Published:Updated:

`இந்து, இஸ்லாமியர் என்பதில்லை; இறந்தவர்கள் இந்தியர்கள்!' - வன்முறைக்கு விளக்கமளித்த அமித் ஷா

அமித் ஷா
அமித் ஷா

``வடகிழக்குப் பகுதிகளில் நடந்த வன்முறைகளை சாதாரணமாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இவை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்" என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியதிலிருந்தே டெல்லியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பி வந்தனர். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, கோஷங்களை எழுப்பினர். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பின்னர் அவையும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று கூடிய அவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வன்முறைச் சம்பவங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றினார்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

டெல்லியின் மற்ற பகுதிகளில் கலவரங்கள் பரவாமல் தடுத்ததாகக் காவல்துறையினரைப் பாராட்டிய அமித் ஷா, வன்முறைச் சம்பவங்களை சுமார் 36 மணி நேரத்தில் காவலர்கள் கட்டுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல்களில் இறந்தவர்களுக்குத் தனது இரங்கலையும் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எந்த நிகழ்ச்சியிலும் தான் கலந்துகொள்ளவில்லை என்றும் நாள் முழுவதும் காவல்துறையினருடன்தான் இருந்தேன் என்றும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார். வன்முறைகள் தொடர்பாக 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 2,600-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ``வடகிழக்குப் பகுதிகளில் நடந்த வன்முறைகளை சாதாரணமாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இவை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். கலவரங்களுக்குக் காரணமானவர்கள் கட்சி, மதம் மற்றும் சாதி பேதமின்றித் தண்டிக்கப்படுவார்கள். கலவரம் தொடர்பாக மக்களிடம் உள்ள வீடியோ காட்சிகளை அனுப்பச் சொல்லிக் கேட்டுள்ளோம். முக அடையாளத்தை வைத்துக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள். இது ஒரு மென்பொருள். எனவே, மதத்தின் அடிப்படையில் எந்த வேறுபாடுகளையும் காட்டாது, அப்பாவி நபர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை உறுதியளிக்கிறேன்" என்றார்.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

`இந்து மற்றும் இஸ்லாமியன் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை' என்று கூறிய அமித் ஷா, ``இறந்த 52 பேரையும் இந்தியர்களாகவே பார்க்கிறேன். நாடாளுமன்றத்தை மதத்தின் அடிப்படையில் பிரிக்கமுடியுமா என்ன? காங்கிரஸினர் ஆட்சியின்போது நடந்த கலவரங்களில்தான் 76 சதவிகிதம் இறந்தனர். பிப்ரவரி 25-க்குப் பிறகு கலவரங்கள் நடைபெற வில்லை. இந்தச் சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது" என்றும் பேசினார்.

மேலும், ``குடியுரிமை திருத்தச் சட்டமானது முறையான கலந்துரையாடலுக்குப் பிறகே ஜனநாயக முறையில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமையைத் திரும்பப் பெறுவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. துன்புறுத்தப்படும் மக்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்கான விதிமுறைகள் உள்ளன. எனக்கு மத அடிப்படையிலான 25 சட்டங்கள் தெரியும். இஸ்லாமியத்திற்கான சட்டங்கள் தெரியும். எனவே, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்தச் சட்டம்தான் முதல் சட்டம் எனக் கூறுவது தவறு. இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணிகளைவிட ஆதரவு தெரிவித்து நடந்த பேரணிகளே அதிகம்" என்று பேசியுள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

அமித் ஷாவின் பதில்களை ஏற்க மறுத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இதன் பிறகு பேசிய அமித் ஷா, `` வன்முறை குறித்த விளக்கங்களை அளிக்கும்போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டார்.

டெல்லி கலவரம்: 2 சேனல்களுக்கு 48 மணி நேர தடை விதிப்பு... உடனடியாக நீக்கப்பட்டது ஏன்?
அடுத்த கட்டுரைக்கு