Published:Updated:

`அழகிரிக்கு அழைப்பு... அ.தி.மு.க-வுக்கு அச்சம்’ - அமித் ஷா தமிழக விசிட்டின் பின்னணி!

அமித் ஷா
அமித் ஷா

`அமித் ஷாவின் வருகையை வைத்து ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களமும் மாற்றமடைந்துவிடும் என்று பா.ஜ.க நினைக்கிறது. அது வடமாநிலங்களுக்கு ஒத்துவரும்; தமிழகத்துக்கு ஒத்து வராது’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

``அமித் ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும்” என்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன். உண்மையில் அமித் ஷாவின் தமிழகப் பயணம் எந்த மாதிரியான அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் கட்சிகளிடம் ஏற்பட்டிருக்கிறது.

எல்.முருகன் வேல் யாத்திரை
எல்.முருகன் வேல் யாத்திரை

மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா பா.ஜ.க-வின் தேர்தல் வியூகத்தை முன்னெடுக்கும் நபராகவும் செயல்பட்டுவருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரது வியூகத்தை முன்வைத்தே பா.ஜ.க பல மாநிலங்களிலும் தேர்தலைச் சந்தித்துவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தலுக்குப் பிந்தைய பல கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க-வுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்தும் என்றன. ஆனால், கருத்துக் கணிப்புக்களைப் பொய்யாக்கி மீண்டும் பா.ஜ.க -நிதிஷ் கூட்டணியே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. இதற்கு, அமித் ஷாவின் ராஜதந்திரமே காரணம் என்று புளகாங்கிதம் அடைந்தனர் பா.ஜ.க-வினர்.

பீகார் தேர்தல் நடந்துகொண்டிருந்தபோதே, அமித் ஷா மேற்குவங்க மாநிலத்துக்கு விசிட் செய்தார். அங்கு பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இப்போது தமிழகத்தை நோக்கி அமித் ஷாவின் பார்வை திரும்பியிருக்கிறது. உண்மையில் அமித் ஷாவின் தமிழக வருகையை ஆளுங்கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க என இரண்டுமே உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

இது குறித்து பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது ``அமித் ஷாவின் தமிழக வருகை அரசியல் நோக்கத்துக்காக இல்லை. ஆனால், இந்த வருகைக்குப் பிறகு தமிழக அரசியலில் சில மாற்றங்களை பா.ஜ.க ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். அ.தி.மு.க-பா.ஜ.க இடையேயான கூட்டணிக்குள் இப்போது சிறிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மை. அ.தி.மு.க தலைமைகளிடத்தில் எங்கள் கூட்டணியைக் கழற்றிவிடும் பேச்சுகள் உள்ளன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக நாங்கள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம். இதைப் பற்றியெல்லாம் அமித் ஷாவுடன் மாநில நிர்வாகிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பேசப்படவிருக்கிறது.

மேலும், வேல் யாத்திரையால் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டிருக்கும் இமேஜ் குறித்தும் ஆலோசனை நடத்தப்படவிருக்கிறது. அமித் ஷாவின் இந்தப் பயணத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க மேற்கொள்ள வேண்டிய அடிப்படைப் பணிகள் பற்றி மட்டுமே பேசப்படும். பிற விவகாரங்களை டெல்லி மேலிடம் முடிவு செய்து, அதன் பிறகு அடுத்த மாதம் அமித் ஷா தமிழகம் வரும்போது முடிவு செய்யப்படும். அப்போது கூட்டணி உட்பட அனைத்தும் முடிவாகிவிடும்” என்கிறார்கள்.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

அமித் ஷாவின் இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசுமுறைப் பயணமாகவே இருக்கும் என்கிறார்கள். ``முதலில் ராஜ்பவனில் அவர் தங்கவே முடிவாகியிருந்தது. ஆனால், டெல்லியிலிருந்து ஹோட்டல் புக் செய்யுமாறு வந்த உத்தரவைத் தொடர்ந்து லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் அமித் ஷாவைத் தங்கவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. மூன்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதோடு பா.ஜ.க-வின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, ஆளுநருடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் ராஜ்பவனில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறாது. இதுதான் அமித் ஷாவின் பயணத் திட்டம்’’ என்கிறார்கள்.

`அழகிரி தமிழகத்தின் ஒவைசியா... பின்னணியில் பா.ஜ.க?’ - தனிக்கட்சி தகவலால் தகிக்கும் மதுரை

அமித் ஷாவின் பயணத்தை அ.தி.மு.க தரப்பு கொஞ்சம் அச்சத்துடனேயே பார்க்கிறது. ஏற்கெனவே கடந்த மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிப் பயணம் செய்தபோது அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டவர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துப் பல விவகாரங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் பலர் மீதும் மத்திய அரசின் பார்வை இருந்துவருகிறது. ஒவ்வோர் அமைச்சரின் செயல்பாடுகளையும் மத்திய உளவுத்துறை தொடர்ந்து நோட் செய்துவருகிறது.

வருமான வரித்துறை, நிதித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்தாலும், அமித் ஷாவின் கண்ணசைவில்தான் அதன் செயல்பாடுகள் இருக்கின்றன என்ற பேச்சும் இருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான போக்கை அ.தி.மு.க கையில் எடுத்திருப்பதால், அமித் ஷாவின் அக்னிப் பார்வை தங்கள் மீது பட்டுவிடுமோ என்கிற அச்சம் அ.தி.மு.க-வில் இருக்கிறது. அமித் ஷாவின் தமிழக வருகை உறுதியானதுமே, முதல்வர் அலுவலகத்திலிருந்து அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டதன் பின்னணியும் இதுதான்.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

மற்றொருபுறம் மு.க.அழகிரியுடன் ஏற்கெனவே டெல்லி பா.ஜ.க தலைமையிலிருந்து ஒருவர் தொடர்புகொண்டு பேசியிருந்தார். ரஜினி மூலமும் பா.ஜ.க-வுக்கு வரச் சொல்லி அழுத்தம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அமித் ஷா வருகைக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் அழகிரி, தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசவிருக்கிறார். இது தி.மு.க தரப்புக்கு கிலியை ஏற்படுத்தும். இப்படி இரண்டு கட்சிகளுக்குமே அமித் ஷா வருகை அச்சமாகவே இருக்கலாம். ஆனால், அமித் ஷா தரப்பில் இந்த வருகையை முன்வைத்து எந்தப் பெரிய திட்டமும் இல்லை. வழக்கமான ஆலோசனை, அரசு நிகழ்ச்சி என்றே இந்த வருகையைத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு மாநிலத்துக்குச் சென்றால் அந்த மாநிலத்தின் அரசியல் களத்தை எளிதாக கிரகித்துக்கொள்ளும் பக்குவம் உடையவர் அமித் ஷா.

அமித் ஷாவின் அரசியல் கணக்குகளை ஆராய்ந்தால் முதலில் ஒரு மாநிலத்துக்கு சாதாரண விசிட் செல்வார். அதன் பிறகு அந்த மாநிலத்தில் பா.ஜ.க-வைப் பலப்படுத்த, நிர்வாகிகள் மாற்றத்தை மேற்கொள்வார். மூன்றாவதாக, தங்களது கூட்டணியை வலுப்படுத்தி அசுர பலத்தோடு தேர்தலைச் சந்திப்பார். இந்த முறையைத் தமிழகத்திலும் அவர் கையாளுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக பா.ஜ.க-விடம் இருக்கிறது. அமித் ஷாவின் வருகையை வைத்து ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களமும் மாற்றமடைந்துவிடும் என்று பா.ஜ.க நினைக்கிறது. அது வடமாநிலங்களுக்கு ஒத்துவரும். தமிழகத்திற்கு ஒத்து வராது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அடுத்த கட்டுரைக்கு