நாட்டில் இந்தி பேசாத மாநிலங்களில் அம்மொழி திணிக்கப்படுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், ``நம் நாட்டில் பல மொழிகள் பேசப்பட்டாலும், அவையாவும், உணர்ச்சிகள் அடிப்படையில் ஒன்று. உணர்ச்சிகளின் அடிப்படையில் நாம் ஒன்று கூடியிருக்கிறோம்" என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று கூறியுள்ளார்.
அகமதாபாத்தில், குஜராத் அறிவுக் கூட்டமைப்பில் நேற்று நடைபெற்ற, எழுத்தாளர் ரஜத் குமார் கர் எழுதிய, `அனன்யா ஜகன்னாத் அனுபூதிமா' என்ற ஒடியா மொழி புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் பேசிய, அவர், ``இந்தியாவில் 3,800-க்கும் மேற்பட்ட பேச்சுவழக்குகள் வழக்கத்தில் இருக்கிறது. ஒவ்வொரு மொழியும் இங்கு வெவ்வேறு வழிகளில் பேசப்படுகிறது. இந்தியாவைப்போல் வேறு எந்த நாடும் இல்லை. நீங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டுமென்றால், நீங்கள் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்று பிற நாட்டினர் கூறுவார்கள். உண்மையில், அப்படியிருக்க வேண்டிய அவசியமில்லை.

ஏனெனில், இந்தியாவில் ஒற்றுமை என்பது பலவாறாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக நாம் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறுகிறோம். ஆனால் இந்தியாவில் ஒற்றுமையில், வேற்றுமைகள் உள்ளன என்று நான் கூறுவேன். இந்தியாவின் ஒற்றுமைக்கு ஒரே மாதிரியான கலாசாரம், மொழி, மதம் போன்றவை தேவையில்லை. இந்தியா உருவாவதற்கு மொழி, கலாச்சாரம் அல்லது மதம் ஆகியவற்றில் ஒருமைப்பாடு என்பது ஒருபோதும் அடித்தளமாக இல்லை" கூறினார்.
தொடர்ந்து பேசிய மோகன் பகவத், ``நம் நாட்டில் பல மொழிகள் பேசப்பட்டாலும், அவையாவும், உணர்ச்சிகள் அடிப்படையில் ஒன்று. உணர்ச்சிகளின் அடிப்படையில் நாம் ஒன்று கூடியிருக்கிறோம்" என்றும் கூறினார்.
அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் ஆங்கிலத்துக்கு பதிலாக, இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகளில் கிளம்பியதையடுத்து, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்திய அரசின் மீது எழத்தொடங்கியது குறிப்பிடத்தக்கது.