புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``மே 28-ம் தேதி திறக்கப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தில் `செங்கோல்' நிறுவப்படும்’’ எனத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``அரசிடம் செங்கோல் வழங்குவது சோழர்களின் மரபில் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரம் இந்தியாவுக்குக் கைமாறுவதைக் குறிக்கும் வகையில், 1947, ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு முன்னாள் பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.
இந்த `செங்கோல்' என்ற வார்த்தை `நீதி’ எனும் பொருள்படும், `செம்மை' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்தது. செங்கோலின் வரலாறு, முக்கியத்துவம் பலருக்குத் தெரியாது. தமிழ்நாட்டின் சோழர்களின் பாரம்பர்ய மரபை, புதிய நாடாளுமன்றத்தில் நிறுவது, கலாசார பாரம்பர்யங்களை நமது நவீனத்துவத்துடன் இணைக்கும் முயற்சி. புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் திட்டம் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது. செங்கோல் இப்போது அலகாபாத்திலுள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
அங்கிருந்து செங்கோல் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படும். செங்கோல் நிறுவுவதை அரசியலுடன் இணைக்க வேண்டாம் என்று வலியுறுத்துகிறேன். நிர்வாகம் சட்டத்தின் ஆட்சியில் இயங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே இது எப்போதும் எங்களுக்கு நினைவூட்டும். நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்படுவது வரலாற்றின் மறக்கப்பட்ட அத்தியாயத்தின் கவனத்தை ஈர்க்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிடும் அந்தச் செங்கோலின் வரலாறு கீழே உள்ள லிங்க்கில்....