Published:Updated:

`எல்லாருக்கும் பாயசம் கொடுங்க' - திமுக-விலிருந்து எம்.ஜி.ஆர் நிரந்தரமாக நீக்கப்பட்ட வரலாறு!

திமுக பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட, கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

1972-ம் வருடம் இதே நாளில்தான் எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். வரும் 17-ம் தேதி அதிமுக பொன்விழா கொண்டாடப்படவிருக்கும் நிலையில், திமுக-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்ட காரணத்தையும், புதிதாக அதிமுக என்கிற கட்சியைத் தோற்றுவித்த வரலாற்றையும் தெரிந்துகொள்வோம்.

கட்சியின் உள் விவகாரங்களைப் பொதுவெளியில் பேசினார் என்கிற காரணத்துக்காக, 1972-ம் வருடம், அக்டோபர் 10-ம் தேதி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் தீவிரமான போராட்டங்களில் இறங்கினர். இந்த நிலையில், அக்டோபர் 14-ம் தேதி எம்.ஜி.ஆரைக் கட்சியைவிட்டு நீக்கும் தீர்மானத்தை நாவலர் நெடுஞ்செழியன் கொண்டு வர, அதை முதலில் திமுக செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து திமுக பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட, கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசும்போது,

``கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான மனஸ்தாபங்கள் 1972 ஜூலையிலேயே தொடங்கிவிட்டன. அது செப்டம்பர் மாதத்தில் உச்சத்துக்குச் சென்றது. பாண்டிச்சேரி முதலமைச்சர் பரூக் மரக்காயர் மூலம் எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், அக்டோபர் ஒன்றாம் தேதி, சென்னை- செங்கை எம்.ஜி.ஆர் மன்றங்களின் கூட்டமைப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அப்போது எம்.ஜி.ஆர் மன்றத்துக்கென தனிக்கொடி உருவாக்கியிருப்பது குறித்து சைதை துரைசாமி சொல்ல, தாய்க் கழகத்துக்கென கொடி இருக்கும்போது, சேய்க் கழகமான நமக்கு தனிக்கொடி எதற்கு என மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.

தலைவி: தமிழகத்தில் ஜெயலலிதாவுக்காக கொ.ப.செ பதவியை எம்.ஜி.ஆர்-தான் அறிமுகப்படுத்தினாரா?

அக்டோபர் 8-ம் தேதி, சென்னை லாயிட்ஸ் ரோட்டிலும், திருக்கழுங்குன்றத்திலும் ஆலந்தூர் எம்.பி மோகனரங்கத்தின் ஏற்பாட்டில் கூட்டம் நடந்தன. இரண்டு கூட்டங்களிலும் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், கட்சியின் வரவு செலவுக் கணக்கு கேட்டும் பல குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் எம்.ஜி.ஆர். அதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி, எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார். அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 14-ம் தேதி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் எம்.ஜி.ஆர். பத்திரிகையாளர் சந்திப்பின்போது, `உங்களைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள்’ என்று சொல்ல, `எல்லாருக்கும் பாயசம் கொடுங்க' என்பதே எம்.ஜி.ஆரின் பதிலாக இருந்தது.

கருணாநிதி
கருணாநிதி

எம்.ஜி.ஆர் போட்டியிட்ட பரங்கிமலைத் தொகுதியின் பொறுப்பாளரான அனகாபுத்தூர் ராமலிங்கம், அதிமுக என்கிற பெயரில் சொசைட்டி ஒன்றைப் பதிவு செய்துவைத்திருந்தார். அதில் சேரும் முடிவை அக்டோபர் 16-ம் தேதியே எடுத்துவிட்டார் எம்.ஜி.ஆர். அக்டோபர் 17-ம் தேதி அதை அதிகாரபூர்வமாகவும் அறிவித்தார்'' என்றவர், கருணாநிதி இதை எதிர்கொண்டவிதம் குறித்தும் விளக்கினார்.

``இன்றுதான் நாம் அந்தக் கட்சியின் `பி டீம்’, இந்தக் கட்சியின் `பி டீம்’ என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால், கலைஞர் 'எம்.ஜி.ஆரின் அதிமுக ஒட்டு காங்கிரஸ்' என வர்ணித்தார். அதாவது, திமுக-வுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, எம்.ஜி.ஆரை வைத்து அதிமுக-வை உருவாக்கியதாகக் குறிப்பிட்டிருப்பார்'' என்கிறார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எம்.ஜி.ஆர் நீக்கத்துக்குக் காரணமாக இருந்த சென்னை லாயிட்ஸ் ரோட்டில் அவர் நிகழ்த்திய உரையில்,

``கழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே... அப்படிப்பட்டவை கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு, சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா? திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம். யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கு காட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?

ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்த பிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவிமீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது?

ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்கு காட்டு!

எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர்.

இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக்கொள்வோம். இந்தத் தீர்மானங்களைப் பொதுக்குழுவில் கொண்டுவரவிருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லையென்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன். மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்ல வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காகக் குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களையெல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி, தூக்கி எறிவோம்'' என அனல்பறக்கப் பேசினார் எம்.ஜி.ஆர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு