Published:Updated:

உடன்படாத ரஜினி... அசையாத அழகிரி - அமித் ஷாக்!

கடைசி நேரத்தில் தயாரான ஸ்க்ரிப்ட்!

பிரீமியம் ஸ்டோரி
“நாட்டிலேயே ஊழல் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழகம்தான். தூய்மையான நல்லாட்சி தருகிற, சட்டம் - ஒழுங்கைக் காக்கும், ஊழலை அப்புறப்படுத்தும் கட்சிகளுடன் வலிமையான கூட்டணியை அமைப்போம்...” - கடந்த 2018, ஜூலை 9-ம் தேதி சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் அமித் ஷா வெடித்த பழைய பட்டாசு இது.

``ஊழல் கட்சி’’ என்று அ.தி.மு.க-வை அழுக்குத் தண்ணீரால் ஊற்றி ஊற்றிக் கழுவிய அதே அமிஷ் ஷாதான், இப்போது “இந்த ஆட்சிக்குப் பாறையைப் போல துணையாக இருப்போம்” என்று அந்தக் கட்சிமீது புனிதநீரைத் தெளித்து, கூட்டணி கூஜாவை தூக்கவைத்திருக்கிறார். பரஸ்பரம் மாறி மாறிப் ‘பேசியதை’ துடைத்துக்கொண்டு, வெட்கமே இல்லாமல் கைகோத்தார்கள். இத்தனைக்கும் ஏற்கெனவே தமிழக ஆளுங்கட்சி முகாமுக்குள் சி.பி.ஐ உருட்டல்கள்... வருமான வரித்துறை மிரட்டல்கள்... அமலாக்கத்துறை அதட்டல்கள் என வலம்வந்தார்கள் மத்திய அரசின் கைத்தடி அதிகாரிகள். “அடேங்கப்பா... மத்திய அரசிடம்தான் என்னவொரு நேர்மை” என்று மக்கள் வியந்துகொண்டிருந்தபோதுதான், சென்னைக்கு வந்த அமித் ஷாவை மரபுகளையெல்லாம் மீறி விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றது முதல்வர், துணை முதல்வர் அண்ட் கோ. இப்படியாக ஒரு சுபயோக சுபதினத்தில்தான் தமிழகத்துக்கு வருகை தந்து, கூட்டணியை உறுதிசெய்து, தேர்தல் தேனிலவுக்கும் நாள் குறித்துச் சென்றிருக்கிறார் அமித் ஷா.

தமிழகத்தில் அமித் ஷா இருந்த நவம்பர் 21, 22 ஆகிய இரு நாள்களிலும் பா.ஜ.க., அ.தி.மு.க முகாம்களில் என்ன நடந்தது, அமித் ஷாவின் வருகைக்கான நோக்கம்தான் என்ன, அழகிரி மற்றும் ரஜினி தரப்புகள் அமித் ஷாவைப் புறக்கணித்தனவா, குருமூர்த்தி சந்திப்பில் பேசப்பட்டது என்ன, எப்படி உறுதியானது பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி, அமித் ஷா ஏமாற்றம் அடைந்தது ஏன்... இப்படிப் பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தை வட்டமடிக்கின்றன. விடைதேடிக் கிளம்பினோம்...

அமித் ஷா
அமித் ஷா

கடைசி நேரத்தில் தயாரான ஸ்க்ரிப்ட்!

அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், “அரசு நிகழ்வில் பங்குபெறுவதற்காகவே அமித் ஷா வருகிறார்” என்று ஒரு வாரமாகவே காலி டப்பாவை உருட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அமித் ஷாவின் வருகைக்குப் பின்னால் சில அரசியல் திட்டங்களும் இருந்தன. நவம்பர் 21-ம் தேதி மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் அமித் ஷா பேசும்போது,

“தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு ஊழலைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? 2ஜி மட்டுமல்ல... பல ஊழல்களுக்குச் சொந்தமானவர்கள் நீங்கள்” என்று வெடித்துத் தீர்த்தார். மேடையில் அனைவரும் அமர்ந்த பிறகும், பம்மிப் பதுங்கி நின்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம், “வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்” என்று உறுதி கொடுத்ததை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்திருக்கிறார். ஆனால், இந்தக் கூட்டணி ஸ்கிரிப்டே கடைசி நேரத்தில் தயார் செய்யப் பட்டதுதான் என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

இது குறித்து நம்மிடம் பேசிய இரு தரப்புக்குமே நெருக்கமான சில அரசியல் சீனியர்கள், “அமித் ஷா வருகைக்கு முதல்நாள் மாலை, கட்சித் தலைமையகத்தில் நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில், ‘கூட்டணி குறித்துப் பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று பேசிய இரட்டைத் தலைவர்கள், அடுத்த 24 மணி நேரத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அறிவிப்பை மேடையில் வெளியிட்டு சொந்தக் கட்சியினருக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். பா.ஜ.க-வைப் புறக்கணித்தால் என்ன நடக்கும் என்கிற அச்சமே தலைமையின் ஸ்கிரிப்ட் கடைசி நேரத்தில் மாறியதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இப்படி ஸ்கிரிப்ட் மாறியதற்கு முக்கியக் காரணமே ரஜினி மற்றும் அழகிரி விவகாரத்தில் அமிஷ் ஷாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்கள்தான். உண்மையில், மேற்கண்ட இருவரையும் சந்திப்பதுதான் அமித் ஷாவின் மெயின் அஜெண்டாவாக இருந்தது” என்றவர்கள், அதை உறுதி செய்யும் வகையிலான தகவல்களையும் சொன்னார்கள்.

உடன்படாத ரஜினி; அப்செட் குருமூர்த்தி

“அமித் ஷா வருகை இறுதி செய்யப்பட்டபோது, அவர் ராஜ்பவனில் தங்கவே முதலில் முடிவானது. ஆனால், ரஜினி உள்ளிட்ட வெளி நபர்களுடன் அரசியல் சந்திப்பு நடக்கும் என்பதால், ராஜ்பவனை கேன்சல் செய்துவிட்டு, லீலா பேலஸில் அறைகளை புக் செய்திருக்கிறார்கள். ‘ரஜினி உங்களைச் சந்திப்பார். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்று அமித் ஷாவிடம் உறுதி கொடுத்ததே ஆடிட்டர் குரூமூர்த்தி தரப்புதான். அதன் பிறகே அமித் ஷா விமானம் ஏறியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்த குரூமூர்த்தி, ‘அமித் ஷா தமிழகம் வரும்போது, நீங்கள் அவரைச் சந்தித்தால், தமிழகத்தில் ஓர் அரசியல் மாற்றத்துக்கு வழி பிறக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், வழக்கம்போல ரஜினியிடமிருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரவில்லை. ஆனாலும், ‘ரஜினியை எப்படியாவது சந்திக்கவைத்துவிடலாம் அல்லது ரஜினியின் பிரதிநிதியாக ஒருவரைச் சந்திக்கவைத்துவிடலாம்’ என்று கணக்கு போட்ட ஆடிட்டர் தரப்பு அதீத நம்பிக்கையுடன், ‘அமித் ஷா வரும்போது ரஜினி சந்திப்பு நடக்கும்’ என்று டெல்லிக்குத் தகவலை பாஸ் செய்திருக்கிறது. நவம்பர் 22-ம் தேதி காலை, ரஜினியுடன் சேர்ந்து உணவருந்துவது வரை திட்டம் தீட்டப்பட்டது. இவையெல்லாம் கடைசி நேரத்தில் கானல்நீராகி விட்டன.

அமித் ஷா தமிழகம் வந்தபோது, ‘ரஜினிக்குக் காய்ச்சல், அவர் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்கிறார்’ என்று தகவல் பரப்பப்பட்டது. ஆனால், உடனடியாக இதை மறுத்த ரஜினி தரப்பு, `அவர் உடல்நலத்தோடு போயஸ் கார்டன் இல்லத்தில்தான் இருக்கிறார்’ என்று விளக்கமளித்தது. இது குறித்து ரஜினியிடம் பேசிய அவருக்கு நெருக்கமானவர்கள், `நீங்க இன்னும் கட்சியே ஆரம்பிக்கலை. இப்போ நீங்க அமித் ஷாவைச் சந்திச்சா, அ.தி.மு.க ஊழல் கூட்டணியோட உங்களையும் இணைச்சுப் பேசிடுவாங்க. அது, உங்க அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதில்லை. அவசரப்படாதீங்க’ என்று கூறியிருக்கிறார்கள். இதனால்தான், அமித் ஷா சந்திப்பை ரஜினி தவிர்த்தாராம். நவம்பர் 21-ம் தேதி இரவு 10 மணி வரை, ரஜினியை வரவழைப்பதற்குக் கடும் பிரயத்தனம் செய்த குருமூர்த்தி தரப்பு, அது நடக்காததால் வேறு வழியில்லாமல் தனியாகவே லீலா பேலஸுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது.

அமித் ஷாவிடம், ‘ரஜினிக்குக் காய்ச்சல் என்பதால் அவரால் வர முடியவில்லை. நீங்களே அவரிடம் பேசுங்கள்’ என்று சமாளித்த ஆடிட்டர் தரப்பு, தனது மொபைல்போன் மூலமே ரஜினிக்கு போன் போட்டுக் கொடுத்திருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் எதற்குமே உடன்படாமலும் பிடிகொடுக்காமலும் பேசினாராம் ரஜினி. போன் உரையாடல் முடிந்ததும் கடுப்பான அமித் ஷா, ‘நீங்கள் சொல்லியது எதுவுமே நடக்கவில்லை. உங்களை நம்பி நான் தமிழகம் வந்ததற்கு நன்றாகவே பரிசளித்துவிட்டீர்கள்’ என்று கடுமை காட்டினாராம். பதிலேதும் பேச முடியாமல் கிளம்பிச் சென்றார் ஆடிட்டர்” என்றார்கள் விரிவாக.

ரஜினி - அழகிரி
ரஜினி - அழகிரி

அசையாத அழகிரி; மூட் அவுட்டில் அமித் ஷா!

ரஜினியுடன் சந்திப்பு நடைபெறாதது ஒரு ஷாக் என்றால், அழகிரியுடனான சந்திப்பு நிகழாதது அமித் ஷாவுக்கு டபுள் ஷாக் என்கிறார்கள். கடந்த ஒரு வாரமாகவே, ‘அமித் ஷா சென்னைக்கு வரும்போது, அவரை அழகிரி மரியாதை நிமித்தமாகச் சந்திப்பார்’ என்கிற தகவல் கமலாலயம் வட்டாரத்திலிருந்து கசியவிடப்பட்டது. ஆனால், அமித் ஷா வருகைக்கு முதல் நாள், ‘இந்தச் சந்திப்பு நிகழாது’ என்று மதுரையிலிருந்து தெரிவிக்கப்பட்ட வுடன், பா.ஜ.க-வினர் பதற்றமாகிவிட்டனர். பல வழிகளிலும் அழகிரியை நெருங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. யார் பேச்சுக்கும் அசைந்து கொடுக்காத அழகிரி, நவம்பர் 21-ம் தேதி தனது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார். பா.ஜ.க-வில் இணைந்த, அழகிரிக்கு நெருக்கமானவரான தி.மு.க முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் மூலம் அழகிரியை சென்னைக்கு அழைத்துவர முயன்றிருக்கிறார்கள்.

அதற்கு ராமலிங்கம் தரப்போ, “அழகிரியை நீங்கள் நம்ப வேண்டாம். அவரின் மகன் தயாநிதிக்கு தி.மு.க அறக்கட்டளையில் பதவி வாங்கும் எண்ணம் மட்டுமே அவரிடமிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு அவர் வருவது சாத்தியமில்லை” என்று போட்டு உடைத்திருக்கிறது. வேறு வழியில்லாமல், அழகிரியின் மகள் கயல்விழியையாவது மரியாதை நிமித்தமாக அமித் ஷாவுடன் சந்திக்கவைப்பதற்குக் கடைசி நேர முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதுவும் சாத்தியப்படவில்லை. தான் தமிழகம் வரும்போது ரஜினியுடன் காலை உணவு, அழகிரியுடன் அளவளாவல் என்று மிகப்பெரிய அதிர்வைக் கிளப்பலாம் என்று அமித் ஷா கணக்கு போட்டிருக்கிறார். இரண்டுமே நடக்காதது, அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. சென்னையிலிருந்த இரண்டு நாள்களுமே மூட் அவுட்டில் இருந்த அமித் ஷா, தன்னுடைய அப்பாயின்ட்மென்ட்டுகள் பலவற்றையும்கூட கடைசி நேரத்தில் கேன்சல் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சரண்டரான இரட்டையர்கள்!

அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தனித்தனியாகவே சந்திக்கும் வகையில் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், ‘தனித்தனியாகச் சந்திப்பு நடத்தினால் பன்னீர் தேவையில்லாமல் ஸ்கோர் செய்துவிடுவார்’ என்று உஷாரான எடப்பாடி, ‘ஒன்றாகவே சந்திக்கலாம்’ என்று காய்நகர்த்திவிட்டாராம்.

இது குறித்துப் பேசிய அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகள், “அமித் ஷா சந்திப்பில், ‘பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் இடங்களை அ.தி.மு.க தலைமையே இறுதி செய்யும். 40 இடங்கள் வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அவ்வளவு அளித்தால், பா.ம.க-வும் அதிக தொகுதிகளைக் கேட்கும். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றனவோ, அவற்றைவிடச் சற்றுக் கூடுதலாக நாங்கள் ஒதுக்குகிறோம்’ என்று எடப்பாடியும் பன்னீரும் தயங்கித் தயங்கிச் சொல்லியிருக்கிறார்கள். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அமித் ஷா, ‘எங்கள் பலத்தை உணர்ந்துதான் நாங்கள் கேட்கிறோம். சீட் ஒதுக்கீடு பற்றிப் பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

எதுவும் பேச முடியாத நிலையில் எடப்பாடியும் பன்னீரும், தி.மு.க-வுக்குப் பணம் வரும் வழிகளைத் தடுப்பது குறித்துப் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘பரிசு’ அதிபர் ஒருவர் மூலமாகச் செல்லும் பரிமாற்றங்கள் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. அப்போது தி.மு.க தலைவர்கள்மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்குகளின் நிலை குறித்தும், 2ஜி, தனியார் டெலிகாம் உரிமையாளர் சாகித் பாவ்லா வழக்குகள் குறித்தும் அமித் ஷா சில விவரங்களையும் கருத்துகளையும் கேட்டிருக்கிறார்.

லீலா பேலஸ் ஹோட்டலில் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை முடியும் தறுவாயில், சசிசகலா விடுதலை தொடர்பாகவும் சில கருத்துகளை பன்னீர் முன்வைத்துள்ளார். ‘சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் கொண்டுவந்தால், தேர்தல் நேரத்தில் தென் மாவட்டங்களிலும் நமது கூட்டணி வலுவாக இருக்கும். அ.ம.மு.க-வுக்கு ஐந்து முதல் பத்து சதவிகித வாக்குகள் இருக்கின்றன. அதைச் சரிக்கட்ட சசிகலாவை உடன் வைத்துக் கொள்வது நல்லது’ என்று பன்னீர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை எடப்பாடி ரசிக்கவில்லை. பன்னீரின் கருத்துக்கு எந்த பதிலும் சொல்லாமல், ‘நேரம் வரும்போது பேசிக்கொள்ளலாம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு வழியனுப்பியிருக்கிறார் அமித் ஷா” என்றார்கள்.

உடன்படாத ரஜினி... அசையாத அழகிரி - அமித் ஷாக்!

ஐந்து வருடம் தூங்கக் கூடாது!

நவம்பர் 21-ம் தேதி மாலை 6:20 மணிக்கு நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில், வடமாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர், “அ.தி.மு.க மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் இருக்கின்றன. அவர்களின் ஊழலை நாம் தோளில் சுமக்க வேண்டுமா, அவர்களுடன் நாம் ஏன் கூட்டணியில் இருக்க வேண்டும், தனியாகவே களமிறங்கலாமே?” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த அமித் ஷா, “அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். இப்போதைக்குக் கட்சியை பலப்படுத்தும் வேலையை மட்டும் பாருங்கள். அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தூக்கம், சோர்வு பார்க்காமல் உழைத்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். மீண்டும் நான் தமிழகம் வருவேன். அப்போது, கட்டமைப்புரீதியாகக் கட்சியை வலுப்படுத்தியிருக்க வேண்டும்” என்றாராம். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டம், இரவு விருந்துடன் முடிந்திருக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் அங்கம்வகிக்கும்

தே.மு.தி.க., பா.ம.க கட்சிகளைச் சேர்ந்த யாரும் தனிப்பட்ட முறையில் அமித் ஷாவைச் சந்திக்கவில்லை. கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷும், பா.ம.க முன்னாள் எம்.பி ஏ.கே.மூர்த்தியும் கலந்துகொண்டனர்.

களமிறங்கும் ஆர்.எஸ்.எஸ்

நவம்பர் 22-ம் தேதி காலை 8 மணிக்கு, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அமித் ஷாவுடன் பேசியிருக்கிறார்கள். அப்போது, “முதன்முறையாகத் தமிழகத் தேர்தல் களத்தில் 20,000 ஆர்.எஸ்.எஸ் களப்பணியாளர்களைக் களமிறக்கப்போகிறோம். அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்துக்குள் ஒன்றரைக் கோடி இந்துக் குடும்பங்களிடம் தி.மு.க-வின் ‘இந்து விரோத’ போக்கைக் கொண்டுசேருங்கள். தி.மு.க-வை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களைச் சித்தாந்தரீதியாக உடைப்பது, ஆர்.எஸ்.எஸ் கையில்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

அமித் ஷாவின் அடுத்த வருகைக்குள், கே.பி.ராமலிங்கம், கு.க.செல்வம் போன்ற பழைய ஆட்கள் பலரையும் தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்கு இழுக்கும் வேலைகள் துரிதமாகியிருக்கின்றன. முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், இரண்டாம்கட்டத் தலைவர்கள் எனப் பலரிடமும் ரகசியப் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது கமலாலயம். தி.மு.க-வுக்கு செக் வைக்கும் ஒரு பெரிய பட்டியலே பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகனிடம் இருக்கிறதாம். இதுபோக, தி.மு.க மீதுள்ள வழக்குகளும் தூசு தட்டப்பட்டுள்ளன. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறுதியாகிவிட்டதால், எதிர்த் தாக்குதலுக்குத் தயாராகிவருகிறது அறிவாலயம்.

அமித் ஷாவின் வருகை தமிழக அரசியலில் சலசலப்பைக் கிளப்பியிருந்தாலும், பா.ஜ.க தரப்புக்கு இந்த வருகை பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. வந்த நோக்கம் ஈடேறாததால், வெறும் கையோடு டெல்லிக்குத் திரும்ப வேண்டாம் என்றுதான் அ.தி.மு.க கூட்டணியை அவசரமாக அறிவிக்கவைத்திருக்கிறார் அமித் ஷா. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மீண்டும் தமிழகம் வரவும் அவரிடம் ஒரு திட்டம் இருக்கிறது. அதற்குள் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடாதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறது கமலாலயம். அமித் ஷா கணக்குகள் ஈடேறுமா... மீண்டும் ‘ஷாக்’ அடிக்குமா என்பது அடுத்தடுத்த வாரங்களில் தெரிந்துவிடும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அழுத்தம் தரும் ஆளுநர்!

நவம்பர் 23-ம் தேதி, ஆளுநரைச் சந்திப்பதற்காக முதல்வர் பழனிசாமிக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சந்திப்பை இருவருமே கேன்சல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது. இது குறித்து உயரதிகாரிகள் சிலர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை நிறுத்தும்படி, ஆளுநர் தரப்பிலிருந்து கடும் அழுத்தம் தரப்படுகிறது. அங்கிருந்து வந்த அழுத்தத்தின் பெயரிலேயே, நவம்பர் 22-ம் தேதி காலையில், அமைச்சர் கே.பி.அன்பழகனை நேரில் அழைத்து சூரப்பா விவகாரம் தொடர்பாக அமித் ஷா விவாதித்திருக்கிறார். அப்போது, சில ஆவணங்களைச் சுட்டிக்காட்டி அன்பழகன் பேசியதும், அமித் ஷாவால் எதுவும் பேச முடியவில்லை. இதைத் தொடர்ந்து, நிவிர் புயல் எச்சரிக்கை, கொரோனா பரவல் தொடர்பாக 23-ம் தேதி ஆளுநரைச் சந்தித்துப் பேச அரசுத் தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ‘ஆளுநரைச் சந்திக்கும்போது சூரப்பா விவகாரம் தொடர்பாக அவர் பேசுவார். பதிலுக்கு நாம் ஏதாவது பேச வேண்டியிருக்கும். இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுக்கக் கூடாது’ என்று மூத்த அமைச்சர்கள் பலர் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்ததால், கடைசி நிமிடத்தில் ஆளுநருடனான சந்திப்பு ரத்துசெய்யப்பட்டது” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு