Published:Updated:

`பார்லிமென்ட்டை, லோக்சபா எனப் பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்?’- தமிழ்நாடு பெயர் மாற்ற வரலாறு!

தமிழ்நாடு
தமிழ்நாடு

``பார்லிமென்ட்டை, லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை (council of states) ராஜ்யசபா என்று மாற்றியதில் என்ன லாபம்? பிரசிடென்ட்டை (president) ராஷ்டிரபதி ஆக்கியதால் என்ன லாபம்?’’

"தமிழ்நாடு என்று சொன்னால் வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும். மெட்ராஸ் என்று சொன்னால்தானே சர்வதேச அரங்கத்தில் கேட்கும்போது பெருமையாக இருக்கும்" என்று பல அரசியல் கட்சிகள் எதிர்த்தபோதும் பலவித போராட்டங்களுக்குப் பிறகு, மெட்ராஸ் தமிழ்நாடாக மாறியது. முதன்முதலில், தமிழ்நாடு என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார். ஜூலை 27-ம் தேதி தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும், மதுவிலக்கு, தேர்தல் முறை மாற்றம் என 12 கோரிக்கைகளை முன்வைத்து விருதுநகரில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

சங்கரலிங்கனார்
சங்கரலிங்கனார்

ஆனால், அந்தக் கோரிக்கைகளை அப்போதிருந்த காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. ம.பொ.சி, அண்ணாதுரை, காமராஜர், ஜீவானந்தம் உட்பட பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர், இருந்தும் உண்ணாவிரதத்தை அவர் கைவிடவில்லை. நாளுக்கு நாள் அவர் உடல்நிலையும் மோசமானது. தொடர்ந்து போராடிய சங்கரலிங்கனார் 10-ம் நாளன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அக்டோபர் 13-ம் தேதி அவருடைய உயிர் பிரிந்தது.

`63 ஆண்டுகள்... 37 மாவட்டங்கள்!’- இது தமிழ்நாடு வரைபட வரலாறு #VikatanInfographics

அவர் மறைவுக்குப் பின், சட்டமன்றத்துக்குள் நுழைந்த தி.மு.க, `மெட்ராஸ் ஸ்டேட்' என்பதை தமிழ்நாடு என மாற்ற தீர்மானம் கொண்டுவர, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 127 வாக்குகள் எதிர்க்கட்சியினரும் 42 வாக்குகள் தி.மு.க-வும் பெற்று தோல்வியைச் சந்தித்தது அந்தத் தீர்மானம். 1961-ம் ஆண்டு மீண்டும் மெட்ராஸ் ஸ்டேட் தீர்மானம் சோசலிஸ்ட் (socialist) கட்சியால் கொண்டுவரப்பட்டது. அதற்கு ஆதரவாக ஆளுங்கட்சி வாக்களிக்க வேண்டும் எனவும் சோசலிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. ஆனால், ஒரு மாதம் இந்தத் தீர்மானத்தைத் தள்ளி வைக்குமாறு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் வலியுறுத்தினார். இது தாமதிக்கும் தந்திரம் எனத் தி.மு.க வெளிநடப்பு செய்தது. இதே நிலைமை 3 நாள்களுக்கு நீடித்ததால் காமராஜர் அரசு இறங்கி வந்து, போக்குவரத்துத் துறையில் மட்டும், `தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அரை மனதுடன் அதை ஏற்றுக்கொண்டாலும், முழு வெற்றியை நோக்கிச் செல்வதற்கு ஆயத்தமாகவே இருந்தனர் எதிர்க்கட்சியினர்.

மெட்ராஸ் ஸ்டேட்
மெட்ராஸ் ஸ்டேட்

இந்தநிலையில், இதை இந்திய அளவுக்கு எடுத்துச் சென்றார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா. மாநில அரசு சட்டம் நிறைவேற்றி, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதைவிட, நேரடியாக மத்திய அரசே சட்டம் இயற்ற வழி இருப்பதால், தமிழ்நாடு பெயர் சூட்டக் கோரி, நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா தாக்கல் செய்தார் குப்தா. அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பேரரறிஞர் அண்ணா இதை ஆதரித்து பேசினார். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், “தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன லாபம்?” என்று கேள்வி எழுப்பினார்.

``பார்லிமென்ட்டை, லோக்சபா என்று பெயர் மாற்றியதில் என்ன லாபம் கண்டீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸை (council of states) ராஜ்யசபா என்று மாற்றியதில் என்ன லாபம்? பிரசிடென்ட்டை (president) ராஷ்டிரபதி ஆக்கியதால் என்ன லாபம்?’’ என்றவர், ``தமிழ்நாடு என்ற பெயரைத்தான் நீங்கள் மாநிலத்துக்குக் கொடுத்தாக வேண்டும்” என்பதை அழுத்தமாக வலியுறுத்தினார். என்றாலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த அபரிமிதமான வலிமை காரணமாக `மெட்ராஸ் ஸ்டேட்’ பெயர் மாற்றக் கொண்டுவந்த தனிநபர் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

1967-ல் ஆட்சியைப் பிடித்த தி.மு.க செயின்ட் ஜார்ஜ் கோட்டையை `தமிழக அரசு’ எனப் பெயர் மாற்றியது. அதே வேகத்தோடு பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்து மெட்ராஸ் ஸ்டேட் என்பதைத் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் `தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானம் தயாரிக்கப்பட்டது. அதற்கான தீர்மானத்தை பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார் முதலமைச்சர் அண்ணா.

தமிழ்நாடு
தமிழ்நாடு

``இந்தத் தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இந்த அவையில் நிறைவேற்றப்பட இருக்கிறது என்று கருதுகிறேன். அப்படிப்பட்ட ஒரு வெற்றி கிடைக்குமானால் அது இன்று (தி.மு.க) கழகத்துக்கு வெற்றியல்ல; (ம.பொ.சி) தமிழரசுக் கழகத்துக்கு வெற்றியல்ல, மற்ற கட்சிகளுக்கு வெற்றியல்ல - இது தமிழுக்கு வெற்றி, தமிழருக்கு வெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி, தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில் அனைவரும் இந்த வெற்றியில் பங்குகொள்ள வேண்டும்”எ ன்றார். இதை 1967 ஜூலை 18 அன்று சட்ட மன்றத்தில் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா.

இதன்பின் தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சியினராலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பிறகு, பேசிய முதலமைச்சர் அண்ணா, `தமிழ்நாடு' என்று மூன்று முறை உச்சரிக்க, மூன்று முறையும் `வாழ்க’ கோஷம் எழுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள்.

1967 நவம்பர் 23 தமிழ்நாடு பெயர் மாற்ற நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. பின்னர்1968 ஜனவரி 14-ல் மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ்நாடு ஆக அதிகாரபூர்வமாக மாறியது.

தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு கலைஞர் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மணிமண்டம் எழுப்பப்பட்டது.

- கௌசிகா இளங்கோவன்

அடுத்த கட்டுரைக்கு