திலிருக்கும் தீண்டாமைக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட இந்து மக்களும்தான் மதம்மாறி இஸ்லாம் மதத்துக்குச் செல்கிறார்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism