Published:Updated:

துரை முருகன் முட்டுக்கட்டை; 16 ஆண்டுகள் காத்திருப்பு - அமைச்சராகும் ராணிப்பேட்டை காந்தியின் வரலாறு

காந்தி
காந்தி

‘‘16 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது அமைச்சர் கனவு இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது’’ என்று தன் ஆதரவாளர்களிடம் ஆனந்த கண்ணீர் விட்டு பெருமைப்பட்டுக் கொள்கிறார் ஆர்.காந்தி.

தி.மு.க-வின் அமைச்சரவைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து ஆறுமுறை போட்டியிட்டு நான்காவது முறை வெற்றிப் பெற்றிருக்கும் காந்தி முதல்முறையாக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தி.மு.க-வில், துரைமுருகனுக்கு அடுத்த நிலையில் அதிகார மிக்கவராகவும் பார்க்கப்படுபவர் காந்தி. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார்.

தேர்தல் வரலாறு:

1996 முதல் 2021-ம் ஆண்டு வரை நடைபெற்ற 6 சட்டமன்றத் தேர்தல்களிலும் ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க சார்பில் காந்தி மட்டுமே வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். 1996 தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட அவர் வெற்றிக் கனியைப் பறித்து சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஸ்டாலினுடன் காந்தி
ஸ்டாலினுடன் காந்தி

அதுவரை கட்சியில் சாதாரணப் பொறுப்பிலிருந்த காந்தி 2000-ம் ஆண்டில் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக உச்சம் தொட்டார். 2001 தேர்தல் நெருங்கியது. அந்த தேர்தலில் ராணிப்பேட்டையில் மீண்டும் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். மாவட்டச் செயலாளர் பதவியும் 2004-ல் பறிக்கப்பட்டது. 2006 சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள்ளாக புதிய மாவட்டச் செயலாளர் இறந்துவிட, காந்திக்கு மீண்டும் ஜாக்பாட் அடித்தது. மாவட்ட செயலாளர் பொறுப்பில் மீண்டும் நியமிக்கப்பட்ட காந்தி 2006 தேர்தலிலும் மூன்றாவது முறையாகக் களமிறக்கப்பட்டார். அதில், அவர் வெற்றி பெற்றுவிட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தி.மு.க-வில் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக காந்தியின் கையும் ஓங்கியது. நிர்வாகிகள் பலரும் காந்தி வீட்டு முற்றத்தில் குவியத் தொடங்கினர்.

ஸ்டாலின் முதல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை... யாருக்கு என்ன துறை?! -வெளியானது அமைச்சரவை பட்டியல்

அப்போது, தி.மு.க ஆட்சி என்பதால் அமைச்சரவையில் காந்தியும் இடம் பெறுவார் என்று அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், துரைமுருகனின் செல்வாக்கினால் அமைச்சரவைப் பட்டியலிலிருந்து காந்தியின் பெயர் நீக்கப்பட்டதாகவும் அப்போதே உட்கட்சிப் பூசல் நிலவியது. 2011-ல் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி அமைந்தது. நான்காவது முறை களமிறங்கிய காந்தி தோல்வியைத் தழுவினார். 2016 தேர்தலிலும் அ.தி.மு.க ஆட்சி நீடித்த நிலையில், காந்தி மீண்டுவந்து வெற்றி பெற்றார். ஒருமுறை வெற்றி, மறுமுறை தோல்வி என காந்தியின் அரசியல் வரலாறு 1996 முதல் 2016 தேர்தல் வரை எழுதப்பட்டிருந்தது. ராணிப்பேட்டை தொகுதியின் சென்டிமென்ட்டும் இதுதான் என்று அரசியல் கட்சிகள் கருதின. ஆனால், இந்த தேர்தலில் அந்த சென்டிமென்ட்டை தகர்த்தெறிந்துள்ளார் காந்தி.

குடும்பத்துடன் காந்தி
குடும்பத்துடன் காந்தி

இப்போது நடைபெற்ற 2021 தேர்தலில் 6-வது முறையாகப் களம்கண்ட காந்தி தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டார். இதன் மூலம் அவர் 4 முறை சட்டமன்றத்துக்குத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளதால், மூத்த உறுப்பினர்களுள் ஒருவராகவும் அந்தஸ்துப் பெற்றுள்ளார். இந்த முறை அமைச்சரவையில் காந்தி கட்டாயம் இடம்பெறுவார் என்று தி.மு.க வட்டாரத்தில் உறுதியான தகவல்கள் ஏற்கெனவே பகிரப்பட்டிருந்தன. அதன்படி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் காந்தி. தி.மு.க மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆற்காடு வீராசாமியிடம் அரசியல் பாடம் கற்றவர் காந்தி. தொடக்கம் முதல் இப்போது வரை தி.மு.க-வில் மட்டுமே இருக்கிறார். காந்திக்கு கமலா என்ற மனைவி, வினோத், சந்தோஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் இருவரும் சர்வதேச தரத்திலான ஜி.கே என்ற பள்ளியை ராணிப்பேட்டையில் நிர்வகித்து வருகிறார்கள்.

தி.மு.க-வில் `சாதனைச் செம்மல்’ என்றே காந்தியை அழைக்கிறார்கள். ``16 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது அமைச்சர் கனவு இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது’’ என்று தன் ஆதரவாளர்களிடம் ஆனந்த கண்ணீர் விட்டு பெருமைப்பட்டுக் கொண்டதாக தெரிவிக்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.

அடுத்த கட்டுரைக்கு